Sunday, July 29, 2012

புத்தகத்தையும், நூலகத்தையும் அறிமுகப்படுத்துவோம்!!!


நான் கனடா வந்த பிறகு என்னை பல விஷயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின‌.. அதில் பெரிதும் என்னை கவர்ந்தது குழந்தைகளின் படிக்கும் ஆர்வம். வணிக வளாக‌த்திற்கு பெற்றோர்களுடன் செல்லும் குழந்தைகள் கையில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். அங்கு சுற்றும் நேரத்திலும் அந்த புத்தகத்தை வாசிப்பதில் தான் பொழுதைக் கழிக்கிறார்கள். இதை பார்த்த எனக்கு சற்று ஆச்சரியம்தான். எப்படி இரண்டு விதமாக இங்கு இருக்கிறார்கள் என்று. ஒன்று எப்பொழுதும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அல்லது வீடியோ கேம்ஸ் வைத்து இருப்பார்கள். இந்த பதிவு புத்தகம் படிக்கும் குழந்தைகளை பற்றியது.


எப்படி இந்த குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் வந்தது என்று கேள்விகள் என் மனதில் இருந்து கொண்டிருந்தது. இதை பற்றி என் தோழியிடம் விசாரித்து சில விசயங்களை தெரிந்து கொன்டேன். இங்கு பள்ளிகளில் இருந்தே, புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள். ஒரு மாதத்தில் எத்தனை புத்தகம் படிக்கிறோம், அதில் என்ன விசயம் கற்று கொண்டோம் என்று எழுதி வரவேண்டும். இவை எல்லாம் பள்ளி இறுதியில் அவர்களின் தேர்ச்சி கடிதம் தரும்பொழுது அவர்களுக்கு "கிரடிட்ஸ்" வழங்கப்படும். இப்படி படிக்கும் குழந்தைகள் காலபோக்கில் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும், அதன் ஜனத்தொகையினை பொருத்து இங்கு பொதுநூலகம் இருக்கும். இதை கேள்விபட்டவுடன் நான் கண்டிப்பாக நூலகத்தை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது இவ்வளவு புத்தகங்களா என்று?. குழந்தைகளுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டு அவர்களின் உயரத்திற்கு ஏற்றார் போல் அவர்கள் உட்கார்ந்து வாசிக்க மேஜை நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது. அவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புத்தகங்களை எடுக்கிறார்கள். இவர்களுக்கு வாசித்து காட்ட சில உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்தை வாசித்தும் காட்டுகிறார்கள், வாசிக்கவும் கற்று தருகிறார்கள்.


இதை பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய கேள்வி என்னவென்றால்,  "ஏன் நம் நாட்டு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போனது?". பெரும்பாலான குழந்தைகளுக்கு நூலகம் என்றால் தெரிவதில்லை. சில குழந்தைகளுக்கு நூலகம் பற்றி தெரிந்திருந்தாலும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகு குறைவு.

குழந்தைகளுக்கு இந்த ஆர்வத்தை பள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகளில் என்ன செய்கிறார்கள்? பள்ளிகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்காக "லைப்ரரி" என்று ஒரு வகுப்பு இருக்கும். பெரும்பாலும் இந்த வகுப்பினை எந்த ஆசிரியர் பாடம் நடத்தி முடிக்கவில்லையோ அவர்கள் தான் பயன்படுத்துவார்கள். அப்பறம் எப்படி நம் குழந்தைகளுக்கு புத்தக வாசிக்கும் பழக்கம் வரும்?

பள்ளிகளில் இப்படி என்றால் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளை பாடப் புத்தகத்தை தவிர வேறு எந்த புத்தகங்களையும் படிக்க அனுமதிப்பதில்லை. குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுக்கிறோம், ஆனால் புத்தகங்கள் வாங்கி தருவதில்லை. புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களுக்கு தண்ட செலவு செய்பவர்கள் என்று பேரு தான். நல்ல விசயங்களை யாரேனும் செய்தால் அதை நாம் தான் ஏற்று கொள்வதில்லையே! இதையும் மீறி சில நபர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளித்தாலும் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லை. ஏன் என்றால் அவர்களை ஏற்கனவே பள்ளி பாடங்களை படி! படி! என்று சொல்லி அவர்களுக்கு படிப்பது என்பதே விஷமாகிவிட்டது.

கல்லூரிக்கு வரும்பொழுது தான் நாம் நூலகத்தை உபயோகிக்க ஆரம்பிக்கிறோம். அது கூட பாட திட்டத்திற்கான குறிப்புகளை எடுக்கத்தான் பயன்படுத்துகிறோம். வேறு புத்தகங்களை படிப்பதில்லை.


நம்முடைய சிறுவயதில் கூட இதே நிலைமை தான். இருந்தாலும், நாம் வளரும் பொழுது அம்புலி மாமா, கோகுலம், சிறுவர்மணி, சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்ளை ஆர்வமுடன் படித்தோம். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இதையும் நாம் கொடுப்பதில்லை. உண்மையில் காமிக்ஸ், சிறுகதைகளை படிக்கப்படிக்கத்தான் குழந்தைகளுக்கு கற்பனை திறனும், படிக்கும் ஆர்வமும் வருகிறது.

எல்லோரும் குழந்தைகளை முதல் மதிப்பெண் எடுக்கும் பந்தய குதிரைகளாக தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு இந்த பிரஷர் எல்லாம் கொடுக்காமல், குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தால்தான், புத்தகத்தின் மீதான வெறுப்பு மறையும், பள்ளி பாடங்களை படிக்கவும் இலகுவாக இருக்கும். அவர்கள் புத்தக புழுவாக இருக்க வேண்டாம். புத்தகங்களை ஒரு நண்பராக நினைத்தாலே போதும்.

பாடத்திட்டத்தை மட்டும் படித்து வளரும் குழந்தை சிந்திக்கும் திறன் இல்லாமல் ஒரே பார்வையோடு தான் வளர்கிறது. சிறு வயதில் இருந்து நல்ல புத்தகம் படித்து வளரும் குழந்தை நல்ல சிந்திக்கும் ஆற்றலுடன், தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்று தெரிந்து வளர்கிறது.  பள்ளியோ, பெற்றோர்களோ, பாடத்திட்டங்களோ எல்லா விசயங்களையும் சொல்லித்தர முடியாது. புத்தகங்கள் மட்டுமே உலகத்தை அறிமுகப்படுத்தமுடியும். சிறுவயதிலே உலகத்தை அறிய முற்படும்பொழுதுதான், தனக்கு  பிடித்தவைகளையும், தனக்கான துறையை பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இது தான், அவர்கள் வளரும் பொழுது அந்த துறையில் சிறந்து விளங்க வழிவகுக்கிறது.

ஆகவே நாம் குழந்தைகளை வாரம் ஒரு முறை இல்லை என்றாலும், மாதம் ஒரு முறையேனும் நூலகத்திற்கு அழைத்து சென்று நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுப்போம்.

12 comments:

  1. Nice. I like the way you narrate. -- Gnanasuriyan.

    ReplyDelete
  2. நல்ல பதிவு;
    நீதி, நகைச்சுவை, தத்துவம், வரலாறு, அரசியல் கலந்த புத்தகங்களை படிக்கும்போது, நம் குழந்தைகள் தங்கள் சுய இயல்பு, குணாதிசயம், இவற்றிற்கேற்ப தனக்கான கருத்துக்களை சுதந்திரமாக கொண்டிருப்பார்கள்; இது பல பெற்றோருக்கு "தாங்கள் காணும் பிள்ளைகளின் எதிர்கால கனவு அழிந்துவிடுமே" என்ற அச்சத்தை தருகின்றது.
    -ஆனந்தி

    ReplyDelete
  3. Timely sharing of the thought...now-a-days, even if you get them books to read, they are trying to convince us to get games CDs instead...

    ReplyDelete
  4. ஆகவே நாம் குழந்தைகளை வாரம் ஒரு முறை இல்லை என்றாலும், மாதம் ஒரு முறையேனும் நூலகத்திற்கு அழைத்து சென்று நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுப்போம்

    ReplyDelete
  5. அருமையான பதிவு .. எழுத்தி நடை நன்றாக உள்ளது. கனடிய தமிழ் பதிவர் ஒருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.. கனடிய தமிழ் பதிவர்கள் எனக்குத் தெரிந்து ஐந்து பேர் தான் உள்ளனர் .. ஆனால் ஆசியக் கண்டத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழ்வது இங்கு தான்.. ஆனால் தமிழ் பதிவர்களுக்கு இங்கு பஞ்சம் என்ற நிலையில் எழுதுவோர் தொடர வேண்டுகின்றேன் ... !!!

    உங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் தான் எனக்கும் கனடிய நூலகங்களில் ஏற்பட்டது. சில நூலகங்களில் டேக் கேர் கூட இருக்கின்றது என்று கேள்விப்பட்டேன் ... !!! கனடிய நூலகத்தின் தரத்தினை இந்திய நூலகங்களோடு அளவிட்டால் ஏணி வைத்தாலும் எட்டாது என்றே சொல்வேன் .. !!!

    கனடியர்களின் படிக்கும் ஆர்வத்தை பேருந்துகளில் கண்டு வியந்து இருக்கின்றேன் .. !!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே, பல நூலகங்களில் டே கேர் வசதியும் உண்டு. நானும் இங்கு பல முறை பார்த்த வியந்தது உண்டு அவர்களின் படிக்கும் ஆர்வத்தை கண்டு....

      Delete
  6. நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை!!!

    எங்க நாட்டிலும் நூல் நிலையமும் அதிலும் குழந்தைகள் பிரிவும் அமர்க்களமா இருக்கும். குழந்தைகள் புத்தகம் எழுதும் எழுத்தாளர்கள் கூட அவ்வப்போது வந்து கதைகளை வாசித்துக் காட்டுவார்கள்.

    இரவில் கட்டாயம் பெட் டைம் ஸ்டோரி ஒன்று வாசித்துக் காட்டியபின்தான் குழந்தைகளை உறங்கவைப்போம்.

    உங்க வலைப்பக்கத்தில் உள்ள வேர்ட் வெரிஃபிகேஷனைத் தூக்கினால் பின்னூட்டம் இடுபவர்களுக்கு சுலபம்.

    ReplyDelete
    Replies
    1. Word Verification எடுத்து விட்டேன். நன்றி கூறியமைக்கு...

      Delete
  7. பதிவைப் படித்து, மறுமொழி இட்டவர்களுக்கு எனது நன்றி. உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது..:-)

    ReplyDelete
  8. ///ஏன் நம் நாட்டு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போனது?".///

    பெற்றோர்கள் அனைவரும் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துகொள்ள வேண்டும்.. அதை குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.. குறிப்பாக தமிழ் நாட்டில் பெரு நகரங்களில் சரியாக நூலக நண்பனை விரிவு படுத்த வேண்டும்..


    தொடர்க நண்பா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி தொழிற்களம் குழு...

      Delete