Monday, November 4, 2013

அலுவலகம்

எதை பற்றியும் 
கவலை இல்லாத காலம் 
கல்லூரி காலம்! 

வாழ்க்கை பயணத்தில் 
வாழ்வு பயத்தினை 
காட்டி செல்லும் காலம்
வேலைக்கான தேடல் படலம்!!

என் தேடலும் 
என் கண் முன்னே 
அப்பயத்தினை காட்டி
என் மீதான தன்னம்பிக்கையை 
ஆட்டி பார்த்த காலம்!

காலத்தின் முடிவில் 
என் முதல் வேலை !
என் முதல் வேலை
சந்தோசத்தின் உச்சம் !!

வேலையை பற்றியே 
மனம் சுற்றிய நாட்கள் 
பேருந்து ரயிலென மாறி மாறித்
தொடும் அலுவலகம்.
வார்த்தைகளின் கூட்டங்களாய் 
வேலை வலை விரிக்கும்.
கணினியின் கரங்களின் பிடி 
எப்போதும் அலை கழிக்கும்
வாரத்தின் கடைசிக்காய் ஏங்கும் நாட்கள்
திங்களின்  விடியலில் தொடங்கும் ஓட்டம்!

பணியின் கரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை
பணியின் நாட்கள் அற்புதமானவை
திசைக்கொன்றான பறவைகள்
தினம் கூடும் கூடு வேலையின் கூடு.
கூடு ஒன்றே பறவைகள் பலவிதம்!

தேடலில் கற்றவை அனைத்திலும் 
தோழன் தோழியருக்கும் பெரும் பங்குண்டு. 

ஆம்,
நம்மை செதுக்கிய சிற்பிகள் அல்லவா அவர்கள்.
நம்மை செதுக்கி கொண்டே 
இருப்பவர்களும் அவர்களே !!

ஒவ்வொருவரின் முகத்திலும் 
ஒவ்வொரு பரிமாணங்கள் 
ஒவ்வொருவரும் கற்று கொடுத்த பாடம் 
ஆயிரம் ஆயிரம்.
இன்னும் கற்றுக்கொண்டே 
தொடரும் பயணம் !

கால ஓட்டத்தில் கூடுகள் மாறும்.
புது புது பறவைகளுடன் 
சேர்ந்தே பயணிக்கும்.
பார்த்தவுடன் சிலரை பிடிக்கும், 
பழக பழகவே பலரை பிடிக்கும்.

ஏமாற்றங்களை கற்று கொண்டு, 
வாழ்க்கை பயணத்தில் 
அதை 
படிக்கட்டுகளாய் மாற்றி 
முன்னேறி கொண்டே 
இங்கு வரை வந்துவிட்டோம் 
இன்னும் பயணிப்போம். 

தேடல் மற்றும் 
தேடலுக்கான முயற்சிகள் 
மட்டும் முடிவதில்லை.......
தேடல்கள் தொடரட்டும் !!!!!

Tuesday, August 6, 2013

விழியனின் "மாகடிகாரம்" - நூல் அறிமுகம்

வாழ்க்கையில் சில பொருட்களை திரும்ப பார்க்கும் பொழுதோ, அதை பற்றி யோசிக்கும் பொழுதோ அவை நம்மை நம் வாழ்வின் சந்தோசத்துடன் கழித்த அந்த அரிய நிமிடங்களை திருப்பி தந்து சந்தோசப்பட‌ செய்யும். மீண்டும் அவற்றுடன் நம்மை பயணிக்க செய்யும். அது போல் தான் நேற்றைய என் இரவு இருந்தது. என் வாழ்வை என் பால்யத்திற்கு மீண்டும் அழைத்து சென்ற பெருமை, நான் இன்றும் நேசிக்கும் எனக்கு பிடித்த என் சுவர் கடிகாரம்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவன் எங்கள் குடும்பத்தின் ஒருவனாய் தான் இருந்தான். எத்தனை மணியோ அந்தனை தடவை மணி அடித்து, தூங்கும் பொழுதும் நான் உன்னுடன் இன்றும் இருக்கிறேன் என்று எப்பொழுதும் சொல்லி கொண்டே இருக்கும். இப்போ எதற்கு இந்த பீடிகை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கு இந்த நினைவுகளை மீட்டு திருப்பி தந்தவர் விழியன். ஆம் அவரின் "மாகடிகாரம்" புத்தகம் தான்.

இதுவரை குழந்தை இலக்கியம் படித்ததில்லை. இதுவே முதல்முறை. இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். "மாகடிகாரம்" - என்னும் தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் பற்றிய புத்தகம் அது. இவை முழுக்க முழுக்க சிறுவர்களுக்கு என்று மட்டுமே சொல்ல முடியாது. என்னை போன்ற வளர்ந்தவர்களும் வாசித்து கற்று கொள்ள நிறையவே இருக்கிறது. 


