Tuesday, November 6, 2012

கனடா எனது பார்வையில்!


என் நீண்ட பயணத்தின் முடிவில் நான் வந்து சேர்ந்த இடம் கனடா. மிகவும் அழகான நாடு. கனடா ஒரு பல கலாச்சார நாடு. கனடாவின் பூர்விக குடியினர் என்று இருப்பவர்கள் இங்கு  மிக மிக குறைவு. பல நாட்டு பல இனத்து மக்களையும் நீங்கள் இங்கு காணலாம். இங்கு இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்களை பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் பலவருடங்களுக்கு முன்பே இவ்வாறு யோசித்து கட்டினார்கள் என்றே தோன்றுகிறது . நம் நாட்டிலோ சற்று தலை கீழ் தான். இப்பொழுது அதை பற்றி இங்கு வேண்டாம். கனடா மிகவும் நேர்த்தியாக மக்கள் நலத்திட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்றும் நாடு. பார்த்தவுடன் பிடித்துபோகும் நாடு தான் கனடா. இந்த பதிவு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ தொகுப்பே.

வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும், தேவையான பொருட்கள் வாங்குவதிலும் முதல் சில நாட்கள் ஓடி போய் விட்டது. ஒரு விஷயம் இங்கு சொல்லியே ஆக வேண்டும், பெரும்பாலான ஆண்கள் சொந்த ஊரில் எப்படியோ தெரியவில்லை ஆனால் அயல் நாட்டிற்கு வந்தபிறகு அவர்கள் இல்லத்தரசிகளுக்கு  உதவி செய்வதில் எள்ளளவும் தயங்குவதில்லை. இதை  நான் என் குடும்பத்தை மட்டும் வைத்து சொல்லவில்லை. என்னை சுற்றி இருக்கும் என் தோழிகளின் குடும்பங்களை வைத்தும் தான் சொல்கிறேன். அதற்காவே ஆண்களுக்கு ஒரு சல்யுட்.

அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் சில விசயங்கள் நமக்கு வினோதமாகவே இருக்கும். அவற்றை கற்று கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்றுகொள்ளும் பொழுது ஏற்படும் அனுபங்களை சொல்லவேண்டும் என்றால் எழுதி கொண்டே போகலாம். எனக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை மட்டும் இங்கு பதிகிறேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆன பிறகு மதியம் நானும் என் பையனும் மட்டும் வீட்டில் இருந்தோம். திடீர் என்று பயர் அலாரம் அடிக்க தொடங்கியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கணவரை செல்பேசியில் அழைத்தேன். நாம் தேவைக்கு அழைக்கும் பொழுது தானே நம் வீட்டில் உள்ளவர்கள் மீட்டிங்கில் இருப்பார்கள். போன் எடுக்கவில்லை. கதவை திறந்தால் என்னை தவிர யாருமே வெளியில் இல்லை. எனக்கும் என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் புரியவில்லை.

நம்மூரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொழுது சொல்லி கொடுத்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. லிப்ட் பயன்படுத்த கூடாது, உடனே வெளியில் செல்ல வேண்டும் என்று எல்லாம் மனதில் வந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது, ஏன் நம்மை தவிர யாருமே வெளியில் வரவில்லை என்று. ஒரு வழியாக என் பையனையும் தூக்கிக் கொண்டு பல மாடி படிகள் இறங்கி வந்து கீழே பார்த்தால் கொஞ்சம் நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடா, நல்ல வேலை இங்காவது ஆட்கள் இருக்கிறார்களே என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன். பின்பு தான் தெரிந்தது பயர் அலாரம் அடித்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை. அதனால் தான் அவர்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு தான் என் கணவரின் அழைப்பு வந்தது. நான் நடந்ததை சொன்னால் அந்த பக்கம் ஒரே சிரிப்பு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பின்பு தான் தெரிந்தது இங்கு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஒரு வீட்டில் இருந்து சமைக்கும் பொழுதோ இல்லை எதில் இருந்தோ புகை வந்தாலும் ஸ்மோக் அலாரம் அடிக்கும். அதை குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் செல்லும். அங்கு தகவல் சென்ற உடனே அபார்ட்மென்டில் உள்ள எல்லா வீடுகளிலும் இதே போல் அலாரம் அடிக்கும். பெரும்பாலும் இதே போல் அடிப்பது எல்லாம் “பால்ஸ்” அலாரம் ஆகவே இருக்கும். இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் எல்லாம் மரத்தினை கொண்டு கட்டுவதால் இது எல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று தெரிந்து கொண்டேன். தீயணைப்பு வீர்கள் சொல்லாமல் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என்பதையும் சொன்னார் என் கணவர். அவருக்கோ சிரிப்பு, எனக்கோ இத்தனை மாடி பையனை தூக்கி கொண்டு இறங்கி வந்ததை நினைத்தால் கோபம் தான் வந்தது. இது போல பல சம்பவங்கள் நமக்கு அனுபவ பாடமாகவே இருக்கிறது.

