Tuesday, November 6, 2012

கனடா எனது பார்வையில்!


என் நீண்ட பயணத்தின் முடிவில் நான் வந்து சேர்ந்த இடம் கனடா. மிகவும் அழகான நாடு. கனடா ஒரு பல கலாச்சார நாடு. கனடாவின் பூர்விக குடியினர் என்று இருப்பவர்கள் இங்கு  மிக மிக குறைவு. பல நாட்டு பல இனத்து மக்களையும் நீங்கள் இங்கு காணலாம். இங்கு இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்களை பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் பலவருடங்களுக்கு முன்பே இவ்வாறு யோசித்து கட்டினார்கள் என்றே தோன்றுகிறது . நம் நாட்டிலோ சற்று தலை கீழ் தான். இப்பொழுது அதை பற்றி இங்கு வேண்டாம். கனடா மிகவும் நேர்த்தியாக மக்கள் நலத்திட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்றும் நாடு. பார்த்தவுடன் பிடித்துபோகும் நாடு தான் கனடா. இந்த பதிவு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ தொகுப்பே.

வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும், தேவையான பொருட்கள் வாங்குவதிலும் முதல் சில நாட்கள் ஓடி போய் விட்டது. ஒரு விஷயம் இங்கு சொல்லியே ஆக வேண்டும், பெரும்பாலான ஆண்கள் சொந்த ஊரில் எப்படியோ தெரியவில்லை ஆனால் அயல் நாட்டிற்கு வந்தபிறகு அவர்கள் இல்லத்தரசிகளுக்கு  உதவி செய்வதில் எள்ளளவும் தயங்குவதில்லை. இதை  நான் என் குடும்பத்தை மட்டும் வைத்து சொல்லவில்லை. என்னை சுற்றி இருக்கும் என் தோழிகளின் குடும்பங்களை வைத்தும் தான் சொல்கிறேன். அதற்காவே ஆண்களுக்கு ஒரு சல்யுட்.

அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் சில விசயங்கள் நமக்கு வினோதமாகவே இருக்கும். அவற்றை கற்று கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்றுகொள்ளும் பொழுது ஏற்படும் அனுபங்களை சொல்லவேண்டும் என்றால் எழுதி கொண்டே போகலாம். எனக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை மட்டும் இங்கு பதிகிறேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆன பிறகு மதியம் நானும் என் பையனும் மட்டும் வீட்டில் இருந்தோம். திடீர் என்று பயர் அலாரம் அடிக்க தொடங்கியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கணவரை செல்பேசியில் அழைத்தேன். நாம் தேவைக்கு அழைக்கும் பொழுது தானே நம் வீட்டில் உள்ளவர்கள் மீட்டிங்கில் இருப்பார்கள். போன் எடுக்கவில்லை. கதவை திறந்தால் என்னை தவிர யாருமே வெளியில் இல்லை. எனக்கும் என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் புரியவில்லை.

நம்மூரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொழுது சொல்லி கொடுத்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. லிப்ட் பயன்படுத்த கூடாது, உடனே வெளியில் செல்ல வேண்டும் என்று எல்லாம் மனதில் வந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது, ஏன் நம்மை தவிர யாருமே வெளியில் வரவில்லை என்று. ஒரு வழியாக என் பையனையும் தூக்கிக் கொண்டு பல மாடி படிகள் இறங்கி வந்து கீழே பார்த்தால் கொஞ்சம் நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடா, நல்ல வேலை இங்காவது ஆட்கள் இருக்கிறார்களே என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன். பின்பு தான் தெரிந்தது பயர் அலாரம் அடித்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை. அதனால் தான் அவர்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு தான் என் கணவரின் அழைப்பு வந்தது. நான் நடந்ததை சொன்னால் அந்த பக்கம் ஒரே சிரிப்பு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பின்பு தான் தெரிந்தது இங்கு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஒரு வீட்டில் இருந்து சமைக்கும் பொழுதோ இல்லை எதில் இருந்தோ புகை வந்தாலும் ஸ்மோக் அலாரம் அடிக்கும். அதை குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் செல்லும். அங்கு தகவல் சென்ற உடனே அபார்ட்மென்டில் உள்ள எல்லா வீடுகளிலும் இதே போல் அலாரம் அடிக்கும். பெரும்பாலும் இதே போல் அடிப்பது எல்லாம் “பால்ஸ்” அலாரம் ஆகவே இருக்கும். இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் எல்லாம் மரத்தினை கொண்டு கட்டுவதால் இது எல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று தெரிந்து கொண்டேன். தீயணைப்பு வீர்கள் சொல்லாமல் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என்பதையும் சொன்னார் என் கணவர். அவருக்கோ சிரிப்பு, எனக்கோ இத்தனை மாடி பையனை தூக்கி கொண்டு இறங்கி வந்ததை நினைத்தால் கோபம் தான் வந்தது. இது போல பல சம்பவங்கள் நமக்கு அனுபவ பாடமாகவே இருக்கிறது.

எல்லோருக்கும் அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் நவீன சாதனங்களை எல்லாம்  பார்த்து கொஞ்சம் மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அது போல் தான் எனக்கும். உதாரணத்திற்கு துணி துவைப்பது. இங்கு வந்தவுடன் துணி துவைப்பது எல்லாம் எந்திரம் மூலம் என்றவுடன் உண்மையை சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது. துணி துவைப்பது இலவசம் என்று நினைத்தே சென்றேன். அங்கு போன பிறகு தான் தெரிந்தது அவை எல்லாமே டாலர்கள் என்று. ஒரு “லோடு”  துணிகளை துவைத்து காய வைப்பதற்கு நாம் செலவு செய்ய வேண்டியது 4.1 டாலர்கள். நம் இந்தியா மதிப்பிற்கு கணக்கு பார்க்கும் பொழுது நாமே நம் வீட்டிலே ஏன் துவைக்க கூடாது என்று தோன்றியது. இதில் என்ன கொடுமை என்றால் நாம் வாங்கும்  சோப்பு பவுடர்கள் இங்கு கிடைக்கும் துணிகளை துவைப்பதற்கு என்று தயார் செய்யப்பட்டது. நம் துணிகளுக்கு அது ஒத்து வராது. துணிகள்  எல்லாம் பாழாகிவிடும். அல்லது ஒரு துணியின் நிறம், இன்னொரு துணி மேல் படிந்து பெரும்பாலும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இவ்வளவு பணம் செலவு செஞ்சிட்டு துணியும் பாழாகணுமா இதற்கு வீட்டிலே துவைக்கலாமே என்றே தோன்றும்.

இன்னொன்று இங்கு இருக்கும் தட்ப வெட்ப நிலைக்கு நம்மால் துணிகளை வீட்டில் துவைத்து காய வைப்பது என்பது நம் ஊரை போல் எளிதில்லை. நம் ஊர்களை போல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் துணிகளை கயிறு கட்டி காயவும் வைக்க முடியாது. கனடாவில் வெயில் பார்ப்பதும், வெயிலின் தாக்கத்தை உணர்வதும் வருடத்தில் வெறும் மூன்று முதல் நான்கு மாதங்கள் தான். பெரும்பாலும் வெப்பநிலை ஒற்றை இலக்கத்திலும், குளிர்காலத்தில் மைனஸ் பதினைந்துக்கும் கீழே தான் இருக்கும். இதில் துணிகளை எங்கு நாமே துவைத்து காயவைப்பது.

இங்கு நம் நாட்டில் உள்ளது போல் பணிப்பெண் வைத்து கொள்ளும் வழக்கம் இல்லை, ஒரு வேலைக்கு என்று நீங்கள் அடுத்தவரை நாடினால் ஒரு கணிசமான பணம் எடுத்து வைத்தால் மட்டுமே முடியும். எல்லா வேலைகளையும் நாமே தான் செய்ய வேண்டும். இங்கு வந்த பிறகு எனக்கு பெரிதும் கடினமாக இருந்த வேலை இஸ்த்திரி பண்ணுவது. பல காலங்களாய் வெளியில் இஸ்த்திரி செய்து பழக்கப்பட்ட எனக்கு அந்த வேலை செய்வது மிகவும் சிரமமாய் இருந்தது. குழந்தை வைத்து கொண்டு இந்த மாதிரியான வேலைகளை தனியாக செய்வதும் இங்கு கொஞ்சம் சிரமமே. ஏதேனும் அசம்பாவிதம் நடந்து நாம் மருத்துவனைக்கு அழைத்து சென்று, அவர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் அளிப்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்,  நம் குழந்தைகளை  அரசாங்கமே தங்கள் பாதுகாப்பில் எடுத்துகொள்ளும். அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை வரும்வரை குழந்தைகளை தரமாட்டார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பில் அரசாங்கம் பெரிதும் கவனம் செலுத்துகிறது. நீங்கள் கேட்கலாம் அப்போ குழந்தை பராமரிப்பில் பல தவறுகள் நடக்கிறதே என்று. உண்மை தான். அது பெரும்பாலும் அரசாங்கம் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் இடத்தில் தான் பெரும்பாலும் நடக்கிறது. பள்ளியிலே குழந்தைகளுக்கு பாதுக்காப்பாக இருப்பது பற்றி சொல்லித்தரப்படுகிறது. அவசர தேவைக்கு 911 எண்ணை அழைக்கும்படி சொல்லித்தருவார்கள். குழந்தைகள் 911 எண்ணை அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.

வேலை வாய்ப்பை பொருத்த வரை இங்கு எப்போது வேலை இருக்கும் எப்போது வேலை இருக்காது என்று சொல்ல முடியாது. பணிநீங்கம் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும். ணிநீக்கம் செய்யப்பட்டால் அரசாங்கமே சில வாரங்களுக்கு  ஊக்க தொகையாக அவர்கள் முன்னால் வாங்கிய சம்பளத்தின் நான்கில் ஒரு பங்கு தரும். அந்த காலகட்டத்திற்குள் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளவேண்டும். அதனால் இங்கு யாரும் இந்த வேலைக்கு தான் செல்வேன் அதற்கு செல்லமாட்டேன்  என்று சொல்ல முடியாது. எந்த துறை சேர்ந்தவர்களும் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். மருத்துவம் படித்தவர்கள் கூட டாக்ஸி ஓட்டுனராக பணி செய்வார்கள்.

இங்கு வருவதற்கு முன்பு வரை பனி எல்லாம் நான் சினிமாவில் பார்த்ததுதான். முதல் முதலில் பனி பெய்வதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாகவும் அழகாகவும் இருந்தது. ஒவ்வொரு பனி துகளிலும் இருக்கும் அந்த அழகிய வடிவத்தை ரசித்து ரசித்து பார்த்தேன். பனி பெய்து முடித்தவுடன் ஊரே பார்க்க மிக அழகாக இருக்கும். மொத்த ஊரும் வெண் போர்வை போர்த்தியது போல் இருக்கும். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான். பனி காலம் தான் இருக்கிறதிலே மிகவும் கொடுமையான நாட்கள். எல்லோரும் வீட்டிலே பலநாட்கள் அடைந்து கிடக்கும் தருணமும் அது தான். எப்படி அளவுக்கு மிஞ்சினால் நஞ்சோ அது போல் தான் பனி காலம் இங்கு. பனி காலத்தில் பகல் பொழுதின் நேரம் மிகவும் குறைவு. பனிகாலத்தில் வெளிச்சம் என்பது மிக குறைவு. வீட்டிலும் எப்பொழுதும் மின் விளக்கு இல்லாமல் இருக்க முடியாது.

“டிபெண்டண்டாக” கணவனை சார்ந்து வரும் பெண்கள் பெரிதும் பாதிப்பு அடைவது இந்த காலத்தில் தான். தனிமை அவர்களை பெரிதும் பாதிக்கும். மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்து வருபவர்களுக்கே  குளிர் காலத்தில் ஏற்படும் இந்த தனிமை மன அழுத்ததை கொண்டு வரும். அவர்களுக்கு இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கவுன்சலிங் கூட நடக்கும். அவர்களுக்கே இந்த கவுன்சலிங் தேவை என்றால் நம்மை போன்றவர்களுக்கு குளிர் காலம் எவ்வளவு சிரமம் என்று பார்த்து கொள்ளுங்கள்.

நான் கல்லூரி முடிக்கும் வரை எனக்கு பாகிஸ்தான் என்றால் என் எதிரி நாடு என்று தான் நினைத்து இருந்தேன். பின்பு அந்த எண்ணத்தில் மாற்றம் வந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒரு பாகிஸ்தானியரிடமும் நான் பழகியது இல்லை. கனடா வந்த பிறகு எனக்கு அவர்களிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்ன அழகான மக்கள் அவர்கள். இவர்களை எப்படி நாம் எதிரியாக பார்த்தோம்? நான் பல நாட்கள் என்னை நானே திட்டிய நாட்களும் உண்டு. மிகவும் தோழமையுடன் பழகும் குணம் கொண்டவர்கள் அவர்கள். என் மகனை பள்ளிக்கு கூட்டி செல்பவர் ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. என் மகனை தன் மகனாக பார்க்கும் குணம் உள்ளவர். குழந்தைகளிடம் மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்தையும் தன் குடும்பமாக பார்க்கும் எண்ணம் உள்ளவர். அவர் மட்டும் இல்லை என் எதிர் வீட்டு தோழியும் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான். இவ்வளவு அன்பான மக்களை, மிகவும் பவர்புல் மீடியா ஆன சினிமா, டிவி மற்றும் அரசியல்வாதிகள் எப்படி நம்மை எதிரிபோல் பார்க்க வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

கனடா வந்த பிறகு எனக்கு சில வருத்தங்களும் உண்டு. அதுவும் நம் இந்திய தமிழர்களிடம் தான். அயல் நாட்டில் நம் மக்களை பார்க்கும் பொழுது நம்மை மீறிய ஒரு சந்தோசத்தில் அவர்களிடம் பேசுவதற்கு ஆவலாய் ஓடுவோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்ததும், பார்க்காமல் போவதை பார்க்கும் பொழுதும், நாம் ஏதேனும் பேச முயலும் பொழுது அவர்கள் பதில் சொல்லாமல் நம்மை புறக்கணித்து செல்வதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏன் நம் மக்களே நம்மை புறக்கணித்து செல்கிறார்கள் என்று தோன்றும். எங்கே நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை பார்க்காமல் புறக்கணித்து ஓடுகிறார்கள் நம் தமிழர்கள். ஒரே நிறுவனத்தில் வேலை செல்லும் நபர்கள் மட்டும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வது உண்டு. அங்கு குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு வாங்கி இருக்கும் நம் இந்திய தமிழர்கள் தான் நம் மக்களை பார்த்த‌‌தும் தலை தெறிக்க ஓடுவதும் எந்த ஒரு உதவியும் செய்து கொடுக்க முன்வராதவர்கள்.

ஒருத்தர் தாய் மொழி மறப்பது என்பது தன் தாயை மறப்பது போல் தான். நான் கனடாவில் பார்த்து அதிர்ந்த மற்றொரு விசயம் நம் இந்திய தமிழர்கள் நம் தாய் மொழியை மறந்து போனது தான். ஆங்கில மோகம் இன்னும் நம் இந்திய தமிழர்களுக்கு குறையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது ஏன் என்று தெரியவில்லை தாய் மொழியை மறப்பது என்பது நம் இந்திய தமிழர்கள் மட்டுமே . ஒரு வட இந்திய குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் அவர்கள் தாய் மொழியான பஞ்சாபியோ, குஜராத்தியோ. ஹிந்தியோ தான் பேசுகிறார்கள். ஆனால் நம் இந்திய தமிழர்கள் தான் தங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதை நானே பல முறை இங்கு பார்த்திருக்கிறேன்.

ஒரு வட இந்திய குடும்பம் தங்கள் குழந்தைகளிடம் அவர்களின் தாய் மொழியில் தான் உரையாடுகிறார்கள். குழந்தைகளும் அவர்களின் தாய் மொழியில் தான் தங்கள் பெற்றோர்களிடம் உரையாடுகிறார்கள். இதுவே ஒரு இந்திய தமிழ் குடும்பம் என்றால் தங்கள் குழந்தையிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள். பின்பு எப்படி குழந்தைகள் தாய் மொழியில் பேசுவார்கள். இதை கண்டிப்பாக நம்மவர்கள் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும். நம் பிள்ளைகளும் தாய் மொழியை மறக்காமல் பேசுவார்கள். இதுவே இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் நிச்சயம் தமிழில் தான் உரையாடுவார்கள். அவர்களின் தமிழ் உரையாடல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கும். இலங்கை தமிழர்கள் நம் பேச்சை கேட்பதற்கும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலான நம் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தபடவேண்டிய விசயம்.

இந்த சின்ன சின்ன நெருடல்களை தவிர்த்து பார்த்தால் கனடா மிக அழகான நாடு. எல்லோருக்கும் பிடிக்கும். இருப்பினும், பண்டிகை காலங்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றை உறவுமுறைகளுடன், நட்புறவுகள் ஆகியோருடன் சேர்ந்து பகிர்தலை இழக்கிறோம். அவர்களது இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்கெடுக்க முடிவதில்லை. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருவதில்லையே!

Sunday, September 23, 2012

என் அயல் நாட்டு வாழ்க்கைக்கான முதலடி!


இந்த பதிவை எழுத ஒரு நாளும் நான் யோசித்ததில்லை. சில நண்பர்கள் கூறிய வார்த்தைகள் தான் என்னை இந்த பதிவை எழுத வைத்தது. முதன்முதலாக அயல் நாட்டிற்கு செல்வதற்கு முன்பும், செல்லும்போதும் ஏற்பட்ட அனுபவமே இந்த பதிவு.

வெளி நாட்டிற்கு செல்ல விசா வாங்குவது எல்லாருக்கும் கடினமான வேலை தான். அதுவும் கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது, தன்னந்தனியாக விசா எடுப்பது அதை விட கடினமானது. கணவன் தகவல் தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பதால்  மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் தான் சார்பு விசா (Dependent Visa) எடுத்து  வர முடியும். ஆனால் அந்த சார்பு விசா எடுத்து வர எவ்வளவோ கட்டங்களை தாண்டி தான் வர வேண்டும். அதிலும் மனைவி வேலை பார்ப்பவராய் இருந்தால் அதோகதி தான். நானும் இந்த கட்டங்களை எல்லாம் தாண்டி வந்தவள் தான். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்த பதிவு.

ஐடி துறையில் ஒருத்தருக்கு வெளி நாடு வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை தான். அவ்வாறு கிடைத்த பிறகு பெரும்பாலானவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை தங்களுடன் அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால் கணவன் தனியாக வந்த பிறகு மனைவி தன் குழந்தைகளோடு வருவது என்றால் பெண்களுக்கு பிரச்சனை தான். கணவர் சென்ற பிறகு விசா வாங்க மனைவி தனியாக அலைய வேண்டும். அந்த நேரம் கணவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எதற்கும் முறையாக ஆவணங்கள் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் கேட்டதை எல்லாம் எடுத்து போன பிறகும், அதை கொண்டுவரவில்லையா? இந்த பேப்பர் இல்லை, எடுத்து கொண்டு வாருங்கள் என குறைந்தது மூன்று முறையாவது திருப்பி அனுப்புவார்கள்.

வேலைக்கு செல்லும் மனைவிமார்களுக்கு அதிக சிரமம் தான். வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன் வேலைகளையும் முடித்து இதற்காகவும் அலைதல் என்பது தேவை இல்லாத ஒரு சுமையாகவே இருக்கும். விசா வாங்குவதற்குள் அவர்களை  கம்பெனிகள் அலைய விடுவதை பார்த்தால், இப்படி வெளிநாட்டுக்கு கண்டிப்பாக போகத்தான் வேண்டுமா? என்று கூட தோன்றும். நான் இதை அனுபவித்து வந்தவள் தான். என் நிறுவனம் சென்னையில் ஒரு மூலையில், என் கணவர் நிறுவனமோ வேறு ஒரு பக்கம். இங்கும், அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வழியாக விசா கிடைத்தது. அதற்கு பிறகு மருத்துவ சோதனை என்று சொல்வார்கள். இதுவும் பெருஞ்சோதனையாக இருக்கும். நாம் வேலைக்கு விடுப்பு எடுத்து கொண்டு குழந்தையையும் தூக்கி கொண்டு மருத்துவ சோதனைகளையும் முடித்து கையில் டிக்கெட் கிடைக்கும் போது அப்பாடா என்று இருக்கும்.

இதன் நடுவில் நாம பேக்கிங் வேறு செய்யவேண்டும். கணவருக்கு தேவையான பொருட்கள், விருப்பமான பொருட்கள், குழந்தைக்கு தேவையானது, அப்பறம் மசாலா பொடி என்று சமையலுக்கு தேவையான பொருட்கள்  எல்லாம் வீட்டிலே அரைத்தோ, வெளியில் வாங்கியோ பெட்டியில் அடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், கணவரின் நண்பருக்கோ, அவரோடு வேலை பார்க்கும் நபருக்கோ சாமான்கள் நாம் வாங்க வேண்டும் அல்லது யாராவது கொண்டு தருவார்கள். அதையும் வாங்கி பெட்டியில் அடுக்கி முடிக்கவேண்டும். இப்படியே ஏர்போர்ட் கிளம்பும் கடைசி நிமிடம் வரை பேக்கிங் நடக்கும்.

அடுத்ததாக கொண்டு வந்த பெட்டிகள் எல்லாவற்றையும் ஏர்போர்ட்டில் செக்கின் செய்து போர்டிங் பாஸ் வாங்க வேண்டும். செக்கின் செய்யும்போது தான் அடுத்த தலைவலி. என்னதான் வீட்டில் எடை போட்டு பார்த்திருந்தாலும் இங்கு “ஓவர் வெயிட்” என்று சொல்லுவார்கள். அதிக எடைக்கு பணம் கட்டுங்கள் இல்லையென்றால் எடையை குறையுங்கள் என்பார்கள். எதை எடுப்பது, எதை விடுவது என தெரியாமல், அங்கே இங்கே என்று எடையை சமாளித்து, செக்கின் செய்து, டிக்கெட் வாங்குவதற்குள் நாலு கடல் நாலு மலை தாண்டி வந்த மாதிரி இருக்கும். இது ஒருபுறமிருக்க நடுவில் நம் வீட்டு வாண்டுகளிடம் இங்கே நில், அங்கே போகாதே என மல்லுகட்ட வேண்டும்.

அடுத்ததாக பிரிவு உபசாரம். நாமோ கணவரை பார்க்க போகிற சந்தோசத்தில் இருப்போம். குழந்தையோ தூக்கம் கெட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கும். நம் உறவுகளோ சோகமாகவும், கண்ணீருடன் இருப்பார்கள். அதற்குள் செக்யூரிட்டி செக்கிங்கு அழைப்பு வரும். எல்லோருக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு போக வேண்டும். செக்யூரிட்டி செக்கிங் செய்கிற இடத்தில் நம் குழந்தைகளுக்கோ என்ன செய்கிறார்கள் என புரியாமல், ஒத்துழைப்பு தராமல் அழுது கூப்பாடு போடுவார்கள். இதை எல்லாம் சமாளித்து குழந்தைகளையும் விமானத்துக்கு கூட்டி சென்று நம் இடத்தில் உட்காருவதற்குள் நமக்கு உயிர் போய் உயிர் வரும். அப்பாடா என்று பெருமூச்சு விடுவோம், அடுத்த வரப்போகும் பிரச்சனைகள் தெரியாமல்!

விமானத்திற்குள் நுழையும் வரை தான் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என கற்பனைகள் இருக்கும். நுழைந்த பிறகு தான் “ச்சீ இவ்வளவு தானா” என்றிருக்கும். நமது சொகுசு பேருந்துகளில் கூட இடம் தாராளமாய் இருக்கும். ஆனால் விமானத்திற்குள் அந்த அளவிற்கு கூட இடம் இருக்காது. இத்தனைக்கும் இது சர்வதேச விமானமாம்! இருக்கையை பார்த்தவுடன், “ஐயோ இந்த சீட்டிலா இன்னும் ஒன்பது மணிநேரம் உட்கார்ந்து போக வேண்டும்” என மலைப்பாக இருக்கும். விமானத்தில் ஒரு விதிமுறை இருக்கிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும்வரை அவர்களுக்கு தனி இருக்கை கிடையாது. அவர்களை நம் மடியில் தான் வைத்து கொள்ளவேண்டும். பொதுவாக வடஅமெரிக்கா செல்லும் எல்லாம் விமானங்களும் நடுராத்திரி தான் கிளம்பும். கண்டிப்பாக ஒரு இடத்தில் இடைநிறுத்தம் (Transit) இருக்கும். நான் சென்ற விமானமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. எனக்கு ட்ரான்சிட் புருசேல்சில் (பெல்ஜியம் தலை நகரம்). எனது முதல் விமானப் பயணம் ஒன்பதரை மணி நேரம். விமானம் கிளம்பும் நேரம் நடுராத்திரி ஒன்றரை மணி.

என் மகனை மடியில் வைத்து கொண்டு ஒரு வழியாக அந்த சீட்டில் உட்கார்ந்து காபின் க்ருவில் சொன்னதை போல் சீட் பெல்ட் போட்டு அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஆலோசனைகள் எல்லாம் சின்ன பிள்ளை போல் கேட்டோம். இங்கு ஏன் காபின் க்ருவென்று சொன்னேன் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். எனக்கு விமானத்தில் ஏறி உட்காரும் வரை விமான பணிப்பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். விமானத்தில் பணிஆண்கள் கூட இருப்பார்கள் என்பது அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது.

பாதுகாப்பு தகவல் தரும்போதே கேப்டன் பெயரும், மற்றும் அவரின் உதவியாளர்கள் பற்றியும் கூறிவிடுவார்கள். அந்த நடு இரவில் மெதுவாய் விமானம் புறப்பட ஆயத்தமானது. உண்மையில் அந்த இரவில் நம் சென்னை பார்க்க எவ்வளவு அழகு தெரியுமா? கொள்ளை அழகாக இருந்தது. ஊர் முழுவதும் மின் விளக்கு ஒளிமயமாக இருந்தது. அருமையான காட்சி அது. எனக்கிருந்த பதட்டத்தில் புகைப்படம் எடுக்க தோன்றவில்லை. விமானம் மேலேறும் போது (Take Off) குழந்தைகளுக்கு காது வலி வரும் என்றும், குழந்தைகளை அணைத்து கொண்டு காதையும் பொத்திக்கொள்ள வேண்டும் என்றும் பணிப்பெண்கள் சொல்லிகொடுத்தார்கள். அவ்வாறே செய்ததால்,  என் மகன் அழாமல் இருந்தான். இந்த அணைத்தலில் அவனும் தூங்கிவிட்டான். விமானம் மேலேறிய கொஞ்ச நேரத்தில் சாப்பாடு தரப்பட்டது. இரவு ஒழுங்காக சாப்பிடாததால் பசி இருக்கவே செய்தது. எந்த குழந்தைகளும் ஒழுங்காக சாப்பிடவில்லை. அப்படியே தூங்கிவிட்டார்கள். என் அருகில் லண்டன் செல்லும் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். பையனை மடியில் வைத்தே சாப்பாடும் முடிந்தது. இப்படியாக என் முதல் விமான பயணம் துவங்கியது.

நானும் உறங்கிவிட்டேன். இரவு இப்படியாக கழிந்தது. மறுநாள் காலை விடியும் போது விமானம் மெதுவாக புருசெல்ஸ் (பெல்ஜியம் தலைநகர்) நோக்கி சென்று கொண்டு இருந்தது. காலை உணவு தரப்பட்டது. குழந்தைகள் வழக்கம் போல் சாப்பிடாமல் அடம்பிடித்தார்கள். ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு குழந்தையாவது சாப்பிடாமல் அழுதது. இன்னும் எவ்வளவு நேரத்தில் விமானம் தரையிறங்கும் என தோன்ற ஆரம்பித்தது.

மெதுவாக, விமானம் தரையிறங்குவதை பற்றிய அறிவிப்புகள் வரதொடங்கியது. விமானம் புருசெல்சில் தரையிறங்கியது. அங்கு இரண்டு மணி நேரம் மட்டும் தான் இடைவெளி நேரம். வாழ்கையில் முதல் முதலில் ஒரு வெளி நாட்டு விமான நிலையத்தில் நாங்கள் இருந்தோம். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் செக்கிங் கொஞ்சம் அதிகம் தான். நான் எனது பதினைந்து மாத பையனை வைத்து கொண்டு, என் சுமைகளையும் வைத்து கஷ்டப்படுவதை பார்த்த ஒரு தோழி தன் மகன் அமர்ந்து இருந்த ஸ்ட்ரோலாரை  எனக்கு தந்து உதவி செய்தார். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் கொஞ்சம் அதிகமான தூரம் நடக்க வேண்டி இருந்தது. எனக்கு உதவிய தோழியும் கனடா தான் வருவதாக சொன்னார். அப்பாடா ஒருத்தர் நமக்கு துணைக்கு இருக்கிறார் என்று சந்தோசமாக இருந்தது. அவர் கனடாவில் செட்டில் ஆனவர். விடுமுறைக்கு வந்துவிட்டு திரும்பி வருவதாக சொன்னார். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் செக்கிங் முடியவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வயதானவர்களுக்கு என்று வரிசையில் நிற்க முன்னுரிமை இருந்தது. பின்பு எங்களது அடுத்த விமான பயணம் துவங்கியது.