சிறுவன் தீமனை சுற்றியே கதை சுழல்கிறது. தீமன் ஒரு வட்டதிற்குள் சிக்காமல் தன் எண்ணப்படி பயணிக்கிறான். அவனின் கற்றல், அவன் குடும்பம், அவன் தோழன், என்று ஒரு பரந்த‌ உலகில் இருக்கிறான். தன் பள்ளி படிப்பில் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் அவன் அதை கடந்து செல்கிறான், மிக அழகாக. குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் தனக்கே உரித்தான அந்த தேடலின் பொழுது தான் மாகடிகரம் பற்றியும், அதன் இயக்கும் முறை பற்றியும், அவன் கற்று தெரிந்து கொள்கிறான். மாகடிகாரத்தால் இவ்வுலகம் செயல்படும் முறை என்று எல்லாம் தெரிந்து கொள்கிறான்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த‌ மாகடிகாரம் அவனின் முழு கவனிப்பில் வருகிறது. தனக்கே உரித்தான சுட்டித்தனத்தால் அவற்றை பயன்படுத்தி அதை பழுதடைய செய்கிறான். மாகடிகாரத்தை பாதுகாப்பவர்கள் இப்பழுதால் இவ்வுலகில் என்ன நடக்க போகிறதோ? என்று பயம் கொள்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி இவ்வுலகை காப்பாற்றுகிறான் என்பதே இக்கதை. எப்படி காப்பற்றினான் என்பதை புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

இப்புத்தகத்தில் எனக்கு பிடித்த இடம் நிறையவே. கதை ஓட்டத்துடன் ஆசிரியர் அறிவியலை மிக அழகாக உள்புகுத்தி அதை குழந்தைகளும் எளிதில் புரியும் படி எழுதி இருக்கிறார். குறிப்பாக விநாடி, நிமிடம் என்று பலவற்றை மிக எளிதாக சொல்லி இருக்கிறார். பொதுவாக நம் பள்ளிகளில் படிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற தனித்திறமைக்கு கொடுப்பதில்லை என்பதை சொன்னவிதம் பிடித்திருந்தது. 

இக்கதையில் வரும் தீமனின் தந்தை கதாபத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவரை போன்ற பெற்றோர்கள் கிடைக்கும் குழந்தைகள் வாழ்வினில் தங்களின் தேவை மற்றும் வாழ்வியலை நிர்ணயித்து பயணிப்பார்கள். எப்பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். 


இக்கதையில் மாகடிகாரத்தை தேடி செல்லும் பயணம், அங்கு அவனுக்கு (தீமனுக்கு) கிடைத்த தோழமை, அவனின் யோசனைகள் என்று அனைத்தையும் ரசித்தேன். எல்லாமே ஒரே நேர் கோட்டியில் பயணித்தது. இப்புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் புத்தகத்தில் வரைந்த ஓவியங்கள், பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் ஆசிரியரின் எழுத்து நடை அருமை. ரசித்து என்னையும் தீமனுடன் சேர்ந்தே பயணிக்க செய்தார்.

நீங்களும் புத்தகத்தை படித்து பாருங்கள்....... குழந்தைகளோடு குழந்தையாகி!




புத்தகம் : மாகடிகாரம் 
பதிப்பகம் : புக்ஸ் பார் சில்ரன் 
விலை : 30 ரூபாய்
பக்கங்கள் : 47

Saturday, August 3, 2013

சாரல்கள் - 3

உன்
எல்லா பயணத்திலும்
சேர்ந்தே பயணிக்கும் என்னை,
உன்
எல்லை இது என
தனித்து விட்டு செல்லும் உனக்காக,
உன்
அடுத்த பயணத்திற்கும்
தயாராகவே நான்...

- செருப்பு

எல்லா சிக்கல்களையும்
நீயே தீர்க்கிறாய்
என்ற கர்வம் உனக்கு!
உண்மையில்
உன் தீர்க்க படாத
சிக்கல்களுக்கு நானே தீர்வு!!

- சீப்பு

உன்னையும், என்னையும்
எந்த தொழில்நுட்பம் இணைத்தாலும்!
நினைக்கும் பொழுது
தோள் கொடுக்கவும், தோள் சாயவும்,
நீ என் அருகாமையில்
இருப்பது போல் வருமா!

- பிரிவு

வெற்றி தரும் மகிழ்ச்சியில்
தோல்வி தரும் துக்கத்தில்
பயணம் தரும் களைப்பில்
எல்லாவற்றிலும்
உன்னுடனே இருக்கும் என்னை
வேண்டாம் என்று அந்நியபடுத்துகிறாய்,
சிறு பிள்ளை போல்!
நான் இல்லாமல் எப்படி
இவ்வுலகில் தனியாய் நீ மட்டும்!

- நினைவுகள்

என்னை அழகாக்க
என்னை சிரிக்க வைக்க
என்னை உத்வேகப்படுத்த
என்னை சந்தோசப்படுத்த
நீ சொல்லும் பொய்களையெல்லாம்
நான் நம்பிக்கொண்டிருப்பதாக
நடித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்காக...

- பொய்கள்



எனக்கான எல்லையை, நீயே தீர்மானித்து
என்னை ஓட செய்கிறாய், அந்த எல்லையை நோக்கி!
எல்லையை தொடும்முன்
எனக்கான அடுத்த இலக்கையும் நீயே தீர்மானிக்கிறாய்!
மீண்டும், மீண்டும்!
புரிந்தும், புரியாமலும்!
நீ சொல்லும் இலக்கை நோக்கியே நான்!

- ஆசைகள் (சமயத்தில் ஆகின்றன பேராசைகளாய்!)

என்னை உயரத்தில் வைத்து
அழகு பார்ப்பவள் நீ !
உனக்கு எட்டாகனியாய்
இருந்துடுவேனோ என்று நினைத்து,
உன் பிடிமானத்தை
என் மேல் இறுக்கி
என்னை காற்றின் திசைக்கு ஏற்ப
ஆடவிடாமல் செய்வது நியாய‌மா?

- பட்டம்

கவலைகளை போக்கும்
அரும்மருந்தாய் நினைத்தாய்
இறுக்கமான சூழலில்
விடுவிப்பதாய் கூறினாய்
சந்தோசத் தருணத்தில்
கிளர்ச்சியூட்டுவது என்றாய்
பொழுதுபோகா நேரத்தில்
தோழமை என்றாய்
பின் ஏன்
உன்னுடன் என்னையும் சேர்த்து
துயரத்தில் ஆழ்த்தி சென்றது !

- புகைத்தல்

நானே
கேள்விகளை கேட்டுக்கொண்டு
அதற்கு,
நானே
பதிலும் அளித்துக்கொண்டு
யோசிக்க முயற்சிக்கிறேன்.

சில நேரங்களில்
தெளிவு பிறப்பதுண்டு
ப‌ல நேரங்களில்
குழம்பியதுண்டு
ஆனால்,
கேள்விகள் மட்டும்
முடிவதாக இல்லை!

- கேள்விகள்

என் சந்தோசங்கள், துயரங்கள்
என் வெற்றி,தோல்வி என
என்னுளே பொதிந்து,பொதிந்து
எனக்கே உரமாய் மாறி,
ஊக்குவித்து
என்னை  மீண்டும் மீண்டும்
எழ செய்து அழகு பார்ப்பதற்கு
உன் ஒருவனாலே முடியும்
எந்த பிரதிபலன் இல்லாமல்!

 -  என் அனுபவம் 

Saturday, July 27, 2013

சாரல்கள் - 2


என் முயற்சி
என் வலிமையால்
மட்டுமே என்னால்
மேலே மேலே செல்ல முடியும்
என ஊக்குவித்தவன் நீ!
வாழ்வின் ஏற்ற தாழ்விற்கும்
என்னை பழக்கியவன் நீ!

- ஊஞ்சல்


என் வாழ்வு
உன்னோடு இன்று ஒரு நாள் தான்
தெரிந்தும்
உன்னை அழகாகவே வைத்திருக்கிறேன்
மறந்தும் கண்ணீர் விட்டு
சீக்கிரம் முடித்து விடாதே
என் வாழ்வை!

- கண் மை


என் வலிகள் கேட்க
எந்த காதுகளுக்கும் நேரம் இல்லை
உன் வலிகளை கேட்பதற்காகவாவது
என் காதுகள் இருக்கட்டுமே!

- என் காதுகள்


எப்பொழுது தான் அடங்கும்
உன் பசி
இந்த தீரா பசியை
நாங்கள் போக்குவதற்குள்
இன்னும்
எத்தனை எத்தனை
உயிர்களை தின்பாய்........:(((

- சாதி வெறி


நீ பார்த்து பேசாமல்,
உன் மூலம் பார்த்து பேசும்
பல உள்ளங்களின்
சந்தோசத்தை கண்டு
ஏக்க பெருமூச்சி விட்டு,
துயரங்களை கண்டு
மனம் கனத்து,
அவ்வப்பொழுது,
தொடர்பினை துண்டித்து விடுகிறாயோ!

- SKYPE


கடன் வாங்கி,
நகை வாங்கும்
கோமாளித்தனம்!

- அட்சய திருதியை


உன்
எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணம் நானே என்றாய்!

உன் மனதின்
தவறான புரிதல்களும்,
தவறான எண்ணங்களும்
இனைந்து ஈன்ற பிள்ளை நான்.

எனை ஈன்ற பிழை மனம்
எப்படி இன்பமாய் இருந்திட முடியும்!

உண்மையாய் உன்னை நேசித்தவர்களிடம்
என்னால் நீ விலகி நிற்கிறாய்!

உந்தன் உள்மனம் திருந்தும் வரை
நான் உன்னை விட்டுப் போகமாட்டேன் !!

- அதீத அன்பு (Possessiveness)


ஏன் திணிக்கிறாய் என்னுள்,
என் அளவிற்கு மேல்!
நான் என்ன‌ உன் மனமா?
எல்லாவற்றையும், ஏற்று கொண்டு
நீ விரும்பும் நேரத்தில்,
தேடி எடுத்து தர!

- என் கைப்பை


உன்னால்,
மொத்த உலகமும்
என் கையில் என்றேன்!
நகைத்துவிட்டு சொன்னாய்,
என் கையில் அடிமையாக தான் நீ!!!!

- செல்பேசி


சிறகை ஒடித்து கூண்டில் அடைக்கப்பட்ட நான்
என் ஒவ்வொரு நாள் அனுபவத்திலும்
கூண்டை உடைக்க கற்று கொண்டேன்!
இறுதியில், ஒரு நாள்
சிறகுகளும் விரிந்தது
கூண்டையும் உடைத்து விட்டேன்!
பறக்க எத்தனிக்கிறேன் முடியவில்லை
என் மீள், மீள் முயற்சியில் பறந்தேவிட்டேன்!
விட்டில் பூச்சியாய் இல்லை,
பீனிக்ஸ் பறவையாய்!!!!

- விடாமுயற்சி

Friday, July 19, 2013

சாரல்கள் - 1


உன்னிடம் கொட்டி செல்லும்
அனைத்தையும்
எப்படி நீ மட்டும்
அழகாக
உள்வாங்கி கொள்கிறாய்!

- மெரீனா


எவ்வளவு தூரம் தான் உன்னால்
என்னை விட்டு ஓட முடியும்!
ஓடு.
உன்னால் முடிந்த வரை ஓடு!
ஆனால்,
எங்கு ஓடினாலும், மீண்டும்
என்னுடன் தான்
நீ இணைந்தே ஆக வேண்டும்!!!

- கடிகாரத்தின் பெரிய முள், சின்ன முள்


எத்தனை வேகமாக சென்றாலும்
எத்தனை,
எத்தனை அழகான நினைவலைகளை
உன்னுடன் சுமந்து கொண்டு ஓடுகிறாய்!

- ரயில்


எவ்வளவு தான் எல்லோரிடமும்
நீ முறுக்கி கொண்டாலும்,
என்னிடம் மட்டும்
உன் பாசாங்கு பலிக்காமல்
சரண் அடைந்து விடுகிறாயே!!!!

- இஸ்திரி பெட்டி


உன்னால் தான்
எல்லா இன்னல்களையும்,
மனஉளைச்சலையும்
அசாதாரணமாய் கடந்து விடுகிறேன் நான்....

- புரிதல்


கண் அயரும் நேரத்திலாவது,
என்னருகே வராதே என்று
உன்னை நான் துரத்தினாலும்
நீ இல்லை என்றால் என்ன, என்று
என் மொத்த படுக்கையையும்
நீயே
ஆக்கிரமித்து கொள்கிறாய்!

- புத்தகங்கள்


என் உறவுகளை எல்லாம்
மென்மையாக தீண்டும் நீ!
ஏன்,
என்னை மட்டும்
இவ்வளவு ஆக்ரோசமாய் தாக்குகிறாய்!
நீ கட்டளை
இடுவதை எல்லாம்
செய்து முடிப்பதனாலா!!!!

- Enter Key


என் எல்லா செயல்களுக்கும்,
நீ விரும்பியோ,
விரும்பாமலோ
உன்னையே சாட்சியாக்குகிறேன் நான்.... !!!!

- கையெழுத்து


அணைக்கும் பொழுது,
என்னை
லாவகமாகவே அணைக்கிறாய்!
உன்னருகே கொண்டு வரும்போதும்,
என்னை
மென்மையாகவே தீண்டுகிறாய்!
திடீர் என்று ஏன்,
என்னை
இப்படி கசக்கி எறிகிறாய்!
ஓ!
என் தேவை தீர்ந்துவிட்டதோ ????

- பேப்பர் கப்


என் மீது
எறியப்படும் கற்களை கொண்டு
படிக்கட்டுகள் அமைத்து
முன்னேறி கொண்டே இருப்பேன் ஒவ்வொருநாளும்....

- விமர்சனங்கள்