எல்லோருக்கும் அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் நவீன சாதனங்களை எல்லாம்  பார்த்து கொஞ்சம் மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அது போல் தான் எனக்கும். உதாரணத்திற்கு துணி துவைப்பது. இங்கு வந்தவுடன் துணி துவைப்பது எல்லாம் எந்திரம் மூலம் என்றவுடன் உண்மையை சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது. துணி துவைப்பது இலவசம் என்று நினைத்தே சென்றேன். அங்கு போன பிறகு தான் தெரிந்தது அவை எல்லாமே டாலர்கள் என்று. ஒரு “லோடு”  துணிகளை துவைத்து காய வைப்பதற்கு நாம் செலவு செய்ய வேண்டியது 4.1 டாலர்கள். நம் இந்தியா மதிப்பிற்கு கணக்கு பார்க்கும் பொழுது நாமே நம் வீட்டிலே ஏன் துவைக்க கூடாது என்று தோன்றியது. இதில் என்ன கொடுமை என்றால் நாம் வாங்கும்  சோப்பு பவுடர்கள் இங்கு கிடைக்கும் துணிகளை துவைப்பதற்கு என்று தயார் செய்யப்பட்டது. நம் துணிகளுக்கு அது ஒத்து வராது. துணிகள்  எல்லாம் பாழாகிவிடும். அல்லது ஒரு துணியின் நிறம், இன்னொரு துணி மேல் படிந்து பெரும்பாலும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இவ்வளவு பணம் செலவு செஞ்சிட்டு துணியும் பாழாகணுமா இதற்கு வீட்டிலே துவைக்கலாமே என்றே தோன்றும்.

இன்னொன்று இங்கு இருக்கும் தட்ப வெட்ப நிலைக்கு நம்மால் துணிகளை வீட்டில் துவைத்து காய வைப்பது என்பது நம் ஊரை போல் எளிதில்லை. நம் ஊர்களை போல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் துணிகளை கயிறு கட்டி காயவும் வைக்க முடியாது. கனடாவில் வெயில் பார்ப்பதும், வெயிலின் தாக்கத்தை உணர்வதும் வருடத்தில் வெறும் மூன்று முதல் நான்கு மாதங்கள் தான். பெரும்பாலும் வெப்பநிலை ஒற்றை இலக்கத்திலும், குளிர்காலத்தில் மைனஸ் பதினைந்துக்கும் கீழே தான் இருக்கும். இதில் துணிகளை எங்கு நாமே துவைத்து காயவைப்பது.

இங்கு நம் நாட்டில் உள்ளது போல் பணிப்பெண் வைத்து கொள்ளும் வழக்கம் இல்லை, ஒரு வேலைக்கு என்று நீங்கள் அடுத்தவரை நாடினால் ஒரு கணிசமான பணம் எடுத்து வைத்தால் மட்டுமே முடியும். எல்லா வேலைகளையும் நாமே தான் செய்ய வேண்டும். இங்கு வந்த பிறகு எனக்கு பெரிதும் கடினமாக இருந்த வேலை இஸ்த்திரி பண்ணுவது. பல காலங்களாய் வெளியில் இஸ்த்திரி செய்து பழக்கப்பட்ட எனக்கு அந்த வேலை செய்வது மிகவும் சிரமமாய் இருந்தது. குழந்தை வைத்து கொண்டு இந்த மாதிரியான வேலைகளை தனியாக செய்வதும் இங்கு கொஞ்சம் சிரமமே. ஏதேனும் அசம்பாவிதம் நடந்து நாம் மருத்துவனைக்கு அழைத்து சென்று, அவர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் அளிப்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்,  நம் குழந்தைகளை  அரசாங்கமே தங்கள் பாதுகாப்பில் எடுத்துகொள்ளும். அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை வரும்வரை குழந்தைகளை தரமாட்டார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பில் அரசாங்கம் பெரிதும் கவனம் செலுத்துகிறது. நீங்கள் கேட்கலாம் அப்போ குழந்தை பராமரிப்பில் பல தவறுகள் நடக்கிறதே என்று. உண்மை தான். அது பெரும்பாலும் அரசாங்கம் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் இடத்தில் தான் பெரும்பாலும் நடக்கிறது. பள்ளியிலே குழந்தைகளுக்கு பாதுக்காப்பாக இருப்பது பற்றி சொல்லித்தரப்படுகிறது. அவசர தேவைக்கு 911 எண்ணை அழைக்கும்படி சொல்லித்தருவார்கள். குழந்தைகள் 911 எண்ணை அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.

வேலை வாய்ப்பை பொருத்த வரை இங்கு எப்போது வேலை இருக்கும் எப்போது வேலை இருக்காது என்று சொல்ல முடியாது. பணிநீங்கம் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும். ணிநீக்கம் செய்யப்பட்டால் அரசாங்கமே சில வாரங்களுக்கு  ஊக்க தொகையாக அவர்கள் முன்னால் வாங்கிய சம்பளத்தின் நான்கில் ஒரு பங்கு தரும். அந்த காலகட்டத்திற்குள் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளவேண்டும். அதனால் இங்கு யாரும் இந்த வேலைக்கு தான் செல்வேன் அதற்கு செல்லமாட்டேன்  என்று சொல்ல முடியாது. எந்த துறை சேர்ந்தவர்களும் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். மருத்துவம் படித்தவர்கள் கூட டாக்ஸி ஓட்டுனராக பணி செய்வார்கள்.

இங்கு வருவதற்கு முன்பு வரை பனி எல்லாம் நான் சினிமாவில் பார்த்ததுதான். முதல் முதலில் பனி பெய்வதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாகவும் அழகாகவும் இருந்தது. ஒவ்வொரு பனி துகளிலும் இருக்கும் அந்த அழகிய வடிவத்தை ரசித்து ரசித்து பார்த்தேன். பனி பெய்து முடித்தவுடன் ஊரே பார்க்க மிக அழகாக இருக்கும். மொத்த ஊரும் வெண் போர்வை போர்த்தியது போல் இருக்கும். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான். பனி காலம் தான் இருக்கிறதிலே மிகவும் கொடுமையான நாட்கள். எல்லோரும் வீட்டிலே பலநாட்கள் அடைந்து கிடக்கும் தருணமும் அது தான். எப்படி அளவுக்கு மிஞ்சினால் நஞ்சோ அது போல் தான் பனி காலம் இங்கு. பனி காலத்தில் பகல் பொழுதின் நேரம் மிகவும் குறைவு. பனிகாலத்தில் வெளிச்சம் என்பது மிக குறைவு. வீட்டிலும் எப்பொழுதும் மின் விளக்கு இல்லாமல் இருக்க முடியாது.

“டிபெண்டண்டாக” கணவனை சார்ந்து வரும் பெண்கள் பெரிதும் பாதிப்பு அடைவது இந்த காலத்தில் தான். தனிமை அவர்களை பெரிதும் பாதிக்கும். மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்து வருபவர்களுக்கே  குளிர் காலத்தில் ஏற்படும் இந்த தனிமை மன அழுத்ததை கொண்டு வரும். அவர்களுக்கு இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கவுன்சலிங் கூட நடக்கும். அவர்களுக்கே இந்த கவுன்சலிங் தேவை என்றால் நம்மை போன்றவர்களுக்கு குளிர் காலம் எவ்வளவு சிரமம் என்று பார்த்து கொள்ளுங்கள்.

நான் கல்லூரி முடிக்கும் வரை எனக்கு பாகிஸ்தான் என்றால் என் எதிரி நாடு என்று தான் நினைத்து இருந்தேன். பின்பு அந்த எண்ணத்தில் மாற்றம் வந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒரு பாகிஸ்தானியரிடமும் நான் பழகியது இல்லை. கனடா வந்த பிறகு எனக்கு அவர்களிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்ன அழகான மக்கள் அவர்கள். இவர்களை எப்படி நாம் எதிரியாக பார்த்தோம்? நான் பல நாட்கள் என்னை நானே திட்டிய நாட்களும் உண்டு. மிகவும் தோழமையுடன் பழகும் குணம் கொண்டவர்கள் அவர்கள். என் மகனை பள்ளிக்கு கூட்டி செல்பவர் ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. என் மகனை தன் மகனாக பார்க்கும் குணம் உள்ளவர். குழந்தைகளிடம் மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்தையும் தன் குடும்பமாக பார்க்கும் எண்ணம் உள்ளவர். அவர் மட்டும் இல்லை என் எதிர் வீட்டு தோழியும் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான். இவ்வளவு அன்பான மக்களை, மிகவும் பவர்புல் மீடியா ஆன சினிமா, டிவி மற்றும் அரசியல்வாதிகள் எப்படி நம்மை எதிரிபோல் பார்க்க வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

கனடா வந்த பிறகு எனக்கு சில வருத்தங்களும் உண்டு. அதுவும் நம் இந்திய தமிழர்களிடம் தான். அயல் நாட்டில் நம் மக்களை பார்க்கும் பொழுது நம்மை மீறிய ஒரு சந்தோசத்தில் அவர்களிடம் பேசுவதற்கு ஆவலாய் ஓடுவோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்ததும், பார்க்காமல் போவதை பார்க்கும் பொழுதும், நாம் ஏதேனும் பேச முயலும் பொழுது அவர்கள் பதில் சொல்லாமல் நம்மை புறக்கணித்து செல்வதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏன் நம் மக்களே நம்மை புறக்கணித்து செல்கிறார்கள் என்று தோன்றும். எங்கே நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை பார்க்காமல் புறக்கணித்து ஓடுகிறார்கள் நம் தமிழர்கள். ஒரே நிறுவனத்தில் வேலை செல்லும் நபர்கள் மட்டும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வது உண்டு. அங்கு குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு வாங்கி இருக்கும் நம் இந்திய தமிழர்கள் தான் நம் மக்களை பார்த்த‌‌தும் தலை தெறிக்க ஓடுவதும் எந்த ஒரு உதவியும் செய்து கொடுக்க முன்வராதவர்கள்.

ஒருத்தர் தாய் மொழி மறப்பது என்பது தன் தாயை மறப்பது போல் தான். நான் கனடாவில் பார்த்து அதிர்ந்த மற்றொரு விசயம் நம் இந்திய தமிழர்கள் நம் தாய் மொழியை மறந்து போனது தான். ஆங்கில மோகம் இன்னும் நம் இந்திய தமிழர்களுக்கு குறையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது ஏன் என்று தெரியவில்லை தாய் மொழியை மறப்பது என்பது நம் இந்திய தமிழர்கள் மட்டுமே . ஒரு வட இந்திய குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் அவர்கள் தாய் மொழியான பஞ்சாபியோ, குஜராத்தியோ. ஹிந்தியோ தான் பேசுகிறார்கள். ஆனால் நம் இந்திய தமிழர்கள் தான் தங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதை நானே பல முறை இங்கு பார்த்திருக்கிறேன்.

ஒரு வட இந்திய குடும்பம் தங்கள் குழந்தைகளிடம் அவர்களின் தாய் மொழியில் தான் உரையாடுகிறார்கள். குழந்தைகளும் அவர்களின் தாய் மொழியில் தான் தங்கள் பெற்றோர்களிடம் உரையாடுகிறார்கள். இதுவே ஒரு இந்திய தமிழ் குடும்பம் என்றால் தங்கள் குழந்தையிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள். பின்பு எப்படி குழந்தைகள் தாய் மொழியில் பேசுவார்கள். இதை கண்டிப்பாக நம்மவர்கள் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும். நம் பிள்ளைகளும் தாய் மொழியை மறக்காமல் பேசுவார்கள். இதுவே இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் நிச்சயம் தமிழில் தான் உரையாடுவார்கள். அவர்களின் தமிழ் உரையாடல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கும். இலங்கை தமிழர்கள் நம் பேச்சை கேட்பதற்கும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலான நம் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தபடவேண்டிய விசயம்.

இந்த சின்ன சின்ன நெருடல்களை தவிர்த்து பார்த்தால் கனடா மிக அழகான நாடு. எல்லோருக்கும் பிடிக்கும். இருப்பினும், பண்டிகை காலங்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றை உறவுமுறைகளுடன், நட்புறவுகள் ஆகியோருடன் சேர்ந்து பகிர்தலை இழக்கிறோம். அவர்களது இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்கெடுக்க முடிவதில்லை. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருவதில்லையே!