இவ்வளவு மோசமாக அமையும் என்று நினைத்தும் பார்க்காத பயணம் எனது அடுத்த விமான பயணம். முதல் விமானம் இரவில் தொடங்கியதால் குழந்தைகள் எல்லாம் தூங்கிவிட்டார்கள். ஆனால் அடுத்த பயணம் முழுவதும் பகல் பொழுதில். விமானம் முழுவதும் ஒரு கல்யாண வீடு போல் தான் இருந்தது. எந்த குழந்தையும் தங்கள் இருக்கையில் அமரவில்லை. குழந்தை தவழும் வயது வரை என்றால் மடியில் வைத்து சமாளிக்கலாம். ஒரு வேளை இரண்டு வயதான குழந்தைகள் என்றால் அவர்களை இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் போட்டு ஏதேனும் படம் போட்டு காண்பிக்கலாம். ஆனால் இந்த இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் எல்லாம் விமானத்தை தலை கீழாக்கி கொண்டு இருந்தார்கள். காபின் க்ரூ நபர்களை எந்த வேலைகளயும் செய்ய விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தினுசாக நடந்து கொண்டு இருந்தார்கள். ஒரே அழுகை, சண்டை, சாப்பிட மாட்டேன் என்று அடம், தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அழுகை என்று விமானம் முழுவதும் களேபரமாக இருந்தது.

குழந்தைகளை சமாளிக்க முடியாமல் என்னை போன்ற அம்மாக்கள் என்ன செய்வது என்று புரியாமல் கண்களில் நீரை நிறைத்து கொண்டு தான் இருந்தோம். எப்போது கண்ணீர் துளிகள் வெளியில் வரும் என்ற நிலைமை தான். அந்த ஒன்பதரை மணி நேர பயணம் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாததாக குழந்தைகள் மாற்றினார்கள். ஐயோ, எப்போது விமானம் கனடாவில் தரை இறங்கும் என்று தலை சுற்ற ஆரம்பித்தது. ஒரு வழியாக விமானம் வெற்றிகரமாக டொரொன்டோவில் தரை இறங்கியது.

திடீர் என்று ஒரே குதூகலமாக ஆனது. அந்த ஒன்பதரை மணி நேர போர்களமான பயணம் கூட மறந்து போய் எப்பொழுது கணவரை பார்ப்போம் என்ற ஆவல் தான் அதற்கு காரணம். இமிகிரேசன் செக்கிங், விசா ஸ்டாம்பிங் செய்யும் கவுண்டருக்கு வந்தோம். பல கேள்விகளை கேட்டார்கள். ஒருவழியாக விசா ஸ்டாம்பிங் முடிந்தது. அங்கு இருக்கும் செக்யூரிட்டி எனக்கு உதவி செய்து என் சாமான்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து உதவினார்.

எனக்கும், என் மகனுக்கும் எங்களுக்காக காத்து கொண்டிருந்த என்னவரை பார்த்தவுடன் சந்தோசம். அவருக்கும் அதே நிலைமை தான். ஏன் என்றால் விமானம் ஒரு முப்பது நிமிடம் தாமதம். அதோடு  இமிகிரேசன்  செக்கிங்கில் ஆன தாமதம் எல்லாம் சேர்ந்து ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆகியது. அன்று எங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் ஏனென்றால் அன்றைய தினம் எங்களின் மூன்றாம் வருட திருமண நாள்!

என்னடா வெறும் பயணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறது இந்த பதிவு என நீங்கள் நினைக்கலாம். இப்பொழுது தானே “லேண்ட்” ஆகியிருக்கிறோம். மேலை நாட்டில் நமது வாழ்க்கை பற்றியும், நான் கற்றுகொண்டவைகளை பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, September 19, 2012

தொடுதல் - அறியாததும்! அறியவேண்டியதும்!!!

நண்பரிடம் உரையாடும் போது, பல வருடங்களுக்கு முன்னால் என் சொந்த ஊரில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. வெளி உலகத்தை இன்னும் அதிகமாக எட்டிப்பார்க்காத ஐந்து வயதே ஆன அந்த பெண் குழந்தையை ஒரு மிருகம் சிதைத்து கொன்ற நிகழ்வு இன்னும் என் மனதில் ஆறா வடுவாய் இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நம்மை சுற்றியும் தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன் நம்மில் சில பேர் கூட இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தலை கடந்து தான் வந்திருப்போம்.

ஒரு குழந்தையை பெற்று வளர்க்க ஒவ்வொரு பெற்றோர்களும் எவ்வளவு சிரமங்களையும், கஷ்டங்களையும் தாண்டி வருகிறோம். அவ்வாறாக வளர்க்கும் நம் குழந்தைகளை இந்த மாதிரியான நிகழ்வுகளில் இருந்து காப்பாற்ற நாம் சிறு சிறு விசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நண்பர்களே!

குழந்தைகளை பிடிக்காத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல் நாம் அந்த குழந்தையை கொஞ்சுவதற்கு முத்தங்களை தான் கொடுக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா குழந்தைகளுக்கும் முத்தங்களை பரிசாக வழங்கி, வளரும் அந்த பிஞ்சு மனதில் அவை அன்றாட வாழ்விற்கு தேவை என்பது போல ஆக்கிவிடுகிறோம். யார் முத்தம் கொடுத்தாலும் அந்த குழந்தையும் யதார்த்தமாய் அதை வாங்கி கொள்கிறது. இங்கு தான் பிரச்சனையின் ஆரம்ப கட்டம். குழந்தை தன் பெற்றோர்களை தவிர மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று நாம் சொல்லி தருவதில்லை, அதை பற்றி யாரும் யோசிப்பதும் இல்லை. இதனாலே பாதி பிரச்சனைகள் வருகிறது.

அந்த காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே என்று கூட நினைக்க தோன்றும். முன்பு நாம் பெரும்பாலும் கூட்டு குடும்பங்களாக  இருந்தோம். நம் குழந்தைகளை நம் பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள். நம்மில் பல பேர் நம் பாட்டி, தாத்தாவிடம் தான் வளர்ந்து இருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறோம். வேலை நிமித்தமாக  சொந்த ஊரினை விட்டு விட்டு வேறு எங்கோ வாழ்கிறோம். குழந்தைகளை "டேகேர்" அல்லது வீட்டில் தனியாக தான் இருக்கிறார்கள். இதுவே இந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக  இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து நம் குழந்தைகளை நாம் எப்படி காப்பற்றுவது?

நாம், நம் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? முதல் கட்டமாய் நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். குழந்தை அறியா வயதில் இருக்கும் போதே குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்களிடம் முத்தம் கொடுக்காதீர்கள் என்று சொல்லுங்கள். அப்படி சொல்வதில் தவறொன்றுமில்லை. நாம் குழந்தைகளை காக்க நாம் தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். இதை சொல்லும் போது நாம் நிறைய எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிதான் வரும். "இவங்க மட்டும் தான் குழந்தை பெத்து வளர்க்கிறார்களா?", "என்ன அதிசயமாக வளர்க்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசத்தான் செய்வார்கள். அதை எல்லாம் பொருட்படுத்த கூடாது.

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச, கற்று தர கூச்சப்படும் விசயம் "குட் டச்", "பேட் டச்". குழந்தைகளிடம் அவர்களின் இரண்டரை வயதில் இருந்தே யாரும் முத்தம் கொடுக்க கூடாது. முத்தம் கொடுக்க சொன்னாலோ, முத்தம் கேட்டாலோ தரமாட்டேன் என்று சொல்ல கற்று கொடுங்கள். யாரேனும் முத்தம் கொடுக்க முயன்றால் அம்மாவிடம், அல்லது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். முத்தம் மட்டும் இல்லை, குழந்தைகளிடம் அவர்களின் உடலில் எந்த பாகத்தையும் யாரையும் தொட அனுமதிக்க கூடாது என்பதையும்  சொல்லி கொடுங்கள். அதையும் மீறி யாரேனும் உங்களிடம் தவறாக   நடந்தாலோ அல்லது தவறாக நடக்க முயன்றால் எவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் தப்பிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுங்கள். குழந்தைகளுக்கு நான்கு வயது முதல் தற்காப்பு கலைகளையும் கற்று கொடுங்கள். முடிந்த வரை குழந்தைகளை யாரிடமும் தனியாக  விட்டு செல்லாதீர்கள். பெரும்பாலான குழந்தைகள் பாலியல் தொந்தரவை அனுபவிப்பது தெரிந்த மற்றும் உறவுமுறைகளிடம் தான். உங்களுக்கு நம்பகமான நபர்களை தவிர குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்லாதீர்கள்.

என் நண்பர் ஒருவரிடம் பேசும் வரை, பெண் குழந்தைகள் தான் அதிகம்  பாதிக்க  படுகிறார்கள் என நினைத்து இருந்தேன். ஆண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தான் நினைத்து இருந்தேன். அது  எவ்வளவு பெரிய  தவறு என்று பின்பு தான் தெரிந்தது. குழந்தைகளில் ஆண், பெண் என்று பாரபட்சம் இல்லாமல் எப்படி நாம் வளர்க்க வேண்டுமோ அதே போல் தான் இந்த விசயத்திலும் சொல்லித்தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஒரு விதமான பாதிப்பு என்றால் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவதோ வேறு விதமாக. சிறு வயதில் அவர்கள் எதிர்  கொள்ளும்  இந்த மாதிரியான  பிரச்சனைகளால் அவர்கள் மனதளவில், சிறு வயதில் இருந்தே பாதிக்கபட்டு வளரும்போதே, மற்ற ஆண்கள் மீதோ பெண்கள் மீதோ ஒரு வித வெறுப்பில் வளர்கிறார்கள். இதுவே அவர்கள் வளர்ந்த பிறகு பல தவறுகளுக்கு அடித்தளமாக மாறி விடுகிறது.

இவை அனைத்தையும் மீறி யாதேனும் தவறு நடந்தாலும் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் ஆதரவும், ஆதரவான வார்த்தைகளும் தான் அவர்களை அவற்றில் இருந்து வெளியில் கொண்டுவர  உதவும். நம்மில் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பராக பழகுவதில்லை. நண்பராக பழகாததால் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயக்கம்  கொள்கிறார்கள். பாலியல் தொந்தரவில் பாதிக்கப்படும் குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் வெளியில் சொல்ல கூடாது என்று மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு பயந்து குழந்தைகளும் இதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் குழந்தைகளிடம் கண்டிப்பாக ஒரு மாறுதலை நீங்கள் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு சோகத்துடன், தனிமையில் இருப்பார்கள்.  இந்த மாதிரி ஏதேனும் மாறுதலை உங்கள் குழந்தைகளிடம் கண்டால் அவர்களிடம் கோவம் கொள்ளாமல் ஒரு நண்பராக அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேளுங்கள்.

நாம் ஒரு நண்பராக பழகினால் மட்டுமே குழந்தைகளும் நம்மிடம் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் அவர்களின் பிரச்சனைகளை சொல்வார்கள். அவர்கள் சொல்லும் போது எந்தவித கோவத்தையும் அவர்களிடம் காட்டாமல், இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களுக்கு நாம் தான் தைரியம் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் இந்த பிரச்சனையில் இருந்தும் வெளியில் வர முடியும்.

இந்த பாதிப்பை பொறுத்தவரை ஆண், பெண் என்று எந்தவித வித்தியாசங்களும் இல்லை. அவர்களை குழந்தைகளாக பார்த்து அவர்களுக்கு இந்த பாதிப்புகளில் இருந்து வெளியில் கொண்டு வருவதும் பெற்றோர்கள் கைகளில் தான் இருக்கிறது. குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்கும், நாளை இந்த சமூகத்தை அவர்கள் தைரியமாக எதிர் கொள்ளவும் இந்த மாதிரி சிறு சிறு முயற்சிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக நம் பிள்ளைகள் இந்த உலகத்தை எளிதில் எதிர் கொள்வார்கள்.  முயலுங்கள் இன்றே, நம் பிள்ளைகளுக்காக!!!

மேலும் அறிய:
குட் டச், பேட் டச் - தீபா
குட் டச் - பேட் டச் /Stranger Safety! - சந்தனமுல்லை

Monday, August 27, 2012

ஆடம்பரம் தேவையா குழந்தைகளுக்கு?


நம் குழந்தைகள் நம்மை பெரும்பாலான நேரங்களில் ஆச்சரியப்பட வைப்பார்கள். அவர்களின் கேள்விகள், பதில்கள் எல்லாம் நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பவையாகத் தான் இருக்கும். குழந்தைகளை நாம் வளர்க்கும் போது அவர்களை எவ்வாறு வழி நடத்தி கொண்டு செல்கிறோம் என்ற கேள்விகள் பல என் மனதில் உள்ளது. பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் ஒவ்வொரு வகையில் தலை சிறந்த குழந்தைகளாகத் தான்  இருக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் தனித் திறமையில் சிறக்கவும் வாழ்கையில் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் பெற்றோர்களின் துணையுடன் தான் ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கும். அந்த குறுகிய காலகட்டம் தான் அவர்களை வாழ்வினில் நல்வழி படுத்தவும், பிற்காலத்தில் ஒரு நல்ல மனிதனாய் உருவெடுக்க காரணமாய் அமைகிறது.

இதை எல்லாம் தடை செய்வது போல், நம் குழந்தைகளின் வாழ்க்கை முறைகளில் உள்ள சிறு சிறு நெருடல்கள் தான் இந்த பதிவு. நாம் எப்படி நாம் பிள்ளைகளை வழி மாறி அழைத்து செல்கிறோம் என்று பார்ப்போம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவரும் தலைப்புக்கு செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் நாம் நம் பால்யகாலத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டி உள்ளது. நீங்களோ, நானோ வளரும் போது எப்படி வளர்ந்தோம் என்று ஒரு நிமிடம் உங்கள் சிறு வயது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். நாம் குழந்தைகளாய் இருந்த காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு நமக்கு எந்தனை உடைகள் கிடைக்கும்? அதிக பட்சமாய் எல்லோருக்கும் கிடைப்பது இரண்டு அல்லது மூன்று உடைகளாகத்தான் இருக்கும். அதுவும் கூட பண்டிகைகளின் போது கிடைக்கும். நாளை தீபாவளி என்றால் இன்று இரவு தான் நம் கையில் உடையும், வெடிகளும் கிடைக்கும். அந்த உடை எடுக்கும் போது கூட பல வீடுகளில் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அம்மாவும், அப்பாவும் பிள்ளைகளுக்கு மட்டும் எடுத்தால் போதுமே என்று நினைப்பார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், அந்த கடைசி நேரத்தில் கிடைப்பதால் என்னவோ நமக்கு அது பெரிய பொக்கிசமாய் தெரியும் அந்த உடைகளும், வெடிகளும்.

 நம்மை திருவிழாவிற்கு எல்லாம் கூட்டிக்கொண்டு போகும் போது ஆளுக்கு ஒரு பொம்மை என்று வாங்கி கொடுப்பார்கள். அதிலும் வாங்கி கொடுத்தவற்றை அப்பவே உடைத்து விட்டால், கிடைக்கும் அடிகளை இன்றும் நம்மால் மறக்க முடியாது. ஆனால் இன்றைய நிலைமையை யோசித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள் இன்று எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள். இன்றைய பெரும்பாலான குடும்பத்தில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான். நம் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதிலே கற்று கொடுத்து கொண்டிருப்பது  ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தான். நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு எளிய வாழ்கை முறையில் இருந்தே வந்திருப்போம். இன்று நம் குழந்தைகளோ அதற்கு நேர்மாறான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 பிள்ளைகள் மனதில் நினைக்கும் முன் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் தான் நாம். நம் சிறு வயதில் அப்பாவோ, அம்மாவோ ஒரு பொருள் வங்கி தருவது என்பது திருவிழாகளிலும், பொருட்காட்சியிலும் தான். ஒன்னும் இல்லை ஒரு ஐம்பது பைசாவிற்கு ஒரு பலூன் வாங்க எவ்வளவு நேரம் நாம் பெற்றோர்களிடம் கேட்போம். அந்த பலூனும் வாங்கி நம் கைக்கு வந்தவுடன் உடைந்துவிடும், அதற்கும் நாம் தான் திட்டும் வாங்குவோம். ஆனால் இன்று குழந்தைகள் பலூன் கேட்கும் முன் ஒரு பாக்கெட் பலூன் அவர்களின் கையில் இருக்கிறது. நாம் ஏன் இவ்வளவு தாராளமானவர்களாய் மாறி போனோம்? நமக்கு கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் இதற்கு முழு காரணம். ஆனால் இதுவே நம் குழந்தைகளை ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது. பொருளாதாரத்தில் ஓர் அளவிற்கு முன்னேறிய குடும்பமும், முன்னேற பாடுபட்டு கொண்டிருக்கும் குடும்பங்கள் தான், இந்த மாதிரி பிள்ளைகளை ஆடம்பர வாழ்க்கைக்கு இழுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதில் இருந்து இந்த ஆடம்பர வாழ்கைக்குள் நாம் நுழைய ஆரம்பித்தோம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில்   வேலை பளு காரணமாய்  தங்களின் குழந்தைகளிடம் அவர்களால் முழுமையாக நேரத்தை செலவிட முடியவில்லை. இதுவே அவர்களுக்கு, தன் மீது குற்றஉணர்வினை கொண்டு வந்து விடுகிறது. இதை சமாளிக்க அவர்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் முன் அவர்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம் என்று எல்லா பொருட்களையும் வாங்கி கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே நாளடைவில் அவர்களை ஆடம்பர வாழ்விற்குள் இழுத்து சென்று விடுகிறது. விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு துணிமணிகள், செருப்புகள், அலங்கார பொருட்கள் என்று கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி தருகிறார்கள். இதை பார்க்கும் மற்ற குடும்பங்களும் நாமும் அப்படி வளர்த்தால் தான் நமக்கு மதிப்பும், பெருமையும் என்று நினைத்து அவர்களும் இந்த ஆடம்பர வாழ்கைக்குள் குழந்தைகளை கொண்டு வந்து விடுகிறார்கள்.

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை மாநகரப் பேருந்திலோ, மின்சார ரயிலிலோ கூட்டி சென்று இருப்போம். என்னையும் சேர்த்து பெரும்பாலும் கூட்டி சென்றது இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் நம் பிள்ளை ஒரு சொகுசான வாழ்வை வாழ தான் நமக்கும் பிடிக்கிறது. அதனால் தான் குழந்தைகளை அழைத்து செல்லும் போது ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் அழைத்து செல்கிறோம். இந்த மாதிரி ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் ஆடம்பரமான வாழ்வே நம் பிள்ளைகளுக்கு நல்லது என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.

நம் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே ஆடம்பர வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் நாம் அவர்களுக்கு ஏமாற்றம் என்று ஒன்று இருப்பதை கற்றுகொடுப்பது இல்லை. ஏமாற்றம் என்றால் என்ன என்று தெரியாத குழந்தைகள் வளரும் போது ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட தாங்கி கொள்ள முடிவதில்லை.  இது அவர்களை பொறுமை இல்லாதவர்களாகவும், மூர்க்கர்களாகவும், வளரச் செய்கிறது. கேட்டதும் கிடைக்கும் என்று பழகிய குழந்தைகளால், ஒரு பொருள் கிடைக்கவில்லையென்றால் அவர்களை எரிச்சலூட்டுகிறது. இதுவே சில சமயங்களில், அவர்களை பல தவறான முடிவுகளை எடுக்கவும் வைக்கிறது. ஏமாற்றங்களையும் ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் கொண்டு வரவேண்டும்.

ஒரு பொருளை நாம் வாங்கி கொடுக்கும் முன்பு அவர்களுக்கு அந்த பொருள் தேவையா, அதனால் என்ன பயன் அல்லது கேடு என எடுத்துரைக்க வேண்டும். அந்த பொருளை வாங்க தனது பெற்றோர் தன்னிடம் செலவு செய்யும் நேரத்தை திருடி, வேலை செய்து தான் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும். அந்த பொருளுக்கு பெற்றோர்களின் உழைப்பை பற்றியும் எடுத்துரைக்க மறந்து போகிறோம். அதனால் சிறு வயதிலே அவர்களின் மனதில் என்ன கேட்டாலும் நமக்கு அந்த பொருள் கிடைக்கும் என்று அவர்கள் எண்ணி கொள்கிறார்கள்.

குறைந்த விலையில் இருக்கும் பொடருட்களை குழந்தைகள் கேட்டதும் வாங்கிக் கொடுக்கும் நமக்கு, அதிக விலையுள்ள பொருளைக் கேட்கும் போது தான் சிக்கலே. ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள் தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்துக்கும் அவர்களை இழுத்து செல்கிறது. அவன் வைத்திருக்கிறான், எனக்கும் அது வேண்டும் என்ற மனநிலையில் தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். இதுவே பிள்ளைகள் பத்தாம் வகுப்பை தாண்டியதும் எனக்கும் என் நண்பனை போல் வண்டி வேண்டும் என்று கேட்க வைக்கிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கும் முன்பு பலமுறை யோசித்து வாங்கவும் பழகி கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கேட்கும் பொருட்களையும் கேட்டவுடன் வாங்கி தராமல் அவர்களை சிறிது காலமேனும் காக்க வைத்து தேவை என்றால் மட்டுமே வாங்கி கொடுக்க நாமும் பழகி கொள்ளவேண்டும். நம்மில் வரும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் நம் குழந்தைகளை நாளை ஒரு நல்ல மனிதனாய் வருவதற்கு கண்டிப்பாய் வழிவகுக்கும். நமது குழந்தை இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வளர்வதும், வளராமல் போவதும் பெற்றோர்களின் இந்த சிறு முயற்சியிலும் அடங்கி இருக்கிறது. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நம் பிள்ளைகளும் நம் கையை பிடித்து கொண்டு வந்து கற்று கொள்வார்கள். இன்றே இந்த முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்து நம் பிள்ளைகளின் சமுதாயத்தை நல்வழி படுத்துவோம்.

குழந்தை வளர்ப்பு பற்றி என் மனதில்பட்ட சில கருத்துகளையும் உதாரணங்களையும் மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன். குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை. அதே போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் தேவை.

புலமை பித்தன் சொன்னது போல,

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை (பெற்றோர்) வளர்க்கையிலே!

Saturday, August 11, 2012

மாறிப் போன என் உலகம்.......


கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னுள் எவ்வளவு மாற்றங்கள். நினைத்து பார்க்கும் பொழுது நானா இவ்வளவு மாறி விட்டேன் என்று மலைப்பாக இருக்கிறது. வேலையை விட்டு இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. வேலையை விடும்பொழுது இனி வரும் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயமும் சேர்ந்தே வந்தது. திருமணம் ஆன பிறகும் நான் எந்த செயலும் நானே சுயமாக யோசித்து செய்ததில்லை. வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுடன் பிடித்தோ பிடிக்காமலோ ஒத்துக் கொண்டு ஒரு சராசரியான பெண்ணாகத் தான் இருந்தேன். இப்பொழுது,  ஒன்றும் பெரியதாக மாறிவிடவில்லை. ஆனால் கண்டிப்பாக நான் சில விசயத்தில் மாறி இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று, அதை எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொண்டேன். என்னுள் இருக்கும் என்னை தொலைத்த ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் எல்லாம் தலைகீழ். நானே சுயமாக யோசித்து ஆராய்ந்து முடிவு எடுக்கும் அளவிற்கு வந்திருப்பதே ஒரு சின்ன வெற்றியாக நான் பார்க்கிறேன். இதற்கு ஒரு காரணம் நான் தனிமையாக விடப்பட்டதாலோ என்னவோ தெரியவில்லை. பிறந்தது முதல் நான் பெரும்பாலும் தனித்து விடப்படவில்லை என்பதே உண்மை. பெண்ணாக பிறந்ததால் பல விசயங்கள் எனக்கு எட்டாக்கனி தான்.

சிறு வயதில் இருந்தே எனக்கு நிறைய விசயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நான் வளர்ந்த சூழ்நிலை, பொருளாதாரம் மற்றும் சுற்றத்தார்கள் என்னை கற்று கொள்ள விடவில்லை. குழந்தையாக இருக்கும் போதே எனக்கு டான்ஸ் ஆடுவது என்பது ரொம்ப பிடித்த விசயம். அதை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் இதை சொன்ன எனக்கு கிடைத்த பதில், "டான்ஸ் கத்துக்கிட்டு எங்க போய் அரங்கேற்றம் செய்ய போகிறாய்" என்று தான் பதில் வந்தது. இதைத் தவிர, அதை கற்றுக்கொள்ள ஒரு தொகையும் தேவைப் பட்டது, அதை தர முடியாது என்பது என்ற காரணம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பொழுது தான் தெரிந்தது. அன்று முதல் நான் எனக்கு ஆசையான பல விசயத்தை மனதிலே போட்டு புதைக்க ஆரம்பித்தேன். நாளடைவில் எதுவெல்லாம் பொருளாதரத்தை மையமாக வருகிறதோ அது எதுவும் என் பெற்றோர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டேன். சிறிது நாளில் அதுவும் என் சக தோழிகளின் பெற்றோர்கள் மூலம் என் பெற்றோருக்கு தெரிய ஆரம்பித்தது. என் தந்தை என்னிடம் ஏன் இதை நீ என்னிடம் கேட்கவில்லை என்று கேட்கும் போது நான் சொல்லும் பதில் "உங்களால் முடிந்ததை உங்களிடம் கேட்டு இருக்கிறேன். இதை நான் கேட்டால் கண்டிப்பாக உங்களால் முடியாது" என்று எனக்கு தெரியும். அதனால் தான் கேட்கவில்லை என்றேன். இது அவர்களை பெரிதும் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி தான் பெரும்பாலான நடுத்தரவர்க்க குடும்பங்களில் நடக்கும். இப்படியே வளர்ந்த நான் எனக்கான என் முதல் முடிவு எடுத்தது நான் மேலே படிக்கவேண்டும் என்று கேட்டதுதான். பெற்றோர்களுக்கோ சுற்றத்தார்களிடம் இருந்து, "அதான் ஒரு பட்டம் வாங்கியாச்சே எதுக்கு மேலே ஏன் படிக்க வைக்கிறாய், பேசாமல் கல்யாணம் பண்ணிக் கொடு" என்று தான் சொன்னார்கள்.

இந்த சந்தர்பத்தில் தான் என் வாழ்வின் முதல் மாற்றம் ஆரம்பம் ஆனது. என் அத்தை மற்றும் அத்தை மகள் இரண்டு பேரும் என் தந்தையிடம் நீங்கள் எவ்வளவு நகை போட்டு கல்யாணம் பண்ணினாலும் நாளை அவள் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அவளால் சொந்த காலில் நிற்கும் திறன் இருக்காது. "படிக்க ஆசைபடும் பெண்ணை படிக்கவை" என்று சொன்னார்கள். என் அத்தை என்றால் என் அப்பாவிற்கு ஒரு தனி பிடித்தம் கலந்த பிரியம். அதனால் தான் அவர்கள் கூறியவுடன் மேல் படிப்பு படிக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைப் போல் எடுத்து சொல்ல எல்லோருக்கும் என் போல் அத்தை கிடைப்பார்களா என்று தெரியவில்லை. என் வாழ்விற்கான பாதையில் முதல் மாற்றத்தை காட்டியவர்கள் அவர்கள் இரண்டு பேரும் தான். இந்த தருணத்தில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்.

படிக்கும் போது ஏதோ கொஞ்சம் நன்றாக படித்ததால் கல்லூரியில் உதவித்தொகை மூலம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர்ஸ் டிகிரியும் வாங்கியாச்சு. அடுத்து என் மனதில் இருந்தது "எப்படியும் ஒரு வேலைக்கு போய் முடிந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும்" என்பது தான். பெற்றோர்களுக்கு மறுபடியும் என் திருமணம் ஞாபகம் வந்து நின்றது. இது தான் சரியான சமயம் திருமணம் செய்வதற்கு என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த எண்ணத்தை மாற்ற யார் வருவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் போது எனக்கு அந்த வாய்ப்பும் வாய்த்தது. யாரோ ஒரு புண்ணியவான் ஜோசியர் இந்த பெண்ணிற்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து தான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட என் பெற்றோர்கள் அது வரைக்கும் வேண்டுமானால் உள்ளுர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார் என்றார்கள். ஆனால் என் மனதிலோ அந்த எண்ணம் சுத்தமாக இல்லை. எனக்கு படித்த துறையில் வேலைக்கு செல்வதே ஆசையாக இருந்தது. நான் சென்னை சென்று வேலை பார்க்கிறேன் என்று கூறினேன்.

அப்பொழுது இருந்த கால கட்டத்தில் வேலை கிடைப்பது கடினம் தான். என் தந்தையின் நண்பர்களின் பிள்ளைகள் சென்னையில் வேலை கிடைக்காமல் திரும்ப ஊருக்கு வந்த காலம் அது. இவள் போனாலும் இதே நிலைமை தான், இவளே தேடி பார்த்துவிட்டு கிடைக்கவில்லை என்றால், திரும்பிவந்து விடுவாள் என்பதே அவர்களின் மனக் கணக்கு. மூன்று மாதகாலம் எனக்கு அவகாசமாக வழங்கப்பட்டது. அதற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் ஊரில் வந்து கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னைக்கு அனுப்பப் பட்டேன். சிறு வயதில் இருந்து விடுதிகளில் தங்கி படிக்காத நான் சென்னையில் விடுதிக்கு செல்ல போகிறேன் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் என் பெற்றோர்களோ நீ சென்னை போகலாம், ஆனால் தங்குவது மாமா வீட்டில் தான். விடுதி இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டார்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று அதற்கும் சரி என்று சென்னை சென்றேன்.

அது வரை பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று சூழ்நிலையில் வளர்ந்த  எனக்கு சென்னை கொஞ்சம் பயத்தை காட்டியது உண்மை தான். என்ன செய்வது எப்படி வேலை தேடுவது என்று குழப்பத்தில் இருந்த எனக்கு மீண்டும் என் அத்தை வழியிலே உதவி கிடைத்தது. இந்த முறை எனக்கு உதவியது என் அத்தையின் இன்னொரு மகள். அவர் தான் எனக்கு எப்படி வேலை தேட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து என்னை வழி நடத்தி சென்றார்கள். எனக்கான முதல் வேலை அவர் மூலமே கிடைத்தது. இது தான் என் வாழ்விலே ஏற்பட்ட அடுத்த மாற்றம். சென்னை சென்று வேலை தேட எனக்கு என் தந்தை கொடுத்தக் காலக் கெடு மூன்று மாதங்கள். எப்படியும் நான் திரும்பி வந்துவிடுவேன் என்று இருந்த என் பெற்றோருக்கு நான் சென்னை வந்த இரண்டாவது மாதத்தில் வேலை கிடைத்து விட்டது என்றுவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இப்படியாக என் சென்னை வாழ்க்கை துவங்கியது. இரண்டு வருடம் சென்ற பிறகு மீண்டும் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தது. இந்த முறை எனக்கு மறுப்பு சொல்லக் காரணங்கள் இல்லை. அதனால் நீங்கள் பார்க்கும் எந்த பையனும் எனக்கு சம்மதம் என்று சொன்னேன். அவர்களின் தேடல் துவங்கியது.

இதன் பிறகு எனக்கு ஏற்பட்ட மாற்றம் தான் என் வாழ்வை தலை கீழாக மாற்றியது. வீட்டில் பார்த்த பையனுடன் என் திருமணம் நடந்தது. இது வரைக்கும் எனக்கு இருந்த பல கட்டுப்பாடுகள் இல்லை. அது வரைக்கும் என்ன சொன்னார்களோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்தேன். எனக்கான முடிவை நானே எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது என் திருமணத்திற்கு பிறகு தான். இதை நான் "கற்றுக் கொள்ள ஆசை", என்று சொல்வதற்குள் கற்றுகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். எனக்கான என் தேடல் துவங்கியது என்னவோ இங்கு தான்.

கம்யூனிசத்தையும், காரல் மார்க்ஸ்யும் படித்தவனுக்கு பெண் என்பவள் அடிமை இல்லை என்பதை எனக்கு தெளிவுபடுத்தி, உன் பாதையை தேர்ந்தெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தான். எனது அடுத்த அடுத்த அடிகளுக்கு நடை பழகும் குழந்தைப் போல எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுக்க வழிவகுத்தவன் என்னை வாழ்கை துணையாக ஏற்றவன்.

இதுவரை நான் என் வாழ்வு, என் குடும்பம் என்று சுயநலத்துடன் இருந்த நான் இதை தவிர்த்து வெளி உலகையும்  காண ஆரம்பித்து இருக்கிறேன். என் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், நான் நானாக வாழ, ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கான தேவையும் என் முடிவையும் நானே எடுக்கிறேன். இந்த மாற்றம் எல்லாம் எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான். இந்த மாற்றம் எனக்கு பல தேடலை தேடி தரும் என்று நம்புகிறேன்.  தேடல்கள் தொடரும்....

Sunday, July 29, 2012

புத்தகத்தையும், நூலகத்தையும் அறிமுகப்படுத்துவோம்!!!


நான் கனடா வந்த பிறகு என்னை பல விஷயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின‌.. அதில் பெரிதும் என்னை கவர்ந்தது குழந்தைகளின் படிக்கும் ஆர்வம். வணிக வளாக‌த்திற்கு பெற்றோர்களுடன் செல்லும் குழந்தைகள் கையில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். அங்கு சுற்றும் நேரத்திலும் அந்த புத்தகத்தை வாசிப்பதில் தான் பொழுதைக் கழிக்கிறார்கள். இதை பார்த்த எனக்கு சற்று ஆச்சரியம்தான். எப்படி இரண்டு விதமாக இங்கு இருக்கிறார்கள் என்று. ஒன்று எப்பொழுதும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அல்லது வீடியோ கேம்ஸ் வைத்து இருப்பார்கள். இந்த பதிவு புத்தகம் படிக்கும் குழந்தைகளை பற்றியது.


எப்படி இந்த குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் வந்தது என்று கேள்விகள் என் மனதில் இருந்து கொண்டிருந்தது. இதை பற்றி என் தோழியிடம் விசாரித்து சில விசயங்களை தெரிந்து கொன்டேன். இங்கு பள்ளிகளில் இருந்தே, புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள். ஒரு மாதத்தில் எத்தனை புத்தகம் படிக்கிறோம், அதில் என்ன விசயம் கற்று கொண்டோம் என்று எழுதி வரவேண்டும். இவை எல்லாம் பள்ளி இறுதியில் அவர்களின் தேர்ச்சி கடிதம் தரும்பொழுது அவர்களுக்கு "கிரடிட்ஸ்" வழங்கப்படும். இப்படி படிக்கும் குழந்தைகள் காலபோக்கில் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும், அதன் ஜனத்தொகையினை பொருத்து இங்கு பொதுநூலகம் இருக்கும். இதை கேள்விபட்டவுடன் நான் கண்டிப்பாக நூலகத்தை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது இவ்வளவு புத்தகங்களா என்று?. குழந்தைகளுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டு அவர்களின் உயரத்திற்கு ஏற்றார் போல் அவர்கள் உட்கார்ந்து வாசிக்க மேஜை நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது. அவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புத்தகங்களை எடுக்கிறார்கள். இவர்களுக்கு வாசித்து காட்ட சில உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்தை வாசித்தும் காட்டுகிறார்கள், வாசிக்கவும் கற்று தருகிறார்கள்.


இதை பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய கேள்வி என்னவென்றால்,  "ஏன் நம் நாட்டு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போனது?". பெரும்பாலான குழந்தைகளுக்கு நூலகம் என்றால் தெரிவதில்லை. சில குழந்தைகளுக்கு நூலகம் பற்றி தெரிந்திருந்தாலும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகு குறைவு.

குழந்தைகளுக்கு இந்த ஆர்வத்தை பள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகளில் என்ன செய்கிறார்கள்? பள்ளிகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்காக "லைப்ரரி" என்று ஒரு வகுப்பு இருக்கும். பெரும்பாலும் இந்த வகுப்பினை எந்த ஆசிரியர் பாடம் நடத்தி முடிக்கவில்லையோ அவர்கள் தான் பயன்படுத்துவார்கள். அப்பறம் எப்படி நம் குழந்தைகளுக்கு புத்தக வாசிக்கும் பழக்கம் வரும்?

பள்ளிகளில் இப்படி என்றால் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளை பாடப் புத்தகத்தை தவிர வேறு எந்த புத்தகங்களையும் படிக்க அனுமதிப்பதில்லை. குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுக்கிறோம், ஆனால் புத்தகங்கள் வாங்கி தருவதில்லை. புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களுக்கு தண்ட செலவு செய்பவர்கள் என்று பேரு தான். நல்ல விசயங்களை யாரேனும் செய்தால் அதை நாம் தான் ஏற்று கொள்வதில்லையே! இதையும் மீறி சில நபர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளித்தாலும் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லை. ஏன் என்றால் அவர்களை ஏற்கனவே பள்ளி பாடங்களை படி! படி! என்று சொல்லி அவர்களுக்கு படிப்பது என்பதே விஷமாகிவிட்டது.

கல்லூரிக்கு வரும்பொழுது தான் நாம் நூலகத்தை உபயோகிக்க ஆரம்பிக்கிறோம். அது கூட பாட திட்டத்திற்கான குறிப்புகளை எடுக்கத்தான் பயன்படுத்துகிறோம். வேறு புத்தகங்களை படிப்பதில்லை.


நம்முடைய சிறுவயதில் கூட இதே நிலைமை தான். இருந்தாலும், நாம் வளரும் பொழுது அம்புலி மாமா, கோகுலம், சிறுவர்மணி, சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்ளை ஆர்வமுடன் படித்தோம். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இதையும் நாம் கொடுப்பதில்லை. உண்மையில் காமிக்ஸ், சிறுகதைகளை படிக்கப்படிக்கத்தான் குழந்தைகளுக்கு கற்பனை திறனும், படிக்கும் ஆர்வமும் வருகிறது.

எல்லோரும் குழந்தைகளை முதல் மதிப்பெண் எடுக்கும் பந்தய குதிரைகளாக தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு இந்த பிரஷர் எல்லாம் கொடுக்காமல், குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தால்தான், புத்தகத்தின் மீதான வெறுப்பு மறையும், பள்ளி பாடங்களை படிக்கவும் இலகுவாக இருக்கும். அவர்கள் புத்தக புழுவாக இருக்க வேண்டாம். புத்தகங்களை ஒரு நண்பராக நினைத்தாலே போதும்.

பாடத்திட்டத்தை மட்டும் படித்து வளரும் குழந்தை சிந்திக்கும் திறன் இல்லாமல் ஒரே பார்வையோடு தான் வளர்கிறது. சிறு வயதில் இருந்து நல்ல புத்தகம் படித்து வளரும் குழந்தை நல்ல சிந்திக்கும் ஆற்றலுடன், தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்று தெரிந்து வளர்கிறது.  பள்ளியோ, பெற்றோர்களோ, பாடத்திட்டங்களோ எல்லா விசயங்களையும் சொல்லித்தர முடியாது. புத்தகங்கள் மட்டுமே உலகத்தை அறிமுகப்படுத்தமுடியும். சிறுவயதிலே உலகத்தை அறிய முற்படும்பொழுதுதான், தனக்கு  பிடித்தவைகளையும், தனக்கான துறையை பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இது தான், அவர்கள் வளரும் பொழுது அந்த துறையில் சிறந்து விளங்க வழிவகுக்கிறது.

ஆகவே நாம் குழந்தைகளை வாரம் ஒரு முறை இல்லை என்றாலும், மாதம் ஒரு முறையேனும் நூலகத்திற்கு அழைத்து சென்று நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுப்போம்.

Tuesday, July 17, 2012

எங்கே போயின எம் குழந்தைகளின் குழந்தைத்தனம்?


இந்த பதிவை என் குழந்தை பருவத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். என் விடுமுறை காலங்களை என்னால் இன்றும் மறக்கமுடியாது. மற்ற விடுமுறைகளை விட முழு ஆண்டு விடுமுறை கொஞ்சம் ஸ்பெஷல் தான். அப்பொழுது தான் ஊரில் இருக்கும் ஆச்சி வீட்டிற்கு அழைத்து போவார்கள். ஒரு வருட படிப்பின் இறுதியில் எனக்கு கிடைக்கும் அந்த இரண்டு மாதம் பள்ளி விடுமுறை சொர்க்கமே. அந்த இரண்டு மாதமும் என் ஆச்சி வீட்டில் தான். நான் என் தோழிகளுடன் சேர்ந்து ஊரை சுற்றி வருவது, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது, தோட்டத்தில் தாத்தாவிற்கு உதவுகிறேன் பேர்வழி என்று உபத்திரம் கொடுப்பது, ஊஞ்சல் ஆடுவது என்று பயங்கர அட்டூழியம் தான். இதை தவிர இன்னொரு பொழுதுபோக்கு எங்களின் பனை ஓலை பொம்மை தான். அதற்கு சேலை கட்டுவது, தூங்க வைப்பது, சாப்பாடு தருவது என்று தான் பொழுதை ஒட்டுவோம். அந்த இரண்டு மாதத்தின் சந்தோசங்கள் எனக்கு அடுத்த வருடம் விடுமுறை எப்போது வரும் என்று ஏங்க வைக்கும்.

இதை எல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், நான் அனுபவித்த அந்த சந்தோசங்களை எல்லாம் என் அடுத்த தலைமுறைனர் அனுபவிக்கிறார்களா? இப்போது அவர்களின் பொழுது போக்குகள் என்ன? கிராமத்தில் நான் அனுபவித்த அந்த அற்புதமான நாட்களை, தருணங்களை அவர்களும் அனுபவிக்கிறார்களா? இப்போதைய குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பது இருக்கிறதா? விடுமுறை இருந்தாலும் குழந்தைகளுக்கு இனிமையானதாக இருக்கிறதா? எத்தனை பேர் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்?

கோடை விடுமுறைகளை ஒரு சில வாரங்களை பள்ளியே திருடி கொள்கிறது. ஸ்பெஷல் சும்மர் கிளாஸ் என்று மிச்சம் இருக்கும் நாட்களையும் பெற்றோர்கள் கோடை வகுப்புக்கள் என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்.  இதை தவிர எந்த வகுப்புகள் நடக்கிறதோ அதில் எல்லாம் குழந்தைகளை சேர்த்து விட்டு என் குழந்தைக்கு இது தெரியும், அது தெரியும் என்று பெருமை பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த வீண் பெருமைகளுக்காக தனது குழந்தைகளின் ஓய்வு நேரங்கள் மற்றும் விளையாட்டு நேரங்களையும் தவறவிடுகிறார்கள்.

பாண்டி,  சொட்டாங்கல், நொண்டி, பனை வோலை காற்றாடி, கில்லி, பம்பரம், கபடி என நாம் விளையாடிய பழைய விளையாட்டுகள் பலவும் இன்று எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டன. அவைகளை கண்டிப்பாக விளையாடவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் ஓடியாடி விளையாடுதல்  மற்றும் குழுவாக சேர்ந்து விளையாட நம் குழந்தைகளுக்கு நாம் தான் சொல்லி தர வேண்டும். தினமும் விளையாட்டிற்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

நான் பார்த்த பெரும்பாலான குழந்தைகள் பொம்மைகளை தான் இன்று அவர்களின் நண்பர்களாக வைத்து இருக்கிறார்கள். பொம்மைகளும் என்னவோ சாதரணமான பொம்மைகள் இல்லை. பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் கையில் இருப்பது பார்பி மற்றும் பிரின்சஸ் பொம்மைகள். எங்கள் பனை ஓலை பொம்மைகளை பார்பி மற்றும் பிரின்சஸ் பொம்மைகள் விழுங்கி விட்டது.   ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் கையில் இருப்பது வீடியோ கேம்ஸ் மற்றும் ப்ளே ஸ்டேஷன் தான். இதை தவிர இரண்டு பேர்களின் கையிலும் இருப்பது டிவி ரிமோட் தான். டிவி தான் எல்லாருக்கும் மிக பெரிய நண்பன். நிறைய வீட்டில் கலைஞர் கொடுத்த டிவியையும் சேர்த்து இரண்டு டிவிகள் இருக்கிறது. பெரும்பாலான வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை தொந்தரவு செய்வதால் இன்னொரு டிவிக்கும் கேபிள் இணைப்புக் கொடுக்கப்பட்டு அவர்களை தனித்து விட்டுவிடுகிறார்கள்.

தொலைகாட்சி மூலம் குழந்தைகளுக்கு புதுப்புது பொம்மைகளை அறிமுகபடுத்துகிறார்கள். அவர்களும் அதை வாங்கி தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேல் பெற்றோர்களும் வாங்கி தந்து விடுகிறார்கள்.   பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களுது விற்பனைகளை அதிகரிக்க எல்லாவற்றையும் குழந்தைகளை மையமாக வைத்தே தயாரிக்க படுகிறது. மேலை நாடுகளில் ஒரு கேரக்டரை மையமாக வைத்து எல்லா பொருளும் தயாரிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஸ்பைடர்மேன் என்றால் அந்த உருவத்தை வைத்தே ஸ்கூல் பாக், பென்சில் பாக்ஸ், டிபன் பாக்ஸ் என்று எல்லாம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குழந்தைகளும் அந்த மோகத்திலே வளர்க்கப்படுகிறார்கள்.

கொஞ்சம் பெரிய குழந்தைகள் எக்ஸ்பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன் என்று பொழுதை கழிக்கிறார்கள். குழந்தைகளை எக்ஸ்பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாட விடுவதால் வெளியே சென்று நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடும் நேரம் வீணடிக்கப்படுகிறது. அது மட்டமல்ல இந்த நவீன கருவிகளின் விளையாட்டுகளில் நிறைய வன்முறைகளை சொல்லித் தரப்படுகின்றன. அதில் அவர்கள் பயன்படுத்தும் சிடிக்களில் நிறைய வன்முறை தூண்டுவதாகவே இருக்கிறது. எப்படி ஒருவனை அழிப்பது, குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது போன்றவை தான் சொல்லிதர படுகின்றன. ஒரு பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்றவுடன் குழந்தைகளும் விளையாட்டில் கையாளும் முறைகளை எல்லாம் கடை பிடிக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வு ஒன்று அதிர்ச்சியாக இருந்தது.  சவுதியில், நான்கு வயது சிறுவன் தனக்கு ப்ளே ஸ்டேஷன் வாங்கித்தரவில்லை என்று தன் தந்தையை சுட்டு கொன்று இருக்கிறான்.

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளோடு நேரம் செலவழிக்கிறோம். அவர்களுக்கு நல்ல பண்புகளையும், எந்த வயதில் அவர்களுக்கு என்னை தேவையோ அதை மட்டும் சொல்லி தருகிறோமா? இல்லை அதை மட்டும் பயன்படுத்தும் வகையில் அவர்களை வளர்க்கிறோமா?

நமக்கு நம் பிள்ளைகள் எல்லாவற்றிலும் முதலாக இருக்க வேண்டும் என ஆசை. இப்போதெல்லாம் குழந்தைகள் மூன்று வயதில் எல்லா டெக்னிகல் கேட்ஜெட்ஸ் பயன்படுத்த அவர்களே கற்றுக்கொள்கிறார்கள். இன்டர்நெட்டில் அவர்களுக்கு தேவையானவை தேடி எடுக்க  கற்றுக்கொள்கிறார்கள்.   எனக்கு  விவரம் அறிந்து நான் யு-டுயுப் கடந்த சில வருடங்களாகத்தான் பயன்படுத்துகிறேன்.   குழந்தைகள் ரொம்ப விவரமானவர்கள். அவர்களுக்கு சீக்கிரம் எந்த விசயமும் மண்டையில் ஏறிவிடும். நமக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்து இருக்கும். இதன் விளைவு தான் பல குற்றங்கள் நடக்க காரணம் ஆகிறது.   குழந்தைகள் இந்த வயதில் குழந்தைகளாக இருந்தால் மட்டுமே அவர்களால் வளரும் பொழுது இந்த உலகத்தை அழகாக பார்க்க முடியும். இல்லை என்றால் போட்டி பொறாமையுடன் தான் வளர்வார்கள். அவர்களை நாமே படுகுழியில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயமாகும்.

இவற்றில் இருந்து நம் குழந்தைகளை காப்பவை நம் கையில் தான் இருக்கிறது. அவர்களை நல்ல புத்தகம் வாசிக்க கற்று கொடுப்போம். குழந்தைகளை குழந்தைகளாக பார்போம். அவர்களுக்கு இந்த வயதில் என்ன தேவை, என்ன தேவை இல்லை என்று கற்றுக்கொடுப்போம். குழந்தைகளுக்கு எதில் விருப்பம் என்று கண்டறிந்து அவற்றில் அவர்களை வளர்த்து கொள்ள உதவுவோம்.

நாமும், நம் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவோம். சனி ஞாயிறு மற்றும் கோடை விடுமுறை நாட்களில் நமக்கு கிடைத்த நல்ல அனுபவங்களை  குழந்தைகளுக்கும் கிடைக்கும்படி செய்வோம்.

Sunday, July 15, 2012

எனது தேடலை நோக்கிய முதல் படி!


பல ஆண்டுகளாக இருந்த எனது வலைப்பதிவு ஆசை, இன்று முதல் அடி எடுத்து வைத்துள்ளது. குழந்தை நடக்கப் பழகுவதைப்போல இன்று எனது முதலடியை எடுத்து வைக்கிறேன். இந்த வலைப்பதிவு பயணம் எனது தேடல்களுக்கு விடையளிக்கும் என்ற நம்பிக்கையுடன் துவங்குகிறேன்.