Sunday, September 23, 2012

என் அயல் நாட்டு வாழ்க்கைக்கான முதலடி!


இந்த பதிவை எழுத ஒரு நாளும் நான் யோசித்ததில்லை. சில நண்பர்கள் கூறிய வார்த்தைகள் தான் என்னை இந்த பதிவை எழுத வைத்தது. முதன்முதலாக அயல் நாட்டிற்கு செல்வதற்கு முன்பும், செல்லும்போதும் ஏற்பட்ட அனுபவமே இந்த பதிவு.

வெளி நாட்டிற்கு செல்ல விசா வாங்குவது எல்லாருக்கும் கடினமான வேலை தான். அதுவும் கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது, தன்னந்தனியாக விசா எடுப்பது அதை விட கடினமானது. கணவன் தகவல் தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பதால்  மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் தான் சார்பு விசா (Dependent Visa) எடுத்து  வர முடியும். ஆனால் அந்த சார்பு விசா எடுத்து வர எவ்வளவோ கட்டங்களை தாண்டி தான் வர வேண்டும். அதிலும் மனைவி வேலை பார்ப்பவராய் இருந்தால் அதோகதி தான். நானும் இந்த கட்டங்களை எல்லாம் தாண்டி வந்தவள் தான். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்த பதிவு.

ஐடி துறையில் ஒருத்தருக்கு வெளி நாடு வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை தான். அவ்வாறு கிடைத்த பிறகு பெரும்பாலானவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை தங்களுடன் அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால் கணவன் தனியாக வந்த பிறகு மனைவி தன் குழந்தைகளோடு வருவது என்றால் பெண்களுக்கு பிரச்சனை தான். கணவர் சென்ற பிறகு விசா வாங்க மனைவி தனியாக அலைய வேண்டும். அந்த நேரம் கணவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எதற்கும் முறையாக ஆவணங்கள் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் கேட்டதை எல்லாம் எடுத்து போன பிறகும், அதை கொண்டுவரவில்லையா? இந்த பேப்பர் இல்லை, எடுத்து கொண்டு வாருங்கள் என குறைந்தது மூன்று முறையாவது திருப்பி அனுப்புவார்கள்.

வேலைக்கு செல்லும் மனைவிமார்களுக்கு அதிக சிரமம் தான். வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன் வேலைகளையும் முடித்து இதற்காகவும் அலைதல் என்பது தேவை இல்லாத ஒரு சுமையாகவே இருக்கும். விசா வாங்குவதற்குள் அவர்களை  கம்பெனிகள் அலைய விடுவதை பார்த்தால், இப்படி வெளிநாட்டுக்கு கண்டிப்பாக போகத்தான் வேண்டுமா? என்று கூட தோன்றும். நான் இதை அனுபவித்து வந்தவள் தான். என் நிறுவனம் சென்னையில் ஒரு மூலையில், என் கணவர் நிறுவனமோ வேறு ஒரு பக்கம். இங்கும், அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வழியாக விசா கிடைத்தது. அதற்கு பிறகு மருத்துவ சோதனை என்று சொல்வார்கள். இதுவும் பெருஞ்சோதனையாக இருக்கும். நாம் வேலைக்கு விடுப்பு எடுத்து கொண்டு குழந்தையையும் தூக்கி கொண்டு மருத்துவ சோதனைகளையும் முடித்து கையில் டிக்கெட் கிடைக்கும் போது அப்பாடா என்று இருக்கும்.

இதன் நடுவில் நாம பேக்கிங் வேறு செய்யவேண்டும். கணவருக்கு தேவையான பொருட்கள், விருப்பமான பொருட்கள், குழந்தைக்கு தேவையானது, அப்பறம் மசாலா பொடி என்று சமையலுக்கு தேவையான பொருட்கள்  எல்லாம் வீட்டிலே அரைத்தோ, வெளியில் வாங்கியோ பெட்டியில் அடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், கணவரின் நண்பருக்கோ, அவரோடு வேலை பார்க்கும் நபருக்கோ சாமான்கள் நாம் வாங்க வேண்டும் அல்லது யாராவது கொண்டு தருவார்கள். அதையும் வாங்கி பெட்டியில் அடுக்கி முடிக்கவேண்டும். இப்படியே ஏர்போர்ட் கிளம்பும் கடைசி நிமிடம் வரை பேக்கிங் நடக்கும்.

அடுத்ததாக கொண்டு வந்த பெட்டிகள் எல்லாவற்றையும் ஏர்போர்ட்டில் செக்கின் செய்து போர்டிங் பாஸ் வாங்க வேண்டும். செக்கின் செய்யும்போது தான் அடுத்த தலைவலி. என்னதான் வீட்டில் எடை போட்டு பார்த்திருந்தாலும் இங்கு “ஓவர் வெயிட்” என்று சொல்லுவார்கள். அதிக எடைக்கு பணம் கட்டுங்கள் இல்லையென்றால் எடையை குறையுங்கள் என்பார்கள். எதை எடுப்பது, எதை விடுவது என தெரியாமல், அங்கே இங்கே என்று எடையை சமாளித்து, செக்கின் செய்து, டிக்கெட் வாங்குவதற்குள் நாலு கடல் நாலு மலை தாண்டி வந்த மாதிரி இருக்கும். இது ஒருபுறமிருக்க நடுவில் நம் வீட்டு வாண்டுகளிடம் இங்கே நில், அங்கே போகாதே என மல்லுகட்ட வேண்டும்.

அடுத்ததாக பிரிவு உபசாரம். நாமோ கணவரை பார்க்க போகிற சந்தோசத்தில் இருப்போம். குழந்தையோ தூக்கம் கெட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கும். நம் உறவுகளோ சோகமாகவும், கண்ணீருடன் இருப்பார்கள். அதற்குள் செக்யூரிட்டி செக்கிங்கு அழைப்பு வரும். எல்லோருக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு போக வேண்டும். செக்யூரிட்டி செக்கிங் செய்கிற இடத்தில் நம் குழந்தைகளுக்கோ என்ன செய்கிறார்கள் என புரியாமல், ஒத்துழைப்பு தராமல் அழுது கூப்பாடு போடுவார்கள். இதை எல்லாம் சமாளித்து குழந்தைகளையும் விமானத்துக்கு கூட்டி சென்று நம் இடத்தில் உட்காருவதற்குள் நமக்கு உயிர் போய் உயிர் வரும். அப்பாடா என்று பெருமூச்சு விடுவோம், அடுத்த வரப்போகும் பிரச்சனைகள் தெரியாமல்!

விமானத்திற்குள் நுழையும் வரை தான் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என கற்பனைகள் இருக்கும். நுழைந்த பிறகு தான் “ச்சீ இவ்வளவு தானா” என்றிருக்கும். நமது சொகுசு பேருந்துகளில் கூட இடம் தாராளமாய் இருக்கும். ஆனால் விமானத்திற்குள் அந்த அளவிற்கு கூட இடம் இருக்காது. இத்தனைக்கும் இது சர்வதேச விமானமாம்! இருக்கையை பார்த்தவுடன், “ஐயோ இந்த சீட்டிலா இன்னும் ஒன்பது மணிநேரம் உட்கார்ந்து போக வேண்டும்” என மலைப்பாக இருக்கும். விமானத்தில் ஒரு விதிமுறை இருக்கிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும்வரை அவர்களுக்கு தனி இருக்கை கிடையாது. அவர்களை நம் மடியில் தான் வைத்து கொள்ளவேண்டும். பொதுவாக வடஅமெரிக்கா செல்லும் எல்லாம் விமானங்களும் நடுராத்திரி தான் கிளம்பும். கண்டிப்பாக ஒரு இடத்தில் இடைநிறுத்தம் (Transit) இருக்கும். நான் சென்ற விமானமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. எனக்கு ட்ரான்சிட் புருசேல்சில் (பெல்ஜியம் தலை நகரம்). எனது முதல் விமானப் பயணம் ஒன்பதரை மணி நேரம். விமானம் கிளம்பும் நேரம் நடுராத்திரி ஒன்றரை மணி.

என் மகனை மடியில் வைத்து கொண்டு ஒரு வழியாக அந்த சீட்டில் உட்கார்ந்து காபின் க்ருவில் சொன்னதை போல் சீட் பெல்ட் போட்டு அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஆலோசனைகள் எல்லாம் சின்ன பிள்ளை போல் கேட்டோம். இங்கு ஏன் காபின் க்ருவென்று சொன்னேன் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். எனக்கு விமானத்தில் ஏறி உட்காரும் வரை விமான பணிப்பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். விமானத்தில் பணிஆண்கள் கூட இருப்பார்கள் என்பது அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது.

பாதுகாப்பு தகவல் தரும்போதே கேப்டன் பெயரும், மற்றும் அவரின் உதவியாளர்கள் பற்றியும் கூறிவிடுவார்கள். அந்த நடு இரவில் மெதுவாய் விமானம் புறப்பட ஆயத்தமானது. உண்மையில் அந்த இரவில் நம் சென்னை பார்க்க எவ்வளவு அழகு தெரியுமா? கொள்ளை அழகாக இருந்தது. ஊர் முழுவதும் மின் விளக்கு ஒளிமயமாக இருந்தது. அருமையான காட்சி அது. எனக்கிருந்த பதட்டத்தில் புகைப்படம் எடுக்க தோன்றவில்லை. விமானம் மேலேறும் போது (Take Off) குழந்தைகளுக்கு காது வலி வரும் என்றும், குழந்தைகளை அணைத்து கொண்டு காதையும் பொத்திக்கொள்ள வேண்டும் என்றும் பணிப்பெண்கள் சொல்லிகொடுத்தார்கள். அவ்வாறே செய்ததால்,  என் மகன் அழாமல் இருந்தான். இந்த அணைத்தலில் அவனும் தூங்கிவிட்டான். விமானம் மேலேறிய கொஞ்ச நேரத்தில் சாப்பாடு தரப்பட்டது. இரவு ஒழுங்காக சாப்பிடாததால் பசி இருக்கவே செய்தது. எந்த குழந்தைகளும் ஒழுங்காக சாப்பிடவில்லை. அப்படியே தூங்கிவிட்டார்கள். என் அருகில் லண்டன் செல்லும் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். பையனை மடியில் வைத்தே சாப்பாடும் முடிந்தது. இப்படியாக என் முதல் விமான பயணம் துவங்கியது.

நானும் உறங்கிவிட்டேன். இரவு இப்படியாக கழிந்தது. மறுநாள் காலை விடியும் போது விமானம் மெதுவாக புருசெல்ஸ் (பெல்ஜியம் தலைநகர்) நோக்கி சென்று கொண்டு இருந்தது. காலை உணவு தரப்பட்டது. குழந்தைகள் வழக்கம் போல் சாப்பிடாமல் அடம்பிடித்தார்கள். ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு குழந்தையாவது சாப்பிடாமல் அழுதது. இன்னும் எவ்வளவு நேரத்தில் விமானம் தரையிறங்கும் என தோன்ற ஆரம்பித்தது.

மெதுவாக, விமானம் தரையிறங்குவதை பற்றிய அறிவிப்புகள் வரதொடங்கியது. விமானம் புருசெல்சில் தரையிறங்கியது. அங்கு இரண்டு மணி நேரம் மட்டும் தான் இடைவெளி நேரம். வாழ்கையில் முதல் முதலில் ஒரு வெளி நாட்டு விமான நிலையத்தில் நாங்கள் இருந்தோம். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் செக்கிங் கொஞ்சம் அதிகம் தான். நான் எனது பதினைந்து மாத பையனை வைத்து கொண்டு, என் சுமைகளையும் வைத்து கஷ்டப்படுவதை பார்த்த ஒரு தோழி தன் மகன் அமர்ந்து இருந்த ஸ்ட்ரோலாரை  எனக்கு தந்து உதவி செய்தார். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் கொஞ்சம் அதிகமான தூரம் நடக்க வேண்டி இருந்தது. எனக்கு உதவிய தோழியும் கனடா தான் வருவதாக சொன்னார். அப்பாடா ஒருத்தர் நமக்கு துணைக்கு இருக்கிறார் என்று சந்தோசமாக இருந்தது. அவர் கனடாவில் செட்டில் ஆனவர். விடுமுறைக்கு வந்துவிட்டு திரும்பி வருவதாக சொன்னார். புருசெல்ஸ் ஏர்போர்ட்டில் செக்கிங் முடியவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வயதானவர்களுக்கு என்று வரிசையில் நிற்க முன்னுரிமை இருந்தது. பின்பு எங்களது அடுத்த விமான பயணம் துவங்கியது.

இவ்வளவு மோசமாக அமையும் என்று நினைத்தும் பார்க்காத பயணம் எனது அடுத்த விமான பயணம். முதல் விமானம் இரவில் தொடங்கியதால் குழந்தைகள் எல்லாம் தூங்கிவிட்டார்கள். ஆனால் அடுத்த பயணம் முழுவதும் பகல் பொழுதில். விமானம் முழுவதும் ஒரு கல்யாண வீடு போல் தான் இருந்தது. எந்த குழந்தையும் தங்கள் இருக்கையில் அமரவில்லை. குழந்தை தவழும் வயது வரை என்றால் மடியில் வைத்து சமாளிக்கலாம். ஒரு வேளை இரண்டு வயதான குழந்தைகள் என்றால் அவர்களை இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் போட்டு ஏதேனும் படம் போட்டு காண்பிக்கலாம். ஆனால் இந்த இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் எல்லாம் விமானத்தை தலை கீழாக்கி கொண்டு இருந்தார்கள். காபின் க்ரூ நபர்களை எந்த வேலைகளயும் செய்ய விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தினுசாக நடந்து கொண்டு இருந்தார்கள். ஒரே அழுகை, சண்டை, சாப்பிட மாட்டேன் என்று அடம், தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அழுகை என்று விமானம் முழுவதும் களேபரமாக இருந்தது.

குழந்தைகளை சமாளிக்க முடியாமல் என்னை போன்ற அம்மாக்கள் என்ன செய்வது என்று புரியாமல் கண்களில் நீரை நிறைத்து கொண்டு தான் இருந்தோம். எப்போது கண்ணீர் துளிகள் வெளியில் வரும் என்ற நிலைமை தான். அந்த ஒன்பதரை மணி நேர பயணம் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாததாக குழந்தைகள் மாற்றினார்கள். ஐயோ, எப்போது விமானம் கனடாவில் தரை இறங்கும் என்று தலை சுற்ற ஆரம்பித்தது. ஒரு வழியாக விமானம் வெற்றிகரமாக டொரொன்டோவில் தரை இறங்கியது.

திடீர் என்று ஒரே குதூகலமாக ஆனது. அந்த ஒன்பதரை மணி நேர போர்களமான பயணம் கூட மறந்து போய் எப்பொழுது கணவரை பார்ப்போம் என்ற ஆவல் தான் அதற்கு காரணம். இமிகிரேசன் செக்கிங், விசா ஸ்டாம்பிங் செய்யும் கவுண்டருக்கு வந்தோம். பல கேள்விகளை கேட்டார்கள். ஒருவழியாக விசா ஸ்டாம்பிங் முடிந்தது. அங்கு இருக்கும் செக்யூரிட்டி எனக்கு உதவி செய்து என் சாமான்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து உதவினார்.

எனக்கும், என் மகனுக்கும் எங்களுக்காக காத்து கொண்டிருந்த என்னவரை பார்த்தவுடன் சந்தோசம். அவருக்கும் அதே நிலைமை தான். ஏன் என்றால் விமானம் ஒரு முப்பது நிமிடம் தாமதம். அதோடு  இமிகிரேசன்  செக்கிங்கில் ஆன தாமதம் எல்லாம் சேர்ந்து ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆகியது. அன்று எங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் ஏனென்றால் அன்றைய தினம் எங்களின் மூன்றாம் வருட திருமண நாள்!

என்னடா வெறும் பயணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறது இந்த பதிவு என நீங்கள் நினைக்கலாம். இப்பொழுது தானே “லேண்ட்” ஆகியிருக்கிறோம். மேலை நாட்டில் நமது வாழ்க்கை பற்றியும், நான் கற்றுகொண்டவைகளை பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, September 19, 2012

தொடுதல் - அறியாததும்! அறியவேண்டியதும்!!!

நண்பரிடம் உரையாடும் போது, பல வருடங்களுக்கு முன்னால் என் சொந்த ஊரில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. வெளி உலகத்தை இன்னும் அதிகமாக எட்டிப்பார்க்காத ஐந்து வயதே ஆன அந்த பெண் குழந்தையை ஒரு மிருகம் சிதைத்து கொன்ற நிகழ்வு இன்னும் என் மனதில் ஆறா வடுவாய் இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நம்மை சுற்றியும் தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன் நம்மில் சில பேர் கூட இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தலை கடந்து தான் வந்திருப்போம்.

ஒரு குழந்தையை பெற்று வளர்க்க ஒவ்வொரு பெற்றோர்களும் எவ்வளவு சிரமங்களையும், கஷ்டங்களையும் தாண்டி வருகிறோம். அவ்வாறாக வளர்க்கும் நம் குழந்தைகளை இந்த மாதிரியான நிகழ்வுகளில் இருந்து காப்பாற்ற நாம் சிறு சிறு விசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நண்பர்களே!

குழந்தைகளை பிடிக்காத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல் நாம் அந்த குழந்தையை கொஞ்சுவதற்கு முத்தங்களை தான் கொடுக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா குழந்தைகளுக்கும் முத்தங்களை பரிசாக வழங்கி, வளரும் அந்த பிஞ்சு மனதில் அவை அன்றாட வாழ்விற்கு தேவை என்பது போல ஆக்கிவிடுகிறோம். யார் முத்தம் கொடுத்தாலும் அந்த குழந்தையும் யதார்த்தமாய் அதை வாங்கி கொள்கிறது. இங்கு தான் பிரச்சனையின் ஆரம்ப கட்டம். குழந்தை தன் பெற்றோர்களை தவிர மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று நாம் சொல்லி தருவதில்லை, அதை பற்றி யாரும் யோசிப்பதும் இல்லை. இதனாலே பாதி பிரச்சனைகள் வருகிறது.

அந்த காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே என்று கூட நினைக்க தோன்றும். முன்பு நாம் பெரும்பாலும் கூட்டு குடும்பங்களாக  இருந்தோம். நம் குழந்தைகளை நம் பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள். நம்மில் பல பேர் நம் பாட்டி, தாத்தாவிடம் தான் வளர்ந்து இருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறோம். வேலை நிமித்தமாக  சொந்த ஊரினை விட்டு விட்டு வேறு எங்கோ வாழ்கிறோம். குழந்தைகளை "டேகேர்" அல்லது வீட்டில் தனியாக தான் இருக்கிறார்கள். இதுவே இந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக  இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து நம் குழந்தைகளை நாம் எப்படி காப்பற்றுவது?

நாம், நம் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? முதல் கட்டமாய் நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். குழந்தை அறியா வயதில் இருக்கும் போதே குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்களிடம் முத்தம் கொடுக்காதீர்கள் என்று சொல்லுங்கள். அப்படி சொல்வதில் தவறொன்றுமில்லை. நாம் குழந்தைகளை காக்க நாம் தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். இதை சொல்லும் போது நாம் நிறைய எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிதான் வரும். "இவங்க மட்டும் தான் குழந்தை பெத்து வளர்க்கிறார்களா?", "என்ன அதிசயமாக வளர்க்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசத்தான் செய்வார்கள். அதை எல்லாம் பொருட்படுத்த கூடாது.

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச, கற்று தர கூச்சப்படும் விசயம் "குட் டச்", "பேட் டச்". குழந்தைகளிடம் அவர்களின் இரண்டரை வயதில் இருந்தே யாரும் முத்தம் கொடுக்க கூடாது. முத்தம் கொடுக்க சொன்னாலோ, முத்தம் கேட்டாலோ தரமாட்டேன் என்று சொல்ல கற்று கொடுங்கள். யாரேனும் முத்தம் கொடுக்க முயன்றால் அம்மாவிடம், அல்லது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். முத்தம் மட்டும் இல்லை, குழந்தைகளிடம் அவர்களின் உடலில் எந்த பாகத்தையும் யாரையும் தொட அனுமதிக்க கூடாது என்பதையும்  சொல்லி கொடுங்கள். அதையும் மீறி யாரேனும் உங்களிடம் தவறாக   நடந்தாலோ அல்லது தவறாக நடக்க முயன்றால் எவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் தப்பிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுங்கள். குழந்தைகளுக்கு நான்கு வயது முதல் தற்காப்பு கலைகளையும் கற்று கொடுங்கள். முடிந்த வரை குழந்தைகளை யாரிடமும் தனியாக  விட்டு செல்லாதீர்கள். பெரும்பாலான குழந்தைகள் பாலியல் தொந்தரவை அனுபவிப்பது தெரிந்த மற்றும் உறவுமுறைகளிடம் தான். உங்களுக்கு நம்பகமான நபர்களை தவிர குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்லாதீர்கள்.

என் நண்பர் ஒருவரிடம் பேசும் வரை, பெண் குழந்தைகள் தான் அதிகம்  பாதிக்க  படுகிறார்கள் என நினைத்து இருந்தேன். ஆண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தான் நினைத்து இருந்தேன். அது  எவ்வளவு பெரிய  தவறு என்று பின்பு தான் தெரிந்தது. குழந்தைகளில் ஆண், பெண் என்று பாரபட்சம் இல்லாமல் எப்படி நாம் வளர்க்க வேண்டுமோ அதே போல் தான் இந்த விசயத்திலும் சொல்லித்தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஒரு விதமான பாதிப்பு என்றால் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவதோ வேறு விதமாக. சிறு வயதில் அவர்கள் எதிர்  கொள்ளும்  இந்த மாதிரியான  பிரச்சனைகளால் அவர்கள் மனதளவில், சிறு வயதில் இருந்தே பாதிக்கபட்டு வளரும்போதே, மற்ற ஆண்கள் மீதோ பெண்கள் மீதோ ஒரு வித வெறுப்பில் வளர்கிறார்கள். இதுவே அவர்கள் வளர்ந்த பிறகு பல தவறுகளுக்கு அடித்தளமாக மாறி விடுகிறது.

இவை அனைத்தையும் மீறி யாதேனும் தவறு நடந்தாலும் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் ஆதரவும், ஆதரவான வார்த்தைகளும் தான் அவர்களை அவற்றில் இருந்து வெளியில் கொண்டுவர  உதவும். நம்மில் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பராக பழகுவதில்லை. நண்பராக பழகாததால் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயக்கம்  கொள்கிறார்கள். பாலியல் தொந்தரவில் பாதிக்கப்படும் குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் வெளியில் சொல்ல கூடாது என்று மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு பயந்து குழந்தைகளும் இதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் குழந்தைகளிடம் கண்டிப்பாக ஒரு மாறுதலை நீங்கள் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு சோகத்துடன், தனிமையில் இருப்பார்கள்.  இந்த மாதிரி ஏதேனும் மாறுதலை உங்கள் குழந்தைகளிடம் கண்டால் அவர்களிடம் கோவம் கொள்ளாமல் ஒரு நண்பராக அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேளுங்கள்.

நாம் ஒரு நண்பராக பழகினால் மட்டுமே குழந்தைகளும் நம்மிடம் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் அவர்களின் பிரச்சனைகளை சொல்வார்கள். அவர்கள் சொல்லும் போது எந்தவித கோவத்தையும் அவர்களிடம் காட்டாமல், இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களுக்கு நாம் தான் தைரியம் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் இந்த பிரச்சனையில் இருந்தும் வெளியில் வர முடியும்.

இந்த பாதிப்பை பொறுத்தவரை ஆண், பெண் என்று எந்தவித வித்தியாசங்களும் இல்லை. அவர்களை குழந்தைகளாக பார்த்து அவர்களுக்கு இந்த பாதிப்புகளில் இருந்து வெளியில் கொண்டு வருவதும் பெற்றோர்கள் கைகளில் தான் இருக்கிறது. குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்கும், நாளை இந்த சமூகத்தை அவர்கள் தைரியமாக எதிர் கொள்ளவும் இந்த மாதிரி சிறு சிறு முயற்சிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக நம் பிள்ளைகள் இந்த உலகத்தை எளிதில் எதிர் கொள்வார்கள்.  முயலுங்கள் இன்றே, நம் பிள்ளைகளுக்காக!!!

மேலும் அறிய:
குட் டச், பேட் டச் - தீபா
குட் டச் - பேட் டச் /Stranger Safety! - சந்தனமுல்லை