Thursday, January 9, 2014

ஆர்கலியாழ்

ரொம்ப நாளாகவே இந்த பக்கத்தை கொஞ்சம் தூசி தட்டனும்னு நினைச்சிட்டு இருந்தேன். இறுதியில் இன்று தான் இதற்கும்  நேரம் வந்திருக்கு போல. இந்த பதிவு ஒரு பெயர் சூட்டு நிகழ்வு அல்லது பெயர் அறிவிப்பு நிகழ்வு என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

அதற்கு முன்னால் நிறைய பேர் என்னிடம் கேட்டது என் வலைதளத்திற்கான பெயர்க் காரணம். சொல்லி வைத்தது போல் எல்லோருமே என்னிடம் இது சிந்தனை சாரல் என்று தானே வந்திருக்க வேண்டும் என்று கேட்டார்கள். வெறும் சிரிப்புடன் நகர்ந்திருக்கிறேன் அப்பொழுது எல்லாம். இன்று அதற்கும் காரணம் சொல்கிறேன்.
வெட்டியாக வீட்டில் சும்மா இருந்த நாட்களில் பொழுது போகாமல் வலைப்பக்கங்கள் படிக்க தொடங்கி கொஞ்சம் அதில் ஆர்வமும் வந்தது. காலப்போக்கில் நாமும், நமக்கு என்று ஒரு வலைப்பக்கம்  என்று தான் ஆரம்பிக்க முயற்சி செய்தேன். எல்லாம் ஓகே என்றதும் என்ன பெயர் வைக்க வலைப்பக்கத்திற்கு, உண்மையாகவே ஒன்றும் தோன்றவில்லை. யோசித்து யோசித்து அயர்ந்த நேரம் தான் ஞாபகம் வந்தது இந்த பெயர். இந்த பெயர் எங்கள்  மகளுக்காக நாங்கள் யோசித்து வைத்த பெயர். ஆனால் நினைத்தது போல் நடக்கவில்லை, எப்பவும் நினைத்தது எல்லாம் நடந்தும் விடுவதில்லை . நீ மகள் வேணும் என்கிறாயா எடுத்துக்கோ மகனை என்று மொத்தத்தையும் மாற்றியது. 

எந்த குழந்தை என்றாலும் ஒன்றே போதும் என்ற மன நிலையில் இருவரும் இருந்ததால், என் மகன் சமர் வந்தது முதல் இந்த பெயர் சுத்தமாக மறந்தே போனது. இனிமேல் இந்த பெயர் நம் வாழ்வினில் இனி எப்போதும் இல்லை என்று இருந்த என்னை இல்லை நான் உன்னோடவே தான் அம்மா இருப்பேன் என்னை தூக்கி போடாதே, என்று மீண்டும் என் ஞாபகத்திற்கு வந்தாள் என் செல்ல மகள்  சிந்தனா. ஏன் அவள் பெயரிலே இந்த வலைதளத்தை ஆரம்பிக்க கூடாது என்றே அவளின் பெயரிலே இதை தொடங்கினேன். இந்த வலைத்தளம் "சிந்தனா சாரல்"  ஆக 2012இல் பிறந்தது.



ஆரம்பித்த வருடம் ஓரளவிற்கு சுறுசுறுப்பாக பதிவு போட்டேன். அதிகம் இல்லை என்றாலும் மாதம் ஒன்றாவது பதிவிட்டேன். 2013இல் சுத்தமாக என் நேரம் என்னிடமே இல்லை. 24 மணிநேரமும் பத்தாமல் வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டே இருந்தேன். ஆனால் 2014இல் எப்படியேனும் இவளை மீண்டும் கவனிக்க எண்ணி தான் தூசி தட்டி ஆரம்பித்து இருக்கிறேன்.

ஆரம்பித்த பொழுது என்னவோ பெயர் சூட்டு நிகழ்வு, அறிவித்தல் என்று போட்டு இருந்ததே அது இது தானோ என்று நினைக்காதீர்கள் இப்பெயர் சூட்டல் எங்கள் கனவு இல்லத்திற்கு. வீட்டை வாங்கி ஒரு வருடம் கழித்து இறுதியில் ஒரு வழியாக இவளுக்கும்  தேடி கண்டு பிடித்துவிட்டேன் பெயரினை என் நேரம் எனக்கே இல்லாத பொழுதும்.


இயற்கையாகவே அழகான மலைகள்  சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ மலைகள் மீது அளவு கடந்து பாசம் எப்பொழுதும். சென்னைக்கு வேலை நிமித்தமாக வரும் வரை என் பால்யம் முழுதும் அழகான மலைகள், சுத்தமான காற்று என இயற்கை சூழலில் வளர்ந்தேன். தடுக்கி விழுந்தால் கொடைக்கானல் தவிர வேறு எங்கும் மலை பிரதேசம் போனதில்லை. 2013இல் உதகை, மூணாறு சென்று வந்ததில் இருந்து இன்னும் மலைகள் மீது அன்பு கூடி விட்டது. அதிலும் மூணாறு இன்னும் என்னை அதன் மேல் அதி தீவிர மோகத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தனை வருடம் இவ்வளவு அருகினில் இருந்தும் இவளை தரிசிக்க முடியாமலே இருந்திருக்கேனே நான் என்று தான் எனக்கு தோன்றியது. எத்தனை அழகன இடம். எங்கும் பசுமை மட்டுமே!

என் நினைவில் என்னை விட்டு எப்பொழுதும் நீங்காமல் இருக்கும் மற்றுமொரு இடம் கடல்கள். கடல் மீது எப்பவும் தீரா காதல் உண்டு எனக்கு. சிறு வயது முதல் ஆச்சி வீட்டிற்கு செல்வது முடிவானதுமே என் கண் முன்னால் வருவது கடற்கரைகள். எப்போ போவோம் கடற்கரைக்கு என்றே மனம் அடித்துக் கொள்ளும். திருச்செந்தூர் சென்று வரும்போது குலசைக்கும் அழைத்து செல்வார்கள். ஆட்கள் அதிகம் இல்லாமல் ரொம்பவே அமைதியாக அழகாக இருக்கும் குலசை கடல். கடற்கரையில் இருந்தே தெரியும் அழகாக மனப்பாடு.  மனப்பாடுக்கும், மூணாறுக்கும் என்ன சம்பந்தம் என்னுடன் என்று தெரியாது ஆனால் இந்த இரண்டு இடத்திற்கும்  செல்லும் போது நான் என்னை மறந்தே ரசித்திருக்கிறேன்.  இந்த இடங்களில் லயித்து எனக்கான தனி உலகம் இது என்று அதனுடன் இருப்பேன்.


இது தான் காரணமா என்று தெரியவில்லை, வீட்டிற்கு பெயர் வைக்க வேண்டும் என்று தோன்றியதும் கடலும், மலைகளுமே எனக்கு ஞாபகம் வந்தது. எத்தனை யோசித்தாலும் இறுதியில் இந்த இரண்டு மட்டுமே என் முன் வந்து நின்று அழகாக சிரித்தது. இவர்கள் இரண்டு பேருடன் ஆன என் காதலே இந்த பெயரை எனக்கு தந்தது. ஆம், எங்கள் இல்லத்தின் பெயர் "ஆர்கலியாழ்".... கடலும், மலையும் எனக்கு சந்தோசத்தை தருவதை போல் இவை இரண்டும் (ஆர்கலி+யாழ்) சேர்ந்து என்னுள் எப்பவும் சந்தோசத்தை தரும் என்ற நம்பிக்கையில் நான்.



23 comments:

  1. அழகான பெயர். சந்தோஷம் பெருகட்டும் :)

    ReplyDelete
  2. ரசித்தேன்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் :)

      Delete
  3. வணக்கம்

    வீட்டின் பெயரும் தங்களின் வலைப்பூவின் பெயரும் நன்றாக உள்ளது..மேலும் தொடர்ந்து.. பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்ல ஃப்ளோ, தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  5. நல்ல ஃப்ளோ, தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  6. Very good work. May God bless you and your family with a life of abundance in "ஆர்கலியாழ்".

    ReplyDelete

  7. Very Nice name & naming reasons :) "Sindhana" and "Aarkaliyaal" really different and beautiful.... Wishes to u to blog more in 2014 :D

    ReplyDelete
  8. தலைமகன்
    சமர் சேந்தன் தானிருக்க
    கலைமகள்
    சிந்தனா சிந்தனையில் வளர
    ஆர்கலியாழில்....

    ஆரவாரம் பொங்கட்டும் இந்த தை திங்களில்!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி, உங்களுக்கும் தை திருநாள் வாழ்த்துகள்

      Delete
  9. கடல் போல் பரந்த இன்பம்
    அலைபோல் என்றும் பொங்கிட

    மலைபோல் உயர்ந்த மகிழ்ச்சி
    நிலையாக உன்னோடு தங்கிட

    அன்பு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. அருமையாக உள்ளது சுந்தரி....தெளிவான சிந்தனை...தீர்க்கமான வரிகள்..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete