Monday, August 27, 2012

ஆடம்பரம் தேவையா குழந்தைகளுக்கு?


நம் குழந்தைகள் நம்மை பெரும்பாலான நேரங்களில் ஆச்சரியப்பட வைப்பார்கள். அவர்களின் கேள்விகள், பதில்கள் எல்லாம் நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பவையாகத் தான் இருக்கும். குழந்தைகளை நாம் வளர்க்கும் போது அவர்களை எவ்வாறு வழி நடத்தி கொண்டு செல்கிறோம் என்ற கேள்விகள் பல என் மனதில் உள்ளது. பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் ஒவ்வொரு வகையில் தலை சிறந்த குழந்தைகளாகத் தான்  இருக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் தனித் திறமையில் சிறக்கவும் வாழ்கையில் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் பெற்றோர்களின் துணையுடன் தான் ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கும். அந்த குறுகிய காலகட்டம் தான் அவர்களை வாழ்வினில் நல்வழி படுத்தவும், பிற்காலத்தில் ஒரு நல்ல மனிதனாய் உருவெடுக்க காரணமாய் அமைகிறது.

இதை எல்லாம் தடை செய்வது போல், நம் குழந்தைகளின் வாழ்க்கை முறைகளில் உள்ள சிறு சிறு நெருடல்கள் தான் இந்த பதிவு. நாம் எப்படி நாம் பிள்ளைகளை வழி மாறி அழைத்து செல்கிறோம் என்று பார்ப்போம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவரும் தலைப்புக்கு செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் நாம் நம் பால்யகாலத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டி உள்ளது. நீங்களோ, நானோ வளரும் போது எப்படி வளர்ந்தோம் என்று ஒரு நிமிடம் உங்கள் சிறு வயது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். நாம் குழந்தைகளாய் இருந்த காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு நமக்கு எந்தனை உடைகள் கிடைக்கும்? அதிக பட்சமாய் எல்லோருக்கும் கிடைப்பது இரண்டு அல்லது மூன்று உடைகளாகத்தான் இருக்கும். அதுவும் கூட பண்டிகைகளின் போது கிடைக்கும். நாளை தீபாவளி என்றால் இன்று இரவு தான் நம் கையில் உடையும், வெடிகளும் கிடைக்கும். அந்த உடை எடுக்கும் போது கூட பல வீடுகளில் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அம்மாவும், அப்பாவும் பிள்ளைகளுக்கு மட்டும் எடுத்தால் போதுமே என்று நினைப்பார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், அந்த கடைசி நேரத்தில் கிடைப்பதால் என்னவோ நமக்கு அது பெரிய பொக்கிசமாய் தெரியும் அந்த உடைகளும், வெடிகளும்.

 நம்மை திருவிழாவிற்கு எல்லாம் கூட்டிக்கொண்டு போகும் போது ஆளுக்கு ஒரு பொம்மை என்று வாங்கி கொடுப்பார்கள். அதிலும் வாங்கி கொடுத்தவற்றை அப்பவே உடைத்து விட்டால், கிடைக்கும் அடிகளை இன்றும் நம்மால் மறக்க முடியாது. ஆனால் இன்றைய நிலைமையை யோசித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள் இன்று எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள். இன்றைய பெரும்பாலான குடும்பத்தில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான். நம் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதிலே கற்று கொடுத்து கொண்டிருப்பது  ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தான். நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு எளிய வாழ்கை முறையில் இருந்தே வந்திருப்போம். இன்று நம் குழந்தைகளோ அதற்கு நேர்மாறான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 பிள்ளைகள் மனதில் நினைக்கும் முன் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் தான் நாம். நம் சிறு வயதில் அப்பாவோ, அம்மாவோ ஒரு பொருள் வங்கி தருவது என்பது திருவிழாகளிலும், பொருட்காட்சியிலும் தான். ஒன்னும் இல்லை ஒரு ஐம்பது பைசாவிற்கு ஒரு பலூன் வாங்க எவ்வளவு நேரம் நாம் பெற்றோர்களிடம் கேட்போம். அந்த பலூனும் வாங்கி நம் கைக்கு வந்தவுடன் உடைந்துவிடும், அதற்கும் நாம் தான் திட்டும் வாங்குவோம். ஆனால் இன்று குழந்தைகள் பலூன் கேட்கும் முன் ஒரு பாக்கெட் பலூன் அவர்களின் கையில் இருக்கிறது. நாம் ஏன் இவ்வளவு தாராளமானவர்களாய் மாறி போனோம்? நமக்கு கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் இதற்கு முழு காரணம். ஆனால் இதுவே நம் குழந்தைகளை ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது. பொருளாதாரத்தில் ஓர் அளவிற்கு முன்னேறிய குடும்பமும், முன்னேற பாடுபட்டு கொண்டிருக்கும் குடும்பங்கள் தான், இந்த மாதிரி பிள்ளைகளை ஆடம்பர வாழ்க்கைக்கு இழுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதில் இருந்து இந்த ஆடம்பர வாழ்கைக்குள் நாம் நுழைய ஆரம்பித்தோம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில்   வேலை பளு காரணமாய்  தங்களின் குழந்தைகளிடம் அவர்களால் முழுமையாக நேரத்தை செலவிட முடியவில்லை. இதுவே அவர்களுக்கு, தன் மீது குற்றஉணர்வினை கொண்டு வந்து விடுகிறது. இதை சமாளிக்க அவர்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் முன் அவர்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம் என்று எல்லா பொருட்களையும் வாங்கி கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே நாளடைவில் அவர்களை ஆடம்பர வாழ்விற்குள் இழுத்து சென்று விடுகிறது. விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு துணிமணிகள், செருப்புகள், அலங்கார பொருட்கள் என்று கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி தருகிறார்கள். இதை பார்க்கும் மற்ற குடும்பங்களும் நாமும் அப்படி வளர்த்தால் தான் நமக்கு மதிப்பும், பெருமையும் என்று நினைத்து அவர்களும் இந்த ஆடம்பர வாழ்கைக்குள் குழந்தைகளை கொண்டு வந்து விடுகிறார்கள்.

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை மாநகரப் பேருந்திலோ, மின்சார ரயிலிலோ கூட்டி சென்று இருப்போம். என்னையும் சேர்த்து பெரும்பாலும் கூட்டி சென்றது இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் நம் பிள்ளை ஒரு சொகுசான வாழ்வை வாழ தான் நமக்கும் பிடிக்கிறது. அதனால் தான் குழந்தைகளை அழைத்து செல்லும் போது ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் அழைத்து செல்கிறோம். இந்த மாதிரி ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் ஆடம்பரமான வாழ்வே நம் பிள்ளைகளுக்கு நல்லது என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.

நம் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே ஆடம்பர வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் நாம் அவர்களுக்கு ஏமாற்றம் என்று ஒன்று இருப்பதை கற்றுகொடுப்பது இல்லை. ஏமாற்றம் என்றால் என்ன என்று தெரியாத குழந்தைகள் வளரும் போது ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட தாங்கி கொள்ள முடிவதில்லை.  இது அவர்களை பொறுமை இல்லாதவர்களாகவும், மூர்க்கர்களாகவும், வளரச் செய்கிறது. கேட்டதும் கிடைக்கும் என்று பழகிய குழந்தைகளால், ஒரு பொருள் கிடைக்கவில்லையென்றால் அவர்களை எரிச்சலூட்டுகிறது. இதுவே சில சமயங்களில், அவர்களை பல தவறான முடிவுகளை எடுக்கவும் வைக்கிறது. ஏமாற்றங்களையும் ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் கொண்டு வரவேண்டும்.

ஒரு பொருளை நாம் வாங்கி கொடுக்கும் முன்பு அவர்களுக்கு அந்த பொருள் தேவையா, அதனால் என்ன பயன் அல்லது கேடு என எடுத்துரைக்க வேண்டும். அந்த பொருளை வாங்க தனது பெற்றோர் தன்னிடம் செலவு செய்யும் நேரத்தை திருடி, வேலை செய்து தான் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும். அந்த பொருளுக்கு பெற்றோர்களின் உழைப்பை பற்றியும் எடுத்துரைக்க மறந்து போகிறோம். அதனால் சிறு வயதிலே அவர்களின் மனதில் என்ன கேட்டாலும் நமக்கு அந்த பொருள் கிடைக்கும் என்று அவர்கள் எண்ணி கொள்கிறார்கள்.

குறைந்த விலையில் இருக்கும் பொடருட்களை குழந்தைகள் கேட்டதும் வாங்கிக் கொடுக்கும் நமக்கு, அதிக விலையுள்ள பொருளைக் கேட்கும் போது தான் சிக்கலே. ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள் தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்துக்கும் அவர்களை இழுத்து செல்கிறது. அவன் வைத்திருக்கிறான், எனக்கும் அது வேண்டும் என்ற மனநிலையில் தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். இதுவே பிள்ளைகள் பத்தாம் வகுப்பை தாண்டியதும் எனக்கும் என் நண்பனை போல் வண்டி வேண்டும் என்று கேட்க வைக்கிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கும் முன்பு பலமுறை யோசித்து வாங்கவும் பழகி கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கேட்கும் பொருட்களையும் கேட்டவுடன் வாங்கி தராமல் அவர்களை சிறிது காலமேனும் காக்க வைத்து தேவை என்றால் மட்டுமே வாங்கி கொடுக்க நாமும் பழகி கொள்ளவேண்டும். நம்மில் வரும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் நம் குழந்தைகளை நாளை ஒரு நல்ல மனிதனாய் வருவதற்கு கண்டிப்பாய் வழிவகுக்கும். நமது குழந்தை இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வளர்வதும், வளராமல் போவதும் பெற்றோர்களின் இந்த சிறு முயற்சியிலும் அடங்கி இருக்கிறது. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நம் பிள்ளைகளும் நம் கையை பிடித்து கொண்டு வந்து கற்று கொள்வார்கள். இன்றே இந்த முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்து நம் பிள்ளைகளின் சமுதாயத்தை நல்வழி படுத்துவோம்.

குழந்தை வளர்ப்பு பற்றி என் மனதில்பட்ட சில கருத்துகளையும் உதாரணங்களையும் மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன். குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை. அதே போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் தேவை.

புலமை பித்தன் சொன்னது போல,

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை (பெற்றோர்) வளர்க்கையிலே!

19 comments:

  1. நாம் நம் குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கும் முன்பு பலமுறை யோசித்து வாங்கவும் பழகி கொள்ள வேண்டும். சரியான கருத்து நல்ல பதிவு

    ReplyDelete
  2. நல்ல பதிவு. தாங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பாடலை எழுதியது பட்டுக்கோட்டையார் அல்ல - புலவர் புலமைப்பித்தன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. தாங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பாடலை எழுதியது பட்டுக்கோட்டையார் அல்ல - புலவர் புலமைப்பித்தன்.

    அதே!!!!

    ReplyDelete
  4. அருமை.

    ஆனால் இதையெல்லாம் யோசிக்க இப்ப யாருக்கும் நேரம் இல்லை:(

    ReplyDelete
  5. பாடலை எழுதியது புலமை பித்தன் தான். பதிவில் திருத்திவிட்டேன்.
    தவறை சுட்டிகாட்டிய அனானி மற்றும் யோகன் பாரிஸ்க்கு நன்றி.

    ReplyDelete
  6. "நுகர்வு கலாச்சாரம்" நடுத்தர வர்க்கத்தையும் மேட்டுக்குடியையும், ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றது; முந்தைய தலைமுறை வரை வரமாக, வரவாக கருதப்பட்ட "சேமிப்பு", "சிக்கனம்" எல்லாம் இப்போதெல்லாம் யோசிக்கவும் நேரமில்லை;

    முந்தைய தலைமுறை வரை இருந்த குடும்பத்தில் நெருக்கம் வெகுவாக குறைந்துவிட்டது; "செல்போனின்" பேசும் அளவு வீட்டிலிருப்பவரிடம் பேசுவதில்லை நாம்.

    பயனுள்ள பதிவு.

    -ஆனந்தி

    ReplyDelete
  7. நன்றி...
    முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது...
    நானும் இதுபோல் என் குழந்தைகளை வளர்க்கும் முயற்சியை இன்றிலிருந்தே ஆரம்பித்து விடுகிறேன்...

    ReplyDelete
  8. Ungalin karutthu sariyanadhu. Idhai naan kulandhai valarkum podhu kandipaga pinparuven. Idhu Pondra karutthukkal varaverka paduginrana....SavithriRamaswamy

    ReplyDelete
  9. அருமையான பதிவு சுந்தரி . இதில் இருப்பவை அனைத்தும் நமக்கு தெரியும் . ஆனால் இதை பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை . இப்பதிவின் மூலம் , நாம் நம் சிந்தனைகளை தெளிவு படுத்த முடிகிறது . மனதில் எங்கோ ஓரமாக இருக்கும் இந்த நினைப்பை , நற் பழக்கமாய் கொள்ள தூண்டுகிறது ... நன்றி ..வாழ்த்துக்கள்
    கலைச்செல்வி

    ReplyDelete
  10. இதையெல்லாம் நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு கொஞ்சமும் பொறுமை என்பதே இருப்பதில்லை. கேட்டது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இப்போது வரை பப்பு எந்த விலையுயர்ந்த பொருட்களையும் கேட்டு அடம் பிடித்ததில்லை. நாங்கள் அவற்றை அறிமுகப்படுத்தியதில்லை.எனினும், இந்த நுகர்வு வெறியை நினைத்து கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!!

    ReplyDelete
  11. ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள கற்றுக்கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு...

    ReplyDelete
  12. அருமையான பதிவு..

    இக்காலத்திய பெற்றோர்களுக்கு இவற்றை எடுத்துச் சொல்ல வேண்டிய அவலநிலையில் சமூகம் இருக்கிறது என்பதுதான் கவலையைத் தருகிறது.

    பின்னூட்டமிட்ட ஒரு பதிவர் தன்னுடைய பதிவுகளிலேயே தன் குழந்தைகளுக்கான அளவற்ற சீராட்டலைப் பெருமையுடன் பகிர்பவர்..இங்கோ வேறு விதப் பின்னூட்டம்.. :((

    இந்தப் பதிவுக்காக உங்களுக்கு ஒரு பலத்த சபாஷ்..

    ReplyDelete
  13. அது என்ன சிந்தனா' சாரல்??

    சிந்தனை என்பதே சரியென்று நினைக்கிறேன்..

    :)

    ReplyDelete
  14. most of the parents now a days giving importance to facebook then their childrens, well said about bribe for childrens first of all we want to change our life style we dont want to buy and give every thing we want to motivate them thats enough more over we want to keep them study well and educate sexual life nowadays girls and boys in the age of 15 to 21 their lossing big life

    by
    Rajesh Natarajan

    ReplyDelete
  15. நிஜத்தின் உண்மையை நிழலின் உண்மை மறைத்துவிடுகிறது.இன்றைய பெற்றோர்களுக்கு இந்த கட்டுரை வருங்காலத்தின் எச்சரிக்கை குறி .மிகவும் நன்றி சுந்தரி .எனது மனோ பாவத்தையும் இந்த கட்டுரையானால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி வருகிறேன்.

    ReplyDelete
  16. @அறிவன்,

    சிந்தனை என்பதே சரியான வார்த்தை.
    சிந்தனை என்பதை சற்று மாற்றி சிந்தனா என பதிவிற்கு பெயரிட்டுள்ளேன்.

    பதிவர்கள் பற்றிய தனி நபர் விமர்சனம் எதுவும் வேண்டாமே.

    ReplyDelete
  17. குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை. அதே போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் தேவை...need of the hour...

    ReplyDelete
  18. பதிவைப் படித்து, மறுமொழி இட்டவர்களுக்கு எனது நன்றி. உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது..

    ReplyDelete
  19. நன்றி மாதேவி

    ReplyDelete