Sunday, July 29, 2012

புத்தகத்தையும், நூலகத்தையும் அறிமுகப்படுத்துவோம்!!!


நான் கனடா வந்த பிறகு என்னை பல விஷயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின‌.. அதில் பெரிதும் என்னை கவர்ந்தது குழந்தைகளின் படிக்கும் ஆர்வம். வணிக வளாக‌த்திற்கு பெற்றோர்களுடன் செல்லும் குழந்தைகள் கையில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். அங்கு சுற்றும் நேரத்திலும் அந்த புத்தகத்தை வாசிப்பதில் தான் பொழுதைக் கழிக்கிறார்கள். இதை பார்த்த எனக்கு சற்று ஆச்சரியம்தான். எப்படி இரண்டு விதமாக இங்கு இருக்கிறார்கள் என்று. ஒன்று எப்பொழுதும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அல்லது வீடியோ கேம்ஸ் வைத்து இருப்பார்கள். இந்த பதிவு புத்தகம் படிக்கும் குழந்தைகளை பற்றியது.


எப்படி இந்த குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் வந்தது என்று கேள்விகள் என் மனதில் இருந்து கொண்டிருந்தது. இதை பற்றி என் தோழியிடம் விசாரித்து சில விசயங்களை தெரிந்து கொன்டேன். இங்கு பள்ளிகளில் இருந்தே, புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள். ஒரு மாதத்தில் எத்தனை புத்தகம் படிக்கிறோம், அதில் என்ன விசயம் கற்று கொண்டோம் என்று எழுதி வரவேண்டும். இவை எல்லாம் பள்ளி இறுதியில் அவர்களின் தேர்ச்சி கடிதம் தரும்பொழுது அவர்களுக்கு "கிரடிட்ஸ்" வழங்கப்படும். இப்படி படிக்கும் குழந்தைகள் காலபோக்கில் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும், அதன் ஜனத்தொகையினை பொருத்து இங்கு பொதுநூலகம் இருக்கும். இதை கேள்விபட்டவுடன் நான் கண்டிப்பாக நூலகத்தை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது இவ்வளவு புத்தகங்களா என்று?. குழந்தைகளுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டு அவர்களின் உயரத்திற்கு ஏற்றார் போல் அவர்கள் உட்கார்ந்து வாசிக்க மேஜை நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது. அவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புத்தகங்களை எடுக்கிறார்கள். இவர்களுக்கு வாசித்து காட்ட சில உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்தை வாசித்தும் காட்டுகிறார்கள், வாசிக்கவும் கற்று தருகிறார்கள்.


இதை பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய கேள்வி என்னவென்றால்,  "ஏன் நம் நாட்டு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போனது?". பெரும்பாலான குழந்தைகளுக்கு நூலகம் என்றால் தெரிவதில்லை. சில குழந்தைகளுக்கு நூலகம் பற்றி தெரிந்திருந்தாலும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகு குறைவு.

குழந்தைகளுக்கு இந்த ஆர்வத்தை பள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகளில் என்ன செய்கிறார்கள்? பள்ளிகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்காக "லைப்ரரி" என்று ஒரு வகுப்பு இருக்கும். பெரும்பாலும் இந்த வகுப்பினை எந்த ஆசிரியர் பாடம் நடத்தி முடிக்கவில்லையோ அவர்கள் தான் பயன்படுத்துவார்கள். அப்பறம் எப்படி நம் குழந்தைகளுக்கு புத்தக வாசிக்கும் பழக்கம் வரும்?

பள்ளிகளில் இப்படி என்றால் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளை பாடப் புத்தகத்தை தவிர வேறு எந்த புத்தகங்களையும் படிக்க அனுமதிப்பதில்லை. குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுக்கிறோம், ஆனால் புத்தகங்கள் வாங்கி தருவதில்லை. புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களுக்கு தண்ட செலவு செய்பவர்கள் என்று பேரு தான். நல்ல விசயங்களை யாரேனும் செய்தால் அதை நாம் தான் ஏற்று கொள்வதில்லையே! இதையும் மீறி சில நபர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளித்தாலும் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லை. ஏன் என்றால் அவர்களை ஏற்கனவே பள்ளி பாடங்களை படி! படி! என்று சொல்லி அவர்களுக்கு படிப்பது என்பதே விஷமாகிவிட்டது.

கல்லூரிக்கு வரும்பொழுது தான் நாம் நூலகத்தை உபயோகிக்க ஆரம்பிக்கிறோம். அது கூட பாட திட்டத்திற்கான குறிப்புகளை எடுக்கத்தான் பயன்படுத்துகிறோம். வேறு புத்தகங்களை படிப்பதில்லை.


நம்முடைய சிறுவயதில் கூட இதே நிலைமை தான். இருந்தாலும், நாம் வளரும் பொழுது அம்புலி மாமா, கோகுலம், சிறுவர்மணி, சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்ளை ஆர்வமுடன் படித்தோம். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இதையும் நாம் கொடுப்பதில்லை. உண்மையில் காமிக்ஸ், சிறுகதைகளை படிக்கப்படிக்கத்தான் குழந்தைகளுக்கு கற்பனை திறனும், படிக்கும் ஆர்வமும் வருகிறது.

எல்லோரும் குழந்தைகளை முதல் மதிப்பெண் எடுக்கும் பந்தய குதிரைகளாக தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு இந்த பிரஷர் எல்லாம் கொடுக்காமல், குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தால்தான், புத்தகத்தின் மீதான வெறுப்பு மறையும், பள்ளி பாடங்களை படிக்கவும் இலகுவாக இருக்கும். அவர்கள் புத்தக புழுவாக இருக்க வேண்டாம். புத்தகங்களை ஒரு நண்பராக நினைத்தாலே போதும்.

பாடத்திட்டத்தை மட்டும் படித்து வளரும் குழந்தை சிந்திக்கும் திறன் இல்லாமல் ஒரே பார்வையோடு தான் வளர்கிறது. சிறு வயதில் இருந்து நல்ல புத்தகம் படித்து வளரும் குழந்தை நல்ல சிந்திக்கும் ஆற்றலுடன், தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்று தெரிந்து வளர்கிறது.  பள்ளியோ, பெற்றோர்களோ, பாடத்திட்டங்களோ எல்லா விசயங்களையும் சொல்லித்தர முடியாது. புத்தகங்கள் மட்டுமே உலகத்தை அறிமுகப்படுத்தமுடியும். சிறுவயதிலே உலகத்தை அறிய முற்படும்பொழுதுதான், தனக்கு  பிடித்தவைகளையும், தனக்கான துறையை பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இது தான், அவர்கள் வளரும் பொழுது அந்த துறையில் சிறந்து விளங்க வழிவகுக்கிறது.

ஆகவே நாம் குழந்தைகளை வாரம் ஒரு முறை இல்லை என்றாலும், மாதம் ஒரு முறையேனும் நூலகத்திற்கு அழைத்து சென்று நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுப்போம்.

Tuesday, July 17, 2012

எங்கே போயின எம் குழந்தைகளின் குழந்தைத்தனம்?


இந்த பதிவை என் குழந்தை பருவத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். என் விடுமுறை காலங்களை என்னால் இன்றும் மறக்கமுடியாது. மற்ற விடுமுறைகளை விட முழு ஆண்டு விடுமுறை கொஞ்சம் ஸ்பெஷல் தான். அப்பொழுது தான் ஊரில் இருக்கும் ஆச்சி வீட்டிற்கு அழைத்து போவார்கள். ஒரு வருட படிப்பின் இறுதியில் எனக்கு கிடைக்கும் அந்த இரண்டு மாதம் பள்ளி விடுமுறை சொர்க்கமே. அந்த இரண்டு மாதமும் என் ஆச்சி வீட்டில் தான். நான் என் தோழிகளுடன் சேர்ந்து ஊரை சுற்றி வருவது, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது, தோட்டத்தில் தாத்தாவிற்கு உதவுகிறேன் பேர்வழி என்று உபத்திரம் கொடுப்பது, ஊஞ்சல் ஆடுவது என்று பயங்கர அட்டூழியம் தான். இதை தவிர இன்னொரு பொழுதுபோக்கு எங்களின் பனை ஓலை பொம்மை தான். அதற்கு சேலை கட்டுவது, தூங்க வைப்பது, சாப்பாடு தருவது என்று தான் பொழுதை ஒட்டுவோம். அந்த இரண்டு மாதத்தின் சந்தோசங்கள் எனக்கு அடுத்த வருடம் விடுமுறை எப்போது வரும் என்று ஏங்க வைக்கும்.

இதை எல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், நான் அனுபவித்த அந்த சந்தோசங்களை எல்லாம் என் அடுத்த தலைமுறைனர் அனுபவிக்கிறார்களா? இப்போது அவர்களின் பொழுது போக்குகள் என்ன? கிராமத்தில் நான் அனுபவித்த அந்த அற்புதமான நாட்களை, தருணங்களை அவர்களும் அனுபவிக்கிறார்களா? இப்போதைய குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பது இருக்கிறதா? விடுமுறை இருந்தாலும் குழந்தைகளுக்கு இனிமையானதாக இருக்கிறதா? எத்தனை பேர் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்?

கோடை விடுமுறைகளை ஒரு சில வாரங்களை பள்ளியே திருடி கொள்கிறது. ஸ்பெஷல் சும்மர் கிளாஸ் என்று மிச்சம் இருக்கும் நாட்களையும் பெற்றோர்கள் கோடை வகுப்புக்கள் என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்.  இதை தவிர எந்த வகுப்புகள் நடக்கிறதோ அதில் எல்லாம் குழந்தைகளை சேர்த்து விட்டு என் குழந்தைக்கு இது தெரியும், அது தெரியும் என்று பெருமை பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த வீண் பெருமைகளுக்காக தனது குழந்தைகளின் ஓய்வு நேரங்கள் மற்றும் விளையாட்டு நேரங்களையும் தவறவிடுகிறார்கள்.

பாண்டி,  சொட்டாங்கல், நொண்டி, பனை வோலை காற்றாடி, கில்லி, பம்பரம், கபடி என நாம் விளையாடிய பழைய விளையாட்டுகள் பலவும் இன்று எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டன. அவைகளை கண்டிப்பாக விளையாடவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் ஓடியாடி விளையாடுதல்  மற்றும் குழுவாக சேர்ந்து விளையாட நம் குழந்தைகளுக்கு நாம் தான் சொல்லி தர வேண்டும். தினமும் விளையாட்டிற்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

நான் பார்த்த பெரும்பாலான குழந்தைகள் பொம்மைகளை தான் இன்று அவர்களின் நண்பர்களாக வைத்து இருக்கிறார்கள். பொம்மைகளும் என்னவோ சாதரணமான பொம்மைகள் இல்லை. பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் கையில் இருப்பது பார்பி மற்றும் பிரின்சஸ் பொம்மைகள். எங்கள் பனை ஓலை பொம்மைகளை பார்பி மற்றும் பிரின்சஸ் பொம்மைகள் விழுங்கி விட்டது.   ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் கையில் இருப்பது வீடியோ கேம்ஸ் மற்றும் ப்ளே ஸ்டேஷன் தான். இதை தவிர இரண்டு பேர்களின் கையிலும் இருப்பது டிவி ரிமோட் தான். டிவி தான் எல்லாருக்கும் மிக பெரிய நண்பன். நிறைய வீட்டில் கலைஞர் கொடுத்த டிவியையும் சேர்த்து இரண்டு டிவிகள் இருக்கிறது. பெரும்பாலான வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை தொந்தரவு செய்வதால் இன்னொரு டிவிக்கும் கேபிள் இணைப்புக் கொடுக்கப்பட்டு அவர்களை தனித்து விட்டுவிடுகிறார்கள்.

தொலைகாட்சி மூலம் குழந்தைகளுக்கு புதுப்புது பொம்மைகளை அறிமுகபடுத்துகிறார்கள். அவர்களும் அதை வாங்கி தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேல் பெற்றோர்களும் வாங்கி தந்து விடுகிறார்கள்.   பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களுது விற்பனைகளை அதிகரிக்க எல்லாவற்றையும் குழந்தைகளை மையமாக வைத்தே தயாரிக்க படுகிறது. மேலை நாடுகளில் ஒரு கேரக்டரை மையமாக வைத்து எல்லா பொருளும் தயாரிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஸ்பைடர்மேன் என்றால் அந்த உருவத்தை வைத்தே ஸ்கூல் பாக், பென்சில் பாக்ஸ், டிபன் பாக்ஸ் என்று எல்லாம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குழந்தைகளும் அந்த மோகத்திலே வளர்க்கப்படுகிறார்கள்.

கொஞ்சம் பெரிய குழந்தைகள் எக்ஸ்பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன் என்று பொழுதை கழிக்கிறார்கள். குழந்தைகளை எக்ஸ்பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாட விடுவதால் வெளியே சென்று நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடும் நேரம் வீணடிக்கப்படுகிறது. அது மட்டமல்ல இந்த நவீன கருவிகளின் விளையாட்டுகளில் நிறைய வன்முறைகளை சொல்லித் தரப்படுகின்றன. அதில் அவர்கள் பயன்படுத்தும் சிடிக்களில் நிறைய வன்முறை தூண்டுவதாகவே இருக்கிறது. எப்படி ஒருவனை அழிப்பது, குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது போன்றவை தான் சொல்லிதர படுகின்றன. ஒரு பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்றவுடன் குழந்தைகளும் விளையாட்டில் கையாளும் முறைகளை எல்லாம் கடை பிடிக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வு ஒன்று அதிர்ச்சியாக இருந்தது.  சவுதியில், நான்கு வயது சிறுவன் தனக்கு ப்ளே ஸ்டேஷன் வாங்கித்தரவில்லை என்று தன் தந்தையை சுட்டு கொன்று இருக்கிறான்.

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளோடு நேரம் செலவழிக்கிறோம். அவர்களுக்கு நல்ல பண்புகளையும், எந்த வயதில் அவர்களுக்கு என்னை தேவையோ அதை மட்டும் சொல்லி தருகிறோமா? இல்லை அதை மட்டும் பயன்படுத்தும் வகையில் அவர்களை வளர்க்கிறோமா?

நமக்கு நம் பிள்ளைகள் எல்லாவற்றிலும் முதலாக இருக்க வேண்டும் என ஆசை. இப்போதெல்லாம் குழந்தைகள் மூன்று வயதில் எல்லா டெக்னிகல் கேட்ஜெட்ஸ் பயன்படுத்த அவர்களே கற்றுக்கொள்கிறார்கள். இன்டர்நெட்டில் அவர்களுக்கு தேவையானவை தேடி எடுக்க  கற்றுக்கொள்கிறார்கள்.   எனக்கு  விவரம் அறிந்து நான் யு-டுயுப் கடந்த சில வருடங்களாகத்தான் பயன்படுத்துகிறேன்.   குழந்தைகள் ரொம்ப விவரமானவர்கள். அவர்களுக்கு சீக்கிரம் எந்த விசயமும் மண்டையில் ஏறிவிடும். நமக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்து இருக்கும். இதன் விளைவு தான் பல குற்றங்கள் நடக்க காரணம் ஆகிறது.   குழந்தைகள் இந்த வயதில் குழந்தைகளாக இருந்தால் மட்டுமே அவர்களால் வளரும் பொழுது இந்த உலகத்தை அழகாக பார்க்க முடியும். இல்லை என்றால் போட்டி பொறாமையுடன் தான் வளர்வார்கள். அவர்களை நாமே படுகுழியில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயமாகும்.

இவற்றில் இருந்து நம் குழந்தைகளை காப்பவை நம் கையில் தான் இருக்கிறது. அவர்களை நல்ல புத்தகம் வாசிக்க கற்று கொடுப்போம். குழந்தைகளை குழந்தைகளாக பார்போம். அவர்களுக்கு இந்த வயதில் என்ன தேவை, என்ன தேவை இல்லை என்று கற்றுக்கொடுப்போம். குழந்தைகளுக்கு எதில் விருப்பம் என்று கண்டறிந்து அவற்றில் அவர்களை வளர்த்து கொள்ள உதவுவோம்.

நாமும், நம் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவோம். சனி ஞாயிறு மற்றும் கோடை விடுமுறை நாட்களில் நமக்கு கிடைத்த நல்ல அனுபவங்களை  குழந்தைகளுக்கும் கிடைக்கும்படி செய்வோம்.

Sunday, July 15, 2012

எனது தேடலை நோக்கிய முதல் படி!


பல ஆண்டுகளாக இருந்த எனது வலைப்பதிவு ஆசை, இன்று முதல் அடி எடுத்து வைத்துள்ளது. குழந்தை நடக்கப் பழகுவதைப்போல இன்று எனது முதலடியை எடுத்து வைக்கிறேன். இந்த வலைப்பதிவு பயணம் எனது தேடல்களுக்கு விடையளிக்கும் என்ற நம்பிக்கையுடன் துவங்குகிறேன்.