Saturday, August 11, 2012

மாறிப் போன என் உலகம்.......


கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னுள் எவ்வளவு மாற்றங்கள். நினைத்து பார்க்கும் பொழுது நானா இவ்வளவு மாறி விட்டேன் என்று மலைப்பாக இருக்கிறது. வேலையை விட்டு இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. வேலையை விடும்பொழுது இனி வரும் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயமும் சேர்ந்தே வந்தது. திருமணம் ஆன பிறகும் நான் எந்த செயலும் நானே சுயமாக யோசித்து செய்ததில்லை. வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுடன் பிடித்தோ பிடிக்காமலோ ஒத்துக் கொண்டு ஒரு சராசரியான பெண்ணாகத் தான் இருந்தேன். இப்பொழுது,  ஒன்றும் பெரியதாக மாறிவிடவில்லை. ஆனால் கண்டிப்பாக நான் சில விசயத்தில் மாறி இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று, அதை எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொண்டேன். என்னுள் இருக்கும் என்னை தொலைத்த ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் எல்லாம் தலைகீழ். நானே சுயமாக யோசித்து ஆராய்ந்து முடிவு எடுக்கும் அளவிற்கு வந்திருப்பதே ஒரு சின்ன வெற்றியாக நான் பார்க்கிறேன். இதற்கு ஒரு காரணம் நான் தனிமையாக விடப்பட்டதாலோ என்னவோ தெரியவில்லை. பிறந்தது முதல் நான் பெரும்பாலும் தனித்து விடப்படவில்லை என்பதே உண்மை. பெண்ணாக பிறந்ததால் பல விசயங்கள் எனக்கு எட்டாக்கனி தான்.

சிறு வயதில் இருந்தே எனக்கு நிறைய விசயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நான் வளர்ந்த சூழ்நிலை, பொருளாதாரம் மற்றும் சுற்றத்தார்கள் என்னை கற்று கொள்ள விடவில்லை. குழந்தையாக இருக்கும் போதே எனக்கு டான்ஸ் ஆடுவது என்பது ரொம்ப பிடித்த விசயம். அதை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் இதை சொன்ன எனக்கு கிடைத்த பதில், "டான்ஸ் கத்துக்கிட்டு எங்க போய் அரங்கேற்றம் செய்ய போகிறாய்" என்று தான் பதில் வந்தது. இதைத் தவிர, அதை கற்றுக்கொள்ள ஒரு தொகையும் தேவைப் பட்டது, அதை தர முடியாது என்பது என்ற காரணம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பொழுது தான் தெரிந்தது. அன்று முதல் நான் எனக்கு ஆசையான பல விசயத்தை மனதிலே போட்டு புதைக்க ஆரம்பித்தேன். நாளடைவில் எதுவெல்லாம் பொருளாதரத்தை மையமாக வருகிறதோ அது எதுவும் என் பெற்றோர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டேன். சிறிது நாளில் அதுவும் என் சக தோழிகளின் பெற்றோர்கள் மூலம் என் பெற்றோருக்கு தெரிய ஆரம்பித்தது. என் தந்தை என்னிடம் ஏன் இதை நீ என்னிடம் கேட்கவில்லை என்று கேட்கும் போது நான் சொல்லும் பதில் "உங்களால் முடிந்ததை உங்களிடம் கேட்டு இருக்கிறேன். இதை நான் கேட்டால் கண்டிப்பாக உங்களால் முடியாது" என்று எனக்கு தெரியும். அதனால் தான் கேட்கவில்லை என்றேன். இது அவர்களை பெரிதும் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி தான் பெரும்பாலான நடுத்தரவர்க்க குடும்பங்களில் நடக்கும். இப்படியே வளர்ந்த நான் எனக்கான என் முதல் முடிவு எடுத்தது நான் மேலே படிக்கவேண்டும் என்று கேட்டதுதான். பெற்றோர்களுக்கோ சுற்றத்தார்களிடம் இருந்து, "அதான் ஒரு பட்டம் வாங்கியாச்சே எதுக்கு மேலே ஏன் படிக்க வைக்கிறாய், பேசாமல் கல்யாணம் பண்ணிக் கொடு" என்று தான் சொன்னார்கள்.

இந்த சந்தர்பத்தில் தான் என் வாழ்வின் முதல் மாற்றம் ஆரம்பம் ஆனது. என் அத்தை மற்றும் அத்தை மகள் இரண்டு பேரும் என் தந்தையிடம் நீங்கள் எவ்வளவு நகை போட்டு கல்யாணம் பண்ணினாலும் நாளை அவள் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அவளால் சொந்த காலில் நிற்கும் திறன் இருக்காது. "படிக்க ஆசைபடும் பெண்ணை படிக்கவை" என்று சொன்னார்கள். என் அத்தை என்றால் என் அப்பாவிற்கு ஒரு தனி பிடித்தம் கலந்த பிரியம். அதனால் தான் அவர்கள் கூறியவுடன் மேல் படிப்பு படிக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைப் போல் எடுத்து சொல்ல எல்லோருக்கும் என் போல் அத்தை கிடைப்பார்களா என்று தெரியவில்லை. என் வாழ்விற்கான பாதையில் முதல் மாற்றத்தை காட்டியவர்கள் அவர்கள் இரண்டு பேரும் தான். இந்த தருணத்தில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்.

படிக்கும் போது ஏதோ கொஞ்சம் நன்றாக படித்ததால் கல்லூரியில் உதவித்தொகை மூலம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர்ஸ் டிகிரியும் வாங்கியாச்சு. அடுத்து என் மனதில் இருந்தது "எப்படியும் ஒரு வேலைக்கு போய் முடிந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும்" என்பது தான். பெற்றோர்களுக்கு மறுபடியும் என் திருமணம் ஞாபகம் வந்து நின்றது. இது தான் சரியான சமயம் திருமணம் செய்வதற்கு என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த எண்ணத்தை மாற்ற யார் வருவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் போது எனக்கு அந்த வாய்ப்பும் வாய்த்தது. யாரோ ஒரு புண்ணியவான் ஜோசியர் இந்த பெண்ணிற்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து தான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட என் பெற்றோர்கள் அது வரைக்கும் வேண்டுமானால் உள்ளுர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார் என்றார்கள். ஆனால் என் மனதிலோ அந்த எண்ணம் சுத்தமாக இல்லை. எனக்கு படித்த துறையில் வேலைக்கு செல்வதே ஆசையாக இருந்தது. நான் சென்னை சென்று வேலை பார்க்கிறேன் என்று கூறினேன்.

அப்பொழுது இருந்த கால கட்டத்தில் வேலை கிடைப்பது கடினம் தான். என் தந்தையின் நண்பர்களின் பிள்ளைகள் சென்னையில் வேலை கிடைக்காமல் திரும்ப ஊருக்கு வந்த காலம் அது. இவள் போனாலும் இதே நிலைமை தான், இவளே தேடி பார்த்துவிட்டு கிடைக்கவில்லை என்றால், திரும்பிவந்து விடுவாள் என்பதே அவர்களின் மனக் கணக்கு. மூன்று மாதகாலம் எனக்கு அவகாசமாக வழங்கப்பட்டது. அதற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் ஊரில் வந்து கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னைக்கு அனுப்பப் பட்டேன். சிறு வயதில் இருந்து விடுதிகளில் தங்கி படிக்காத நான் சென்னையில் விடுதிக்கு செல்ல போகிறேன் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் என் பெற்றோர்களோ நீ சென்னை போகலாம், ஆனால் தங்குவது மாமா வீட்டில் தான். விடுதி இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டார்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று அதற்கும் சரி என்று சென்னை சென்றேன்.

அது வரை பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று சூழ்நிலையில் வளர்ந்த  எனக்கு சென்னை கொஞ்சம் பயத்தை காட்டியது உண்மை தான். என்ன செய்வது எப்படி வேலை தேடுவது என்று குழப்பத்தில் இருந்த எனக்கு மீண்டும் என் அத்தை வழியிலே உதவி கிடைத்தது. இந்த முறை எனக்கு உதவியது என் அத்தையின் இன்னொரு மகள். அவர் தான் எனக்கு எப்படி வேலை தேட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து என்னை வழி நடத்தி சென்றார்கள். எனக்கான முதல் வேலை அவர் மூலமே கிடைத்தது. இது தான் என் வாழ்விலே ஏற்பட்ட அடுத்த மாற்றம். சென்னை சென்று வேலை தேட எனக்கு என் தந்தை கொடுத்தக் காலக் கெடு மூன்று மாதங்கள். எப்படியும் நான் திரும்பி வந்துவிடுவேன் என்று இருந்த என் பெற்றோருக்கு நான் சென்னை வந்த இரண்டாவது மாதத்தில் வேலை கிடைத்து விட்டது என்றுவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இப்படியாக என் சென்னை வாழ்க்கை துவங்கியது. இரண்டு வருடம் சென்ற பிறகு மீண்டும் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தது. இந்த முறை எனக்கு மறுப்பு சொல்லக் காரணங்கள் இல்லை. அதனால் நீங்கள் பார்க்கும் எந்த பையனும் எனக்கு சம்மதம் என்று சொன்னேன். அவர்களின் தேடல் துவங்கியது.

இதன் பிறகு எனக்கு ஏற்பட்ட மாற்றம் தான் என் வாழ்வை தலை கீழாக மாற்றியது. வீட்டில் பார்த்த பையனுடன் என் திருமணம் நடந்தது. இது வரைக்கும் எனக்கு இருந்த பல கட்டுப்பாடுகள் இல்லை. அது வரைக்கும் என்ன சொன்னார்களோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்தேன். எனக்கான முடிவை நானே எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது என் திருமணத்திற்கு பிறகு தான். இதை நான் "கற்றுக் கொள்ள ஆசை", என்று சொல்வதற்குள் கற்றுகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். எனக்கான என் தேடல் துவங்கியது என்னவோ இங்கு தான்.

கம்யூனிசத்தையும், காரல் மார்க்ஸ்யும் படித்தவனுக்கு பெண் என்பவள் அடிமை இல்லை என்பதை எனக்கு தெளிவுபடுத்தி, உன் பாதையை தேர்ந்தெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தான். எனது அடுத்த அடுத்த அடிகளுக்கு நடை பழகும் குழந்தைப் போல எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுக்க வழிவகுத்தவன் என்னை வாழ்கை துணையாக ஏற்றவன்.

இதுவரை நான் என் வாழ்வு, என் குடும்பம் என்று சுயநலத்துடன் இருந்த நான் இதை தவிர்த்து வெளி உலகையும்  காண ஆரம்பித்து இருக்கிறேன். என் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், நான் நானாக வாழ, ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கான தேவையும் என் முடிவையும் நானே எடுக்கிறேன். இந்த மாற்றம் எல்லாம் எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான். இந்த மாற்றம் எனக்கு பல தேடலை தேடி தரும் என்று நம்புகிறேன்.  தேடல்கள் தொடரும்....

9 comments:

  1. நம் மீதான நம்பிக்கைதான் நம்பை உயர்த்தும். தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. :‍) பெண் என்றாலே பத்திரிக்கையில் போட ஒரு டிகிரி கிடைத்தால் போதும், கல்யாணம்தான் முடிவு என்று நிறைய பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே வேலைக்கு போனாலும், டீச்சர் உத்யோகம்தான் லாயக்கு என்றும் சொல்லுவார்கள். உங்கள் பெற்றோர் பரவாயில்லை, உங்களுக்கு அவகாசம் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். படிப்பும் வேலையும் பெண்களுக்கு இரு கண்கள் என்பது எனது ஆயா அனைவருக்கும் சொல்லும் அறிவுரை.

    இந்த இடுகையை நீங்கள் எழுதியிருக்கும் விதம் பிடித்திருக்கிறது!

    ReplyDelete
  3. ///கம்யூனிசத்தையும், காரல் மார்க்ஸ்யும் படித்தவனுக்கு பெண் என்பவள் அடிமை இல்லை என்பதை எனக்கு தெளிவுபடுத்தி, உன் பாதையை தேர்ந்தெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தான். எனது அடுத்த அடுத்த அடிகளுக்கு நடை பழகும் குழந்தைப் போல எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுக்க வழிவகுத்தவன் என்னை வாழ்கை துணையாக ஏற்றவன்./// நடைமுறையில் கம்யூனிஷத்தை பின்பற்றும் உங்கள் கணவருக்கு என் வாழ்த்துகள். (எனக்கும் கூட நான் சரியாக என் வரவிருக்கும் மனைவியைநடத்துவேனோ? எனும் பயம் உள்ளது)
    //இதுவரை நான் என் வாழ்வு, என் குடும்பம் என்று சுயநலத்துடன் இருந்த நான் இதை தவிர்த்து வெளி உலகையும் காண ஆரம்பித்து இருக்கிறேன்/// சுய நலத்தை விட்டாச்சில்லா இனி புதிய வாசல்கள் திறக்கும் காத்திருங்கள்.

    ReplyDelete
  4. கம்யூனிஸ்டால் மட்டுமே "பெண்ணை" "மனிதனாக" பார்க்க முடியும்; தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    -ஆனந்தி

    ReplyDelete
  5. கிடைத்திருக்கும் விடுதலையை சரியாக பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துக்கள்,பதிவு நன்றாக உள்ளது

    ReplyDelete
  6. சுந்தரி.... மிக அழகான சிந்தனை சாரல்.... துணைவனும் சரி துணைவியும் சரி... திறமான, தீர்க்கமான முறையில் வாழ்கையை அணுகி இருக்கிறீர்கள்...
    //முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று, அதை எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொண்டேன். என்னுள் இருக்கும் என்னை தொலைத்த ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். //நிதர்சனமான உண்மை.... உங்களுக்கு அத்தை மற்றும் அவர்கள் மகள் உதவியதை போன்று, எனக்குள் நம்பிக்கையும் தீரத்தையும் வித்திட்டது எனது அன்னை....
    பல இடங்களில் என்னை எனக்கு நினைவூட்டி இருக்கிறாய் தோழி... எழுத்து நடையும் அருமை... சிந்தனை சாரலில் நனைய காத்திருகிறேன்... :-)

    ReplyDelete
  7. பதிவைப் படித்து, மறுமொழி இட்டவர்களுக்கு எனது நன்றி. உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது.. :-)

    ReplyDelete

  8. கம்யூனிசத்தையும், காரல் மார்க்ஸ்யும் படித்தவனுக்கு பெண் என்பவள் அடிமை இல்லை என்பதை எனக்கு தெளிவுபடுத்தி, உன் பாதையை தேர்ந்தெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தான். எனது அடுத்த அடுத்த அடிகளுக்கு நடை பழகும் குழந்தைப் போல எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுக்க வழிவகுத்தவன் என்னை வாழ்கை துணையாக ஏற்றவன்.
    //மகிழ்ச்சி வளரட்டும்
    வெற்றி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சங்கிலியின் கண்ணிகள் அறுபடுவது போன்ற படம் உங்கள் கட்டுரைